பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி' நெல் சாகுபடியில் இடுபொருட்செலவுகள் ஒரு தொல்லை
என்றால், பேய்ந்தும், காய்ந்தும் கெடுக்கும் மழை மற்றொரு தொல்லை. இந்தப்
பிரச்னைகள் எல்லாம், வீரிய ரக நெல்லை பயிரிடுபவர்களைத்தான் அதிகம்
பாதிக்கிறது.
அதேசமயம், பாரம்பர்ய ரகங்களைப் பயிரிடுபவர்களை அவ்வளவாக
பாதிப்பதில்லை.
மேற்கண்ட விஷயத்தைச் சொல்லி, பாரம்பர்ய ரகங்களைப்
பயிரிடும்படிச் சொன்னால்.... 'அரிசி பெருசா... மோட்டா ரகமா இருக்கும். அதிக
விலை கிடைக்காது' என்று விலகிக் கொள்வார்கள். இந்தக் கருத்து, விவசாயிகள்
மத்தியில் பரவி இருப்பதால்தான் பாரம்பர்ய ரகங்களை அதிகளவு பயிரிடுவதில்லை.
ஆனால், இதற்கும் தீர்வாக இருக்கிறது 'சொர்ணமசூரி' என்ற பாரம்பர்ய நெல். மிக
சன்ன ரகமான இதற்கு அதிக விலை கிடைப்பதோடு, சாகுபடி செய்ய தொழுவுரம்
மட்டுமே போதும் என்பதால்... இதைப் பயிர் செய்வதில் சில விவசாயிகள் ஆர்வம்
காட்டி வருகிறார்கள்.
இணையற்ற சன்ன ரகம்!
அவர்களில் ஒருவராக, தஞ்சாவூர் மாவட்டம், பாலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், நெல் சாகுபடியில் அசத்திக் கொண்டிருக்கிறார்.
"பாரம்பர்ய
நெல்லுனாலே மோட்டாவாதான் இருக்கும்னு எல்லாரும் நினைக்கறாங்க. ஆனா,
சொர்ணமசூரி அந்தக் கருத்தைப் பொய்யாக்கிடுச்சு. எனக்குத் தெரிஞ்சவரைக்கும்
சொர்ணமசூரி அளவுக்கு வேற சன்ன ரக நெல்ல பார்த்ததே இல்லை. புதுசா
உருவாக்கியிருக்கற ரகங்கள்லகூட இந்தளவுக்கு அதிக சன்ன ரகமா இருக்குமானு
எனக்குத் தெரியல. சோறு குழையாம, நல்ல சுவையா இருக்கு. பிரியாணிக்கும்
அருமையா இருக்கு. மற்ற ரகங்களைவிட, இதுக்கு விலையும் கூடுதலா கிடைக்குது.
இது எல்லாத்தையும்விட, தொழுவுரமும், தண்ணியும் மட்டுமே போதும். வேற எந்தச்
செலவுமே தேவையில்லங்கறது... அதிசயத்துலயும் அதிசயம்"என்றவர், குவித்து
வைக்கப்பட்டிருந்த நெல்லைக் கைகளில் அள்ளிக்காட்டி, "இதுதான் அந்த
சொர்ணமசூரி"என்று சொன்னார். பொன்னிறத்தில் தகதகவென மின்னியது சொர்ணமசூரி.
"இந்த நிறத்தை
வெச்சுதான் இதுக்கு இந்தப் பேர் வந்திருக்கும்னு நினைக்குறேன். இதுல
கொஞ்சம்கூட மட்டையே இல்லாம, அரிசி நல்லா வெள்ளை வெளேர்னு இருக்கு” என்றவர்,
ஒரு கை நெல்லை எடுத்து உமி நீக்கிக் காட்டினார்.
நோய் தாக்குதல் இல்லை...!
தொடர்ந்து
பேசிய கிருஷ்ணன், "என்னோடது களிமண் நிலம். இதுலயே சொர்ணமசூரி நல்லா
வருதுனா, மத்த மண்ல இன்னும் சிறப்பாவே விளையும். இது, சம்பா, தாளடிக்கு
ஏற்ற ரகம். அந்த சமயத்துலதான் பெருமழை, காவிரியில வெள்ளம்னு வரும். ஒரு
வாரம் தண்ணி தேங்கி இருந்தாலும், பயிரை பாதிக்காது. அதேசமயம், பத்து
நாளைக்கு தண்ணீர் இல்லைனாலும் தாக்குப் பிடிக்கும்.
இதோட தண்டு நல்லா
உறுதியாவும், பயிரோட வளர்ச்சி அதிகபட்சம் நாலு அடி மட்டுமே
இருக்கறதுனாலயும், அவ்வளவு சீக்கிரம் பயிர் கீழ சாயாது. இதுக்கு நோய்
எதிர்ப்புச் சக்தியும் அதிகம். இதோட இலைகள் சொரசொரப்பா இருக்கறதுனால...
பூச்சித் தாக்குதலே இல்ல. அதனால எந்த ரசாயன உரமும், பூச்சிக்கொல்லி
மருந்தும் இல்லாமலே சிறப்பா விளையும்.
தொழுவுரம் தவிர எதுவும் தேவையில்லை!
கும்பகோணம்
பக்கத்துல இருக்கற மருதாநல்லூரைச் சேர்ந்த டேனியல்ங்கறவர்தான் எனக்கு இதை
அறிமுகப்படுத்தினார். ‘சாகுபடி செஞ்ச பிறகு இரு மடங்கா திருப்பித்
தரணும்'னு ஒப்பந்த அடிப்படையில ரெண்டு கிலோ விதைநெல்லு கொடுத்தாரு. சோதனை
முயற்சியா அரை ஏக்கர்ல ஒற்றை நாற்று நடவு முறையில சாகுபடி செஞ்சேன். 900
கிலோ மகசூல் கிடைச்சுது. தொழுவுரம் மட்டும் கொடுத்ததுக்கே இந்தளவுக்கு
மகசூல் கிடைச்சிருக்குனா... பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் எல்லாம்
கொடுத்திருந்தா... இன்னும் கூடுதலாவே மகசூல் கிடைச்சிருக்கும்"என
மகிழ்ச்சியோடு பேசிய கிருஷ்ணன், தனது சாகுபடி அனுபவத்தை விவரிக்கத்
தொடங்கினார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
அரை ஏக்கருக்கு 18 ஆயிரம்!
அரை ஏக்கரில் நடவு
செய்ய, அரை சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைத்தால் போதும். 500 கிலோ
தொழுவுரம் போட்டு, இரண்டு சால் உழவு ஓட்டிய பிறகு நாற்றங்காலில் இரண்டு
கிலோ விதையைத் தூவி, தினமும் தண்ணீர் கொடுத்து வந்தால்... 22ம் நாள்
நடவுக்குத் தயாராகி விடும். இந்த நாற்று மிகமிக மெல்லியதாக இருப்பதால்,
22-ம் நாளுக்கு முன்பாக எடுத்தால் நாற்றுகள் அறுந்துவிடும். நடவு செய்யும்
அரை ஏக்கர் நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்டி, நான்கு டன் தொழுவுரம்
போட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்டி, 30 செ.மீ. இடைவெளியில் ஒவ்வொரு
நாற்றாக நடவு செய்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இருப்பைப் பொறுத்து
தண்ணீர் பாய்ச்சலாம்.
105 நாளில் அறுவடை!
நடவிலிருந்து 25
மற்றும் 40ம் நாள் கோனோவீடர் ஓட்டி களையை அழுத்திவிட வேண்டும். வேறு எந்த
இடுபொருளும் தேவைப்படாது. பயிரின் நிறம் கரும்பச்சையாகவும், ஒரு நாற்றுக்கு
சுமார் 25 தூர்கள் வரையும் வெடிக்கும். கூடுதல் விளைச்சல்
தேவைப்படுவோர்... பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களைப்
பயன்படுத்தலாம். பூச்சி, நோய் எதுவும் இந்தப் பயிரைத் தாக்குவதில்லை.
நடவிலிருந்து 105-ம் நாள் அறுவடை செய்யலாம்’ ( இவர் 102ம் நாளே அறுவடையை
முடித்து விட்டார்)
சாகுபடி பாடம்
முடித்தவர், "எனக்கு அரை ஏக்கர்ல சுமார் 900 கிலோ மகசூல் கிடைச்சது. இது,
அதி சன்ன ரகம்கிறதாலயும், பாரம்பர்ய ரகம்கிறதாலயும் ஒரு கிலோ நெல், 25
ரூபாய்னு விலை போச்சு. இதன் மூலம் 900 கிலோவுக்கு 22,500 ரூபாய் விலை
கிடைத்தது. எல்லா செலவும் போக, 18 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சுது அதுவும்
அரை ஏக்கர்ல"என்றார் மகிழ்ச்சியுடன்.
படங்கள் கே. குணசீலன்
தொடர்புக்கு, கிருஷ்ணன்,
அலைபேசி 93627-79362
|
No comments:
Post a Comment