அள்ளிக் கொடுக்கும் அம்பை-16...
வருமானம் பெருக்கும் நாட்டுச் சம்பா...
பளிச்... பளிச்...
குறைவானத் தண்ணீரே போதும்.
உரச்செலவே இல்லை.
|
தண்ணீர்த்
தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை, கட்டுப்படியான விலை கிடைக்காமை,
சிறப்புப் பொருளாதார மண்டலம், நாற்கரச் சாலை எனப் பல்வேறு பிரச்னைகளால்
குமரி மாவட்டத்தில் நெல் பயிரிடும் பரப்பு குறைந்து கொண்டே போனாலும்,
விடாப் பிடியாக நெல்லைப் பயிரிடும் விவசாயிகளும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக தொடர்ந்து நெல் சாகுபடியில் ஈடுபட்டு
வருகிறார், செல்வகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரிலிருந்து
இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடையன்குளம்தான் செல்வகுமாரின் சொந்த
ஊர். இப்பகுதி முழுவதும் நெல் விவசாயம்தான். பெரும்பாலானவர்கள் ரசாயன
உரங்களையும் வீரிய ரகங்களையும் மட்டுமே நம்பியிருக்க செல்வகுமார் மட்டும்
நாட்டு ரகங்களைத் தேடி இயற்கை முறையில், நேரடி நெல் விதைப்பு மூலமாக
சாகுபடி செய்கிறார்.
வயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள உற்சாகமாகப் பேசத் துவங்கினார்.
செலவைக் குறைக்கும் நேரடி நெல் விதைப்பு
"நான் ஒன்றரை
ஏக்கர்ல அம்பை-16 ரகத்தையும், அறுபது சென்ட்ல நாட்டுச் சம்பா ரகத்தையும்
விதைச்சுருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன முறை விவசாயம்தான் பண்ணுனேன்.
நஞ்சில்லா வேளாண்மைச் சங்கத்துல சேந்து பயிற்சி எடுத்த பின்னாடிதான் இயற்கை
விவசாயத்தோட அருமை புரிய ஆரம்பிச்சுச்சு. அதுக்கு அப்புறமா இயற்கை
விவசாயம் பத்தி எங்க பயிற்சி நடந்தாலும், ஆர்வமா கலந்துக்குவேன்.
இப்ப முழுசா இயற்கை
விவசாயத்துக்கு மாறி நாலு வருசமாச்சு. நான் எப்பவுமே நேரடி விதைப்பு
முறையிலதான் நெல் சாகுபடி செய்வேன். இந்த முறையில செய்யுறப்ப நாற்றங்கால்
அமைக்குற செலவு மிச்சமாகுறதோடு வேலையும் குறையுது. அம்பை அறுவடை ஆயிடுச்சு.
ஒன்றரை ஏக்கர்ல
3,500 கிலோ மகசூல் கிடைச்சது.
நாட்டுச் சம்பாவை இன்னும்
கொஞ்ச நாள்ல அறுவடை
பண்ணிடுவேன். 60 சென்ட் நிலத்துல குறைச்சு வெச்சாலும் 1,200 கிலோ வரைக்கும்
மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்று முன்னுரை கொடுத்த
செல்வகுமார், சாகுபடி முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். அதை அப்படியே
பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
காய்ச்சலும், பாய்ச்சலும்...களையைக் கட்டுப்படுத்தும் அம்பை-16 நெல்லின் வயது
105 நாட்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆனி, ஆடி மாதங்களில் மழை
கிடைப்பதால், நேரடி விதைப்பு செய்பவர்கள் இந்த மாதங்களிலும், மற்ற
பகுதிகளில் மழைக்காலத்தை கணித்தும் விதைப்பது நல்லது. நேரடி விதைப்பு
முறையில் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 40 கிலோ விதைநெல் தேவைப்படும்.
அம்பை-16 ரகத்தை
நடவு செய்யும் நிலத்தில் இரண்டு சால் உழவு செய்து மண்ணைப் புழுதியாக்கிக்
கொள்ள வேண்டும். பிறகு, ஆறு டன் தொழுவுரம், மட்கிய இலை தழைகளைப் போட்டு
மறுபடியும் இரண்டு உழவு ஓட்ட வேண்டும். இறுதியாக இரண்டு உழவு ஓட்டி
நேரடியாக விதைத்து விட வேண்டும்.
மழைக்காலத்தில்
விதைப்பதால், விதைத்த உடன் தண்ணீர் கொடுக்க வேண்டியதில்லை.
விதைத்ததிலிருந்து 30 நாட்கள் வரை அவ்வப்போது பெய்யும் மழை நீரை வைத்து
பயிர், காய்ச்சலும் பாய்ச்சலுமாக வளரும். இதனால் களைகள் அதிகமாக மண்டாது.
30-ம் நாளுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சலாம். மழை குறைவாக இருந்தால், 20-ம்
நாளே கூட தண்ணீர் பாய்ச்சலாம்.
பூச்சிகளைத் துரத்தும்
புகையிலைச் சாறு
பயிரில்
அடர் பசுமை நிறம் இருக்காது என்பதால் பூச்சிகளும் அதிகம் தாக்காது.
தண்ணீர் பாய்ச்சிய ஒரு வாரத்தில் ஒரு களையும், ஒரு மாதம் கழித்து, அடுத்த
களையும் எடுக்க வேண்டும். நேரடி விதைப்பில் பயிர்கள் நெருக்கமாக வளர்ந்து
நிற்கும் என்பதால், முதல் களை எடுக்கும்போது மிகவும் நெருக்கமாக இருக்கும்
நெல் பயிர்களை தேவைக்கேற்ப கழித்துவிட வேண்டும். ஒன்றரை கிலோ வேப்பம்
பிண்ணாக்கு, ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், இரண்டு மூட்டை ஆட்டுச்சாணம்
ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று தினங்கள் சாக்கில் கட்டி வைத்திருந்து
40-ம் நாளில், வயலில் தூவவேண்டும். 65 முதல்
70 நாட்களுக்குள் 2 கிலோ உயிர் உரம்; 30 கிலோ கடலைப் பிண்ணாக்கு; 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர்; 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு;
50 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இடவேண்டும்.
அம்பை-16 ரகத்தைப் பொறுத்தவரை தத்துப் பூச்சி, கதிர்நாவாய்பூச்சி, மற்றும் தண்டுப் புழுத் தாக்குதல் இருக்கும். அந்த நேரத்தில்
150 லிட்டர்
தண்ணீரில் ஒரு லிட்டர் வேப்பெண்ணெயைக் கலந்துத் தெளிக்கலாம். அல்லது
வெள்ளைப்பூண்டுச் சாறு; புகையிலைச் சாறு இரண்டையும் தலா அரை லிட்டர்
எடுத்துக் கொண்டு 150 லிட்டர் தண்ணீரில் கலந்தும் தெளிக்கலாம். 105-ம்
நாளில் பயிரை அறுவடை செய்யலாம். குறைந்தபட்சம் ஏக்கருக்கு
30 மூட்டை (75கிலோ) நெல் கிடைக்கும். ஒரு கிலோ நெல்லுக்கு 15 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
கிலோவுக்கு 17 ரூபாய்
நாட்டுச் சம்பா 6
மாதப் பயிர். நேரடி விதைப்பு செய்யும் போது ஏக்கருக்கு 40 கிலோ விதைநெல்
தேவைப்படும். பாசனம், பராமரிப்பு அனைத்தும் அம்பை-16 ரகத்துக்கு செய்தது
போலவே செய்ய வேண்டும். ஆனால், அம்பை-16 ரகம் போல் இரண்டு தடவை உரமிடத்
தேவையில்லை. 40-ம் நாள் மட்டும் இயற்கை உரமிட்டால் போதும். இது நாட்டுரகம்
என்பதால், பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது. அப்படி
ஏதேனும் தாக்குதல் வந்தால், ஏக்கருக்கு ஐந்து கிலோ சாம்பல், 3 கிலோ
சிப்பிச் சுண்ணாம்பு (கிளிஞ்சல் தூள்), முக்கால் கிலோ உப்பு, முக்கால் கிலோ
மிளகாய் தூள் ஆகியவற்றைக் கலந்து தூவினால், சரியாகி விடும். 180 நாட்களில்
பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும்.
சாகுபடிப் பாடத்தை
முடித்த செல்வகுமார் நிறைவாக, " போன தடவை 55 சென்ட் நிலத்தில் நேரடி
விதைப்பில் நாட்டுச் சம்பா விதைத்ததில் 1,200 கிலோ மகசூல் கிடைச்சது. இந்த
தடவை 60 சென்டில் விதைத்திருக்கிறேன். கூடுதல் மகசூல் கிடைக்கும்னு
எதிர்பாக்குறேன். இப்போதைக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபாய் விலை கிடைக்குது.
மொத்தத்தில் ரசாயன விவசாயம் செய்றதை விட குறைவான செலவுல நிறைவான மகசூல்
கிடைக்குது" என்றார், உற்சாகம் பொங்க.
தொடர்புக்கு, செல்வகுமார்,
அலைபேசி 94864-72459
Source:pasumaivikatan
|
No comments:
Post a Comment