Monday

முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள்


முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள்... அதையும் மிஞ்சும் இயற்கை மஞ்சள்!
'அரியலூர்' என்றதுமே... முந்திக் கொண்டு நம் கண்களில் அறைவது முந்திரிக் காடுகள்தான். ஆனால், அத்தகைய பூமியில் கடந்த பத்து ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியும் ஜிலுஜிலுத்துக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யம்தானே!
அரியலூர்-ஜெயங்கொண்டம் புறவழிச் சாலையில் இருக்கும் செந்துறை எனும் ஊரைச் சேர்ந்த ராமலிங்கம்தான் மஞ்சள் விவசாயத்தில் பச்சைக் கொடி பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.
பச்சைப்பசேல் என்று மஞ்சள் செடிகள் தழைத்து நிற்க, சந்தோஷமாக வளைய வந்துகொண்டிருந்தார் ராமலிங்கம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
''முந்திரிதான் இந்தப் பக்கத்துல முக்கியமான வெள்ளாமை. ஆனா, பருவம் தப்பிப் போயி, எதிர்பார்த்த மகசூல் கிடைக்கல. தொடர்ந்து இப்படி நஷ்டப்பட்டதால... வேற பயிரு பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். பிறகுதான், மஞ்சள் சாகுபடி மேல கவனம் திரும்புச்சு. சேலம் ரக மஞ்சள் நல்ல மகசூல் கொடுக்கறதோட, விலையும் நல்லபடியா கிடைக்கும்னு கேள்விப்பட்டு சேலத்துல போய் வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். இன்னிக்கு இந்தப் பகுதியில சில விவசாயிக என்கிட்ட விதைமஞ்சள் வாங்கிட்டு போயி நடவு செய்ற அளவுக்கு எனக்கு வருமானத்தைக் கொடுத்துகிட்டிருக்கு இந்த மஞ்சள்'' என்றவர், முந்திரி விளைந்த மண்ணில் மஞ்சள் விளையும் ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 800 கிலோ விதை!
செம்மண் கலந்த மணற்பாங்கான பூமியில் நன்றாக வளரக்கூடியது மஞ்சள். நல்ல வடிகால் நிலமாக இருப்பது நல்லது. வைகாசிப் பட்டம் ஏற்றது. ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய, 800 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். தேவையான கிழங்குகளை தரையில் ஒன்றாக சேர்த்து நேரடியாக வெயில்படாத பகுதியில் குவித்து வைத்து, மஞ்சள் தழை அல்லது கரும்புத் தோகையால் மூடவேண்டும். எப்போதும் ஈரம் இருக்குமாறு இந்தக் குவியலின் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போதுதான் எல்லா இடத்துக்கும் தண்ணீர் பரவி முளை கட்டும். ஒன்றரை அங்குலம் அளவுக்கு முளை வரும் வரை பதினைந்து நாளுக்கொரு தடவை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கிழங்கு நடுவதற்கு முன் அரை கிலோ காப்பர்-ஆக்ஸைடு, அரை லிட்டர் மோனோகுரோட்டோபாஸ் இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு கொப்பரையில் 50 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் மேலே சொன்ன கலவை 200 மில்லியை ஊற்றி, குச்சியால் கலக்க வேண்டும். நன்றாகக் கலக்கிய பின்பு, 200 கிலோ கிழங்கை குவியலிலிருந்து எடுத்து, கரைசலில் பத்து நிமிடம் வரை நனைத்து உலர வைக்கவேண்டும். இதேபோல் மொத்த கிழங்குகளையும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது... வேர்ப்புழுத் தாக்குதலைத் தடுப்பதோடு, விரைவாகவும் முளைத்து வரும்.

ஓரத்தில் நடக்கூடாது..!
விதைநேர்த்தி செய்யும்போதே நடவுக்கான நிலத்தை புழுதிபட உழவு செய்து, நான்கு டன் தொழுவுரத்தை இறைக்க வேண்டும். உழுத நிலத்தை மாட்டு ஏர்முனையில் மரப்பலகை பார்கட்டி இழுத்துச் சென்றால், இருபுறமும் ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி இடைவெளியில் கரை ஒதுங்கும். இப்படி வயல் முழுவதும் கரையமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இப்போது நிலமும், கரைமேடும் ஈரமாக இருக்கும். இதுதான் கிழங்கு நடுவதற்கு ஏற்ற பக்குவம். முளைத்தக் கிழங்கை, கரையின் நடுப்பகுதியில் நான்கு விரல்கடை அளவுக்கு மண்ணிலே துளையிட்டு பதிக்க வேண்டும். கரும்பு நடுவதுபோல் கரையோரத்தில் நடக்கூடாது. அப்படி நடவு செய்தால் கிழங்கை வெட்டும்போது பாதிக் கிழங்குதான் கிடைக்கும்.
நிலம் ஈரமாக இருப்பதால், தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஐந்தாவது நாள் தண்ணீர் கட்டினால் போதும். ஆறாவது நாள், முளைத்து இலையாக வெளிவரும். இலை வரும்போதே களையும் வந்துவிடும். ஆட்களை வைத்து கைக்களை எடுத்த பிறகு, ஒவ்வொரு கிழங்குக்கும் தனித்தனியாக உரமிடவேண்டும். ஏக்கருக்கு ஜிப்சம் 4 மூட்டை, டி.ஏ.பி. 2 மூட்டை, பொட்டாஷ்
2 மூட்டை, யூரியா 2 மூட்டை, வேப்பம்பிண்ணாக்கு 2 மூட்டை என்று எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, ஒவ்வொரு செடிக்குப் பக்கத்திலும் ஒரு கைப்பிடி அளவு உரத்தை வைத்து மண் அணைக்க வேண்டும். களையெடுக்கும்போது மண் சரிந்திருக்கும், அந்த மண்ணையே அள்ளி உரத்தை மூடினால் போதும்.
நடவு செய்தபின் பத்து நாளுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது மாதத்தில் இலைகள் பெரிதாக வளர ஆரம்பிக்கும் போது இலைச் சுருட்டுப்புழுவானது, இலையைச் சுருட்டிக்கொண்டு உள்ளே இருக்கும். இதனால் இலைகள் காய்ந்துவிடும். இதற்கு ஏக்கருக்கு கால் லிட்டர் மோனோ குரோட்டோபாஸ், கால் கிலோ கார்பன்டசிம் பூச்சிமருந்துடன் 120 லிட்டர் தண்ணீரில் கலந்துகொண்டு பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து 12 டேங்க் அடிக்க வேண்டும். இதைத் தெளிக்கும்போது இலையின் மேற்பரப்பு நனையுமாறு அடிக்க வேண்டும். சுருண்டிருக்கும் இலைக்குள் மருந்து சென்று புழுக்களை சாகடிக்கும்.
கருவியில் களை எடுக்கக் கூடாது..!
ஐந்தாவது மாதத்தில் மறுபடியும் ஒரு களை எடுக்க வேண்டும். இதற்கு களைவெட்டியோ, மண்வெட்டியோ வேறு கருவியோ பயன்படுத்தினால் கிழங்குகள் உடையும். அதனால் கருக்கருவாள் கொண்டு அறுத்துவிடுவது நல்லது. ஆறு மற்றும் ஏழாவது மாதங்களில் தலா ஒரு கைக்களை எடுக்க வேண்டும். இந்த இரண்டு களைகள்தான் வயலை சுத்தமாக்கி, கிழங்கை வெட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
எட்டாவது மாதத்தில் இலை சருகுபோல் காய்ந்துவிடும். இந்தத் தருணத்தில் ஊசி மண்வெட்டி கொண்டு கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டியக் கிழங்குகளை விரலி மஞ்சள், உருண்டை மஞ்சள், பனங்காலி மஞ்சள் என மூன்று விதமாக தரம் பிரிக்கலாம்.
உருண்டை மஞ்சளில் வேர் இருக்கும். அதை ஆள் வைத்து அரிவாள்மனையால் அறுத்துப் போட வேண்டும். இந்த உருண்டை மஞ்சள்தான் விதைக் கிழங்காகப் பயன்படும். அதனால் நமது விதைத் தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ள மஞ்சளை அவித்து விற்று விடலாம்.
விரலி மஞ்சளை வேகவைத்து, காய வைத்து, மெஷின் மூலம் பாலீஷ் செய்து விற்கலாம். பாலீஷ் செய்யும்போதே வேர், செதில் எல்லாம் தனியாக பிரிந்துவிடும்.
பனங்காலி மஞ்சளை அப்படியே காயவைத்தால், வற்றல்போல் இருக்கும். அதையும் விற்று விடலாம்.
இப்படி தரம் பிரிக்கும்போது விரலிமஞ்சள் 12 குவிண்டால், உருண்டைமஞ்சள் 5 குவிண்டால், பனங்காலிமஞ்சள் ஒரு குவிண்டால் என்று ஒரு ஏக்கரிலிருந்து கிடைக்கும்'' என்றார்.
இயற்கையில் இனிக்கும் மஞ்சள்!
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிவியார்பாளையத்தைச் சேர்ந்த நடராஜன். அவரிடம் பேசியபோது... ''என் வயலில் ஈரோடு ரகத்தை அரை ஏக்கரிலும், ஒரிசா என்ற வீரிய ரகத்தை ஒன்றரை ஏக்கரிலும் சாகுபடி செய்துள்ளேன். இயற்கை முறையில் மஞ்சள் விவசாயம் செய்ய நினைப்பவர்கள் நிலத்தை உழுது நவதானியங்களை விதைக்க வேண்டும். இரண்டு மாதங்கள் கழித்து மடக்கி உழவு செய்ய வேண்டும். நன்கு உழுத பின்பு விதைமஞ்சளை சூடோமோனஸில் நனைத்து நடவு செய்ய வேண்டும். முப்பது நாட்களுக்குள் இரண்டு களை எடுக்க வேண்டும். அப்போதே ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் பிண்ணாக்கை வைத்து மண் அணைக்க வேண்டும்.
நடவு செய்த இரண்டு மாதத்தில் பஞ்சகவ்யாவை 15 நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு டேங்குக்கு 300 மில்லி கலந்து ஏக்கருக்கு 15 டேங்க் அடிக்க வேண்டும். நவதானியங்களை விதைத்து மடக்கி உழவு செய்வதோடு, தொழுவுரமும் போட்டு நடவு செய்வதால், வேறு உரம் எதுவும் தேவைப்படாது.
10% கூடுதல் மகசூல்!
பூச்சித் தாக்குதலைச் சமாளிக்க இயற்கைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தினாலே போதும். இயற்கை விவசாயத்தில் செய்யும்போது மஞ்சள் தரமானதாக, விஷத் தன்மையற்றதாக இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ரசாயன முறையைவிட இயற்கை விவசாயத்தில் செலவு குறைவு. வீரியரக மஞ்சளை நடவு செய்துள்ளதால் கடந்த முறை எனக்கு விரலிமஞ்சள் 16 குவிண்டால், குண்டு மஞ்சள் 4 குவிண்டால் என மொத்தம் 20 குவிண்டால் கிடைத்தது. வீரியரகத்தில் பனங்காலிமஞ்சள் பெரும்பாலும் வருவதில்லை.
இயற்கை மஞ்சளை அதிகம் விரும்பும் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.200 முதல் 400 வரை கூடுதலாக விலை தருகிறார்கள். இயற்கை
மஞ்சள்... நன்கு பெரியதாகவும், மினுமினுப்பானதாகவும், கூடுதல் நறுமணத்துடனும் இருப்பதே வியாபாரிகள் அதிகம் விரும்பக் காரணம்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
மஞ்சள் விலை... உச்சத்தில்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4,000 முதல் 6,000 வரை விற்பனை இருந்தது. வடமாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் மஞ்சள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத துவக்க நிலவரப்படி, ஒரு குவிண்டால் விரலிமஞ்சள் குறைந்தபட்சமாக 9 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. கிழங்குமஞ்சள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய், அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் என்று விற்பனை ஆகிறது.
Source:pasumaivikatan

No comments: