Wednesday

இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!

இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!

மகசூல்
ஆர்.குமரேசன்
காய்ப்புழுவை விரட்ட கலப்புப் பயிர்...
இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!


கூட்டமைப்பு வர்த்தகத்தில் கூடுதல் லாபம் !
காய்ப்புழு... பருத்தி விவசாயிகளைக் குலை நடுங்க வைக்கும் வில்லன். இந்தக் காய்ப்புழுக்கள், மகசூல் வரும் நேரத்தில் காயைச் சேதப்படுத்தி மகசூலுக்கு மங்கலம் பாடிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பி.டி. தொழில்நுட்பம் காய்ப்புழுக்களுக்கு எதிராக பருத்தியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சமீபத்தில் பி.டி. பருத்தியிலும் தங்களது தாக்குதலைத் தொடுத்திருக்கும் காய்ப்புழுக்களைக் கண்டு விவசாயிகள் மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளே கதிகலங்கிப் போயுள்ளனர்.
ஆனால், காய்ப்புழுவைப் பற்றிய கவலையோ அச்சமோ சிறிதும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பருத்தியை விளைவித்து வருகிறார்கள் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த அரசப்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள். இந்தப் பகுதிகளில் இதுவரை காய்ப்புழுத் தாக்குதலே இல்லை என்பதுடன் வேறு எந்தப் பூச்சியும் தாக்குவதில்லை என்பதால், இங்கு பருத்திக்குப் பூச்சிக்கொல்லியே தெளித்ததில்லையாம்.
ஆச்சர்யமாக இருக்கிறதா...? இதற்குக் காரணம், பாரம்பர்ய முறையில் கலப்புப் பயிராக பருத்தியை சாகுபடி செய்வதுதான். அதைவிட ஆச்சர்யமான விஷயம் இந்தப் பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து தாங்கள் விளைவிக்கும் பருத்தியை மதிப்புக்கூட்டி பஞ்சாகவும், நூலாகவும், ஆடையாகவும் மாற்றி விற்பனை செய்து வருகிறார்கள்.
மதுரை-விருதுநகர் சாலையில் திருமங்கலத்தை அடுத்துள்ள சமத்துவபுரத்துக்கு எதிராகச் செல்லும் சாலையில் இருக்கின்றன அரசப்பட்டி, சுற்றுவட்டார கிராமங்கள். மானாவாரி கரிசல் நிலங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பருத்தியைத் தவிர வேறு பயிர் இல்லை. வயல்களில் ஆங்காங்கே பெண்கள் களையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அரசப்பட்டியில் உள்ள தனது வயலில் இருந்த சேவையூர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவரான, தண்டித்தேவரைச் சந்தித்தோம்.
‘‘இது மழையை நம்பி கிடக்கற மானாவாரி கரிசக்காடு. காலங்காலமா இதுல பருத்தியைத்தான் விதைக்கிறோம். இது மானாவாரியா இருந்தாலும், மண்ணு கரிசலா இருக்குறதால பெய்ற மழையை மண்ணு பிடிச்சு வெச்சுக்கும். அந்தந்த வருஷம் பெய்ற மழையைப் பொறுத்து வருமானம் முன்ன பின்ன இருக்கும். அரசப்பட்டி, வெயிலுகந்தபுரம், வலையங்குளம், காமாட்சிபுரம், குளத்துவாய்ப்பட்டினு சுத்துப்பட்டு முழுக்க மூவாயிரம் ஏக்கராவுல பருத்தி விளையுது. மதுரையில இருக்கிற சி.சி.டி. தொண்டு நிறுவனம் எங்கப் பகுதி பருத்தி விவசாயிகளை ஒண்ணு சேத்து, ஒரு கூட்டமைப்பை உருவாக்குனாங்க.
இந்தக் கூட்டமைப்புல கிட்டத்தட்ட 300 விவசாயிக உறுப்பினரா இருக்காங்க. இந்தக் கூட்டமைப்பு உருவாகுறதுக்கு முன்ன, எங்க பருத்தியை திருமங்கலத்துக்குக் கொண்டு போயி, விப்போம். வியாபாரிக எடையில தில்லுமுல்லு செஞ்சிடுவாங்க. போக்குவரத்துச் செலவு, எடையில வில்லங்கம்னு பல சங்கடங்களை சந்திச்சோம்.
ஆனா, கூட்டமைப்பு உருவான பிறகு, உள்ளூர்லயே கூட்டமைப்பு சார்பா பருத்தியைக் கொள்முதல் செய்றதால போக்குவரத்துச் செலவு இல்லை. விவசாயிகளே எடை போட்டு கொடுக்குறதால எடையில வில்லங்கம் இல்லை. பருத்திய போட்டவுடனே பணம் கிடைச்சிடும்.
முழுப்பலனும் எங்களுக்கே!
எங்க கூட்டமைப்புல இருக்கிற எல்லா விவசாயிகளும் முழுக்க முழுக்க இயற்கை முறையிலதான் பருத்தியை விளைய வெக்குறாங்க. கூட்டமைப்பு உருவான பிறகு, பருத்தியை அப்படியே விக்காம, நூலாவும், துணியாவும் மாத்தி வித்தா கூடுதல் வருமானம் கிடைக்கும்னு சொல்லி அதுக்கான ஏற்பாடுகளை டிரஸ்டுல இருந்து செஞ்சிக் கொடுத்தாங்க.
ஆரம்பத்துல விருதுநகர்ல ஒரு மில்லுல எங்க பருத்தியைக் கொடுத்து விதை நீக்கி பஞ்சாக்கினோம். பிறகு, அந்தப் பஞ்சை திண்டுக்கல் காந்தி கிராமத்துல கொடுத்து நூலா மாத்தி, கைத்தறித் துணியா மாத்துனோம். அதுக்கு நல்ல கிராக்கி இருந்ததைத் தெரிஞ்சுகிட்டோம். உடனே வத்தலகுண்டு பக்கத்துல ஒரு கைத்தறிக் கூடத்தைக் கேட்டு வாங்கி, அங்க நெசவு செஞ்சுக்கிட்டு இருக்கோம்.
டிரஸ்ட் மூலமா சேவையூர்ல ஒரு சின்ன ஸ்பின்னிங் மில் போட்டு இருக்காங்க. இப்ப அங்க கொடுத்து நெஞ்சுகிட்டு இருக்கோம். ஆனா, அதுல ஒரு நாளைக்கு 20 கிலோ நூல் தான் நூற்க முடியும். அதனால, தினமும் 500 கிலோ நூல் நூற்குற அளவுக்கு ஒரு ஸ்பின்னிங் மில் அமைக்குற வேலையில இருக்கோம். இந்த மில் டிசம்பருக்கு மேல இயங்கும். இந்த மில்லுக்கு எங்க கூட்டமைப்புல இருக்குற 300 விவசாயிகதான் முதலாளிக. இன்னும் ஆறு மாசத்துல முழுவீச்சுல எங்க கூட்டமைப்பு பேர்ல துணியைத் தயாரிச்சு விக்கத் தொடங்கிடுவோம். அப்பதான் நாங்க விளைய வெக்குற பருத்தியோட முழுப்பலனும் எங்களுக்குக் கிடைக்கும்" என்றார், மகிழ்ச்சியுடன்.
தொழுவுரத்துக்கு பதில் ராக்-பாஸ்பேட்!
கூட்டமைப்பின் செயலாளரான சுப்பிரமணியன், ‘‘இந்தப் பகுதியில பூச்சி நோய் தாக்காம இருக்க முக்கியமானக் காரணம், ஆயிரக்கணக்கான ஏக்கர்ல எல்லாரும் ஒரே மாதிரி பயிர் செய்றதுதான். (ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு) நாங்க புதுசா எதுவுமே செய்யல. பாரம்பர்யமா எங்க முன்னோர்கள் செஞ்ச முறையில விவசாயம் செய்றோம்" என்றவர், மானாவாரி நிலத்தில் பருத்தியை சாகுபடி செய்யும் முறையைப் பற்றி விளக்கினார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சாகுபடி செய்யும் நிலத்தில் சித்திரை மாதம் கோடை உழவு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஆடி மாதத்தில் மழை பெய்தவுடன் இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி சட்டிக் கலப்பை மூலமாக மண்ணைப் புரட்டி விட்டு, கலப்பை மூலமாக உழுது மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். தொழுவுரம் கிடைக்காதவர்கள், கடைசி உழவுக்கு முன்பாக ராக்-பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ ராக்-பாஸ்பேட்டுடன், தலா இரண்டு கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், டிரைகோடெர்மாவிரிடியைக் கலந்து இறைக்கலாம் (இந்த பகுதிகளில் மாடுகள் குறைவாக இருப்பதால், ராக்-பாஸ்பேட்டைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்).
கலந்து விதைத்தால், கஷ்டம் வராது!
மானாவாரி கரிசலில் நல்ல மழை பெய்தபின்தான் விதைக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஈரத்திலேயே விதை முளைத்து வந்துவிடும். அடுத்தடுத்த மழையில் பயிர் வளர்ந்துவிடும். பருத்தியைத் தனிப்பயிராகச் செய்யாமல், பாசிப் பயறு, உளுந்து, தட்டைப் பயறு, மொச்சை, கேழ்வரகு, சோளம், துவரை என பல விதைகளுடன் ஒன்றாகக் கலந்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதால் பூச்சிகள், நோய்கள் தாக்காது (இந்தப் பகுதிகளில் கருங்கண்ணி ரகத்திலிருந்து உருவாக்கப்பட்ட நாட்டு ரகமான எல்.ஆர்.ஏ ரக பருத்தியைத் தான் பெரும்பாலும் விதைக்கிறார்கள்).
பருத்திதான் பிரதானப் பயிர் என்பதால், ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பருத்தி விதை, 3 கிலோ பாசிப் பயறு, 2 கிலோ உளுந்து, 2 கிலோ தட்டைப் பயறு, 3 கிலோ மொச்சை, 1 கிலோ கேழ்வரகு, 1 கிலோ சோளம் விதைகளை ஒன்றாகக் கலந்து விதைத்து விடவேண்டும். வயலின் நான்கு பக்கமும் வரப்பு ஓரமாக முக்கால் அடி இடைவெளியில் மூன்று வரிசையாக துவரையை விதைக்க வேண்டும். இதற்கு அதிகபட்சம் 5 கிலோ விதை தேவைப்படும்.
வயலின் மூலைகள், அதிக நாட்கள் ஈரம் தங்கி இருக்கும் இடங்களில் வீட்டுத் தேவைக்காக வெண்டை, சுரை, பூசணி மாதிரியான விதைகளை ஆங்காங்கே தூவி விடலாம்.
மானாவாரியில் ஏக்கருக்கு 6,000!
விதைத்த 21-ம் நாள் முதல் களை எடுத்து விடவேண்டும். அடுத்ததாக 40, 80-ம் நாட்களில் அடுத்தடுத்து களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு களை எடுத்து முடித்தவுடன் பயிர் வளர்ச்சிக்காக பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். (பஞ்சகவ்யாவை சில பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் எதையுமே தெளிப்பதில்லை) கலப்புப் பயிராக விதைக்கும்போது, ஒரு பருத்திச் செடியை தாக்கும் புழுக்கள், பூச்சிகள் அடுத்த பயிருக்கு தாவும்போது அதன் தன்மையும், சுவையும் மாறியிருப்பதை கண்டு, அடுத்த பயிருக்குத் தாவும். அதில் வேறொரு சுவை இருப்பதை கண்டு ஒவ்வாமை ஏற்பட்டு திரும்பவும் வயல் பக்கம் எட்டியே பார்க்காது. கலப்புப் பயிராக விதைப்பதால், கிடைக்கும் நன்மைகளில் இது முக்கியமானது.
உளுந்தை 65 முதல் 70 நாட்களுக்குள் வேரோடு பறித்து விடவேண்டும். 80 நாட்களுக்குள் பாசிப்பயறு, தட்டைப்பயறு, 90 நாட்களுக்குள் மொச்சை அறுவடையும் முடிந்துவிடும். பாசிப்பயறு, மொச்சையில் காய்களை அறுவடை செய்தவுடன் செடிகளைப் பறித்து வயலிலேயே மூடாக்காகப் போட்டுவிடலாம்.
ஏறத்தாழ 100-ம் நாளில் பருத்தியும் துவரையும் மட்டுமே வயலில் இருக்கும். 110-ம் நாள் முதல் 200 நாள் வரை பருத்தியை அறுவடை செய்யலாம். இடையில் மழை கிடைத்தால், கூடுதலாக 90 நாட்கள், அதாவது 290 நாட்கள் வரை மகசூல் எடுக்கலாம். துவரையை 160-ம் நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம். கேழ்வரகு, சோளத்திலிருந்து பெரிதாக மகசூல் கிடைக்காது. கிடைப்பதை வீட்டுத் தேவைக்கு வைத்துக் கொள்ளலாம்.
ஒரு ஏக்கரிலிருந்து 50 கிலோ உளுந்து, பாசிப்பயறு 200 கிலோ, மொச்சை 100 கிலோ, தட்டைப்பயறு 50 கிலோ, துவரை 100 கிலோ, பருத்தி 200 கிலோ கிடைக்கும். இந்த முறையில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யும்போது 6,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்" என்றார்.
தற்சார்புடன் வாழ வழி செய்கிறோம்!
இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய சி.சி.டி. நிறுவனத்தின் இயற்கைப் பருத்தி திட்ட மேலாளர் தட்சிணாமூர்த்தி, "விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல், அதேநேரத்தில் மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும்போதுதான் கூடுதல் வருமானம் பெற்று தற்சார்புடன் வாழ முடியும். அதற்கானப் பயிற்சிகள், ஆலோசனைகள், பொருளாதார உதவிகளை எங்கள் அமைப்பு செய்து கொடுத்து வருகிறது.
ஏற்கெனவே எங்கள் அமைப்பு மூலம் மூலிகை, மிளகாய், மா விவசாயிகளுக்கானக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதி விவசாயிகளைப் பொறுத்தவரை பாரம்பர்யமாக இயற்கை விவசாயத்தைச் செய்து வருகிறார்கள். வசதி படைத்த ஒரு சிலர் மட்டும், அடியுரமாக டி.ஏ.பி. யூரியாவை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மற்ற எந்த ரசாயனத்தையும் பயன்படுத்துவதில்லை. எனவே இந்தப் பகுதி விவசாயிகளைத் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை மட்டுமே நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம்.
தற்போது பருத்தியில் இவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை இருமடங்காக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மதிப்புக் கூட்டி விற்கும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதன் முழுப்பலனும் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
இந்தக் கூட்டமைப்புக்குத் தொழில்நுட்பம், ஆலோசனை, ஆரம்பக் கட்ட பொருளாதார உதவி மட்டுமே எங்கள் அமைப்பு வழங்கும். மற்றபடி கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகளே கூடி அவர்களுக்குள் சிலரை பொறுப்பாளர்களாக தேர்வு செய்வார்கள்.
பருத்திக்கு உரிய பணம் போக லாபமாக வரும் தொகை கூட்டமைப்பின் பெயரில் வங்கியில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தை தலைவர், செயலாளர் இருவரும் கையெழுத்து போட்டால் மட்டுமே எடுக்க முடியும். கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளில் நாங்கள் தலையிட மாட்டோம். கூட்டமைப்பு மூலமாக விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. இன்னும் கூடுதல் வருமானத்துக்காக நூல், துணி என அடுத்தக் கட்டத்துக்கு இந்தக் கூட்டமைப்பு நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை விற்பனை செய்வதற்காக ஒரு வியாபார முத்திரையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கூட்டமைப்பில் உள்ள விவசாயிகள் ஒரு நூற்பாலைக்கு உரிமையாளர்களாக இருப்பார்கள்" என்றார்.
படங்கள் என்.ஜி. மணிகண்டன்
தொடர்புக்கு, தட்சிணாமூர்த்தி, அலைபேசி 96267-37207
Source:pasumaivikatan

No comments: