Wednesday

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

மகசூல்
என்.சுவாமிநாதன்
6 சென்ட் குளம்... 10 மாதம்... 30 ஆயிரம்!

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

ஏக்கர் கணக்கில் குளமும் செழிப்பான தண்ணீர் வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்' என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், "ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும்... விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்'' என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா.
சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது, இந்த மையம். விரால்மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்தவகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதிஉதவியோடு... 'விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல்' போன்றவைகளைச் செயல்படுத்தி வருகிறது இம்மையம்.
விராலுக்கு கிராக்கி அதிகம்!
மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம், "பொதுவா மீன் வளர்க்கறவங்க கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை... மாதிரியான ரகங்-களைத்தான் வளர்க்கறாங்க. விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை மாதிரியான மீன்களுக்கு நல்ல தேவை இருக்கு. குறிப்பா... விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால... நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க.
இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது.
பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை 'பாம்புத் தலை மீன்'னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற பத்து ரகங்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால... தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும், அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால... திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க'' என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.
கிலோ 250 ரூபாய்!
"ஒரு விரால் மீனுக்கு... எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சுகளை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா... ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும்கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா... விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.
ஒரு சென்ட் குளத்தில் கூட வளர்க்கலாம்!
விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டிதான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்கு-றோம்'' என்று சொன்னார்.
அடுமனையிலிருந்து விரால் மீனுக்கு!
இந்த மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிமை சந்தித்தோம்.
"எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தப்போதான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன்.
நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பிச்சுட்டேன். ஆறு சென்ட் அளவுல மூணு குளம், ஏழு சென்ட் அளவுல ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன். நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கு'' என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
தனித்தனிக் குளம் அமைத்தால்
தொடர் வருமானம்!
நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல்... நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வெண்டும்.
ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மூன்று மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையும் குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும்.
மூன்றரை அடி குளம்... மூன்று அடிக்கு தண்ணீர்!
மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆறு சென்டுக்கு 500 குஞ்சு!
குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால்... இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும்.
பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத்தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும்.
தீவனத்தில் கவனம்!
இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும் (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
நோய்கள் தாக்காது!
நோய்களும் பெரிதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்து விற்பனைக்குத் தயாராகி விடும்.
அலையாமலே விற்கலாம்!
நிறைவாக விற்பனை பற்றி பேசிய இப்ராஹிம், "நாம எங்கயும் அலைய வேண்டியதில்லை. நம்மகிட்ட மீன் இருக்கறது தெரிஞ்சாலே... வியாபாரிங்க தேடி வந்துடுவாங்க. எனக்கு நாலு குளம் இருக்கறதால... மூணு மாசத்துக்கு ஒரு தடவை மீன்களை விற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். குளம் வெட்டுற செலவும் ஒரே ஒரு முறைதான். கொஞ்சம் அனுபவம் வந்துட்டா... குஞ்சுகளையும் வெளிய வாங்க வேண்டியதில்லை. நல்ல ஆண், பெண் மீன்களை எடுத்து தனியா சிமென்ட் தொட்டியில விட்டு, ஹார்மோன் ஊசி போட்டு முட்டையிட வெச்சு நாமளே குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக்கலாம்.
பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம்னா ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வெச்சா... சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்-னா வலைகள் போட்டு பறவைகள்ட்ட இருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான் லாபம் கிடைக்கும்.
ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டா... 300 மீன்கள் கண்டிப்பா வளர்ந்துடும். நல்லா பராமரிச்சா 450 மீன்கள் வரைகூட தேத்திடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இருந்து 300 கிலோ மீன் வரைக்கும் அறுவடையாகும். குறைஞ்சபட்சமா 200 கிலோனு வெச்சுக்கிட்டாலே... கிலோ 250 ரூபாய்ங்கிற கணக்குல பத்து மாசத்துல 50,000 ரூபாய்க்கு வித்துடலாம். எல்லாச்செலவும் போக
30,000 ரூபாய் வரை கண்டிப்பா லாபம் கிடைக்கும்'' என்றார் உற்சாகமாக!
‘இப்படித்தான் தயாரிக்கணும் தீவனம்!'
மைதா மாவு 750 கிராம்
அரிசி மாவு 750 கிராம்
கிழங்கு மாவு 750 கிராம்
கருவாட்டுத்தூள் 250 கிராம்
இவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டுப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொண்டு, இரண்டாகப் பிரித்து ஒரு பாகத்தை காலையிலும்... மீதியை மாலையிலும் குளத்தில் பரவலாகப் போட வேண்டும். இது ஆறு சென்ட் அளவான குளத்திலிருக்கும் 500 மீன்களுக்கான உணவு. ஒரு மீனுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற கணக்கில் இந்தத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 20 நாள் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 1 கிராம் கொடுத்தால் போதும்.
கோழிக் கழிவுகளுக்கு அளவு கிடையாது. மீன்கள் சாப்பிடும் அளவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம். குளத்தில் தேங்கினால், துர்நாற்றம் வீசும் என்பதால், சாப்பிடும் அளவுக்கு மட்டும் கொடுப்பது நல்லது. முட்டைகள் கொடுக்க ஆரம்பித்த பிறகு, 500 மீன்களுக்கும் ஒரு நாளைக்கு 5 முட்டை என்ற கணக்கில் கொடுக்க வேண்டும்.
அடர்தீவன தயாரிப்பு!
நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப், மீன் வளர்ப்பு பற்றி சொல்லும்போது, "முட்டைகளை வேகவைத்துக் கொடுக்கும்போது வெள்ளைக்கருவை மட்டும்தான் கொடுக்க வேண்டும். கோழியின் கல்லீரல்கள், மாட்டு ரத்தம் ஆகியவற்றைக்கூட வேக வைத்துக் கொடுக்கலாம். அவ்வப்போது குளத்தில் உள்ள சில மீன்களைப் பிடித்து எடை பார்த்து ஒரு மீனின் சராசரி எடையைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மீனின் எடையில் 5 சதவிகித அளவுக்கு ஒரு மீனுக்கு தினசரி தீவனம் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு மீனின் எடை 100 கிராம் என்றால், அதற்கு ஒரு நாளைக்கு 5 கிராம் தீவனம் கொடுக்க வேண்டும்’’ என்று சொன்னார்.
ஷெரீப் சொல்லும் அடர்தீவன தயாரிப்பு முறை.

கோழிக் கழிவுகள் 7 கிலோ
கழிவு மீன்கள் 1 கிலோ
மீன் கழிவுகள் 500 கிராம்
சோயா மாவு 500 கிராம்
கிழங்கு மாவு 500 கிராம்
சூரியகாந்தி எண்ணெய் 500 கிராம்
இவற்றை ஒன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுக்கலாம். இந்தத் தீவனம் தயாரிப்பதற்கு ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வரை செலவாகும்.
Source:pasumaivikatan

No comments: