ஏக்கருக்கு 42 மரங்கள்.
இடுபொருட்களே தேவையில்லை.
களையெடுக்கும் கால்நடைகள்.
காவேரிராஜபுரம்... அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் பெரிய அளவு இல்லை. அதேகதைதான் இங்குள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களிலும். ஆனால், 'லியோ இயற்கை வேளாண் பண்ணை'யில் மட்டும் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம்... ''முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே நான் பராமரிக்கறதுதாங்க'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார், பண்ணைக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான பாரதி!
தோட்டத்துக்குள் நடைபோட்டால்... அடுத்தடுத்து ஆச்சரியங்கள் நம்மைத் தாக்கி, விழிகளை விரிய வைக்கின்றன. ஆம்... பண்ணைக்குள் நுழைபவர்களை, உள்ளே இருப்பவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒளிப்படக் கருவிகள் (குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்); வேலியிலிருக்கும் முள்செடிகளை கவாத்து செய்து கொண்டிருக்கும் ராஜஸ்தான் ஒட்டகம்; மாம்பழங்களைச் சுமந்துச் செல்லும் கழுதைகள்; தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக பராமரிக்கப்படும் குதிரைகள், சுதந்திரமாக மேய்ந்துக் கொண்டிருக்கும் செம்மறி, ஜமுனாபாரி உள்ளிட்ட வகைவகையான ஆட்டுக் கூட்டம்; பழத்தோட்டத்தில் உள்ள களைகளை காலி செய்து கொண்டிருக்கும் வாத்துகள், வான்கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகள்; இயற்கை இடுபொருட்களைத் தருவதற்கென்றே வளர்க்கப்படும் காங்கிரேஜ், தார்பாக்கர் உள்ளிட்ட நாட்டுஇன மாடுகள்... என திரும்பிய பக்கமெல்லாம் ஆச்சரியம்தான்!
மாட்டு எரு மட்டும்தான் மாங்கன்னுக்கு!
''இது, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை. என் தம்பி சரவணனுக்கும் இந்தப் பண்ணையில ரொம்ப ஆர்வம் உண்டு. அதனலதான் 12 வருஷத்துல இந்த அளவுக்கு இதை நாங்க வளர்த்தெடுத்திருக்கோம். ஐ.டி.ஐ. படிச்சிட்டு, ஆட்டோமொபைல் வேலை செய்துக்கிட்டு இருந்தேன். அதுல வருமானம் இருந்தாலும், போதுமான அளவுக்கு மனநிறைவு கிடைக்கல. அந்த நேரத்துலதான் இந்த நிலத்தை வாங்கினோம். நிலத்தை யார் பராமரிக்கறதுனு கேள்வி வந்தப்ப... நானே பொறுப்பை ஏத்துக்கிட்டேன். கல்லும், கரடுமாக் கிடந்த இடத்தை சரி செஞ்சி, மாஞ்செடி நட்டு வெச்சோம். ஆரம்பத்துல குடத்துல தண்ணி எடுத்து ஊத்தித்தான் மாங்கன்னை காப்பாத்தினோம். செடி நடும்போது, 'மாட்டு எரு மட்டும் போட்டா போதும்’னு சொன்னாங்க. அதைத்தான் செஞ்சோம். ஆனா, இயற்கை விவசாயம்கிறத பத்தி எதுவுமே அப்ப எங்களுக்குத் தெரியாது.
நோய்களுக்கு காரணம் ரசாயனம்!
எங்களுக்கு ஒரு அண்ணன் உண்டு. தோட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்க... அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப... 'அது, வேலை செய்யல, இது வேலை செய்யலை’னு சொல்லி எல்லாத்துக்கும் ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. ஆனா, அவரைக் காப்பாத்த முடியல. ஆஸ்பத்திரியில இருந்தப்ப...
'இப்பல்லாம் இப்படி கண்ட கண்ட நோய்ங்க ஆட்டிப் படைக்குது. இதுக்கெல்லாம் காரணமே விவசாயத்துல பயன்படுத்துற ரசாயன உரம், பூச்சிக்கொல்லிங்கதான்’னு டாக்டருங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன்.
அதுக்குப் பிறகுதான், 'ஏற்கெனவே நாம ரசாயனம் எதையும் பயன்படுத்தல... இனியும் துளிகூட ரசாயனத்தைத் தோட்டத்துல போட்டுடக்கூடாது’னு முடிவு செஞ்சேன். அத்தோட... இயற்கை விவசாயத்தைப் பத்தி தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர்... போன்றவங்களோட பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டேன். இயற்கையை எப்படி அணுகறதுங்கற வித்தையை இந்த ரெண்டு பேருகிட்டத்தான் முழுசா கத்துக்கிட்டேன்'' என்று சொல்லும் பாரதி, தற்போது தன்னுடைய தோட்டத்து மாமரங்களுக்கு இடுபொருட்கள் என்று எதையுமே கொடுப்பதில்லை!
எந்த இடுபொருளும் கொடுக்க வேண்டாம்!
''மாட்டு எரு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு எல்லாத்தையும் ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். இப்போ எதையுமே பயன்படுத்துறது இல்லை. அதுக்குக் காரணம்... திருவண்ணாமலையில நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புதான். சுபாஷ் பாலேக்கர் ஐயாகிட்ட, என் பண்ணையோட போட்டோக்களைக் காட்டினேன். 'ரொம்ப நல்லா இருக்கு, மண்ணுல நுண்ணுயிரும், மண்புழுவும் வளர்ந்துட்டா எந்த இடுபொருளும் கொடுக்க வேணாம். நீங்க சொல்றத வெச்சு பார்க்கறப்ப... ஏறத்தாழ உங்களோட பண்ணையில நுண்ணுயிர்களும், மண்புழுவும் வேலை செய்ய தொடங்கிடுச்சி போல’னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே என்னோட பண்ணையில எந்த இடத்துல தோண்டினாலும் மண்புழுவைப் பார்க்க முடியும். அதனாலயே இடுபொருள்னு எதையும் கொடுக்கத் தேவையில்லங்கற முடிவுக்கு வந்தேன்'' என்ற பாரதி... ''இதோ பாருங்க... மண்புழுங்க, தோட்டம் முழுக்க உரத்தை தள்ளியிருக்கறத...'' என்றபடியே குஷியோடு சுட்டிக்காட்டிவிட்டு,
எங்கள் குலதெய்வம் மண்புழு!
''இந்த மண்புழுங்க தோட்டம் முழுக்க இப்படி வேலை செய்றதால... பூமி முழுக்க ஓட்டை ஓட்டையா இருக்கு. இதனால வேர்களுக்கு அப்பப்ப காத்துப் போறதோட... மழை பெஞ்சா சொட்டு தண்ணிகூட வீணாகாமா நிலத்துல இறங்கிடுது. இப்படி இயற்கை உரத்தையும் கொடுத்து, மழைநீரையும் அறுவடை செய்யறதுக்கு உதவியா இருக்கற மண்புழுவை குலத்தெய்வம் கணக்காக நாங்க கும்பிடுறோம்'' என்று கையெடுத்துக் கும்பிட்டார் பாரதி.
இரண்டே வேலையாட்கள்!
அருகில் இருந்த மா மரத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதில் செந்தூரா மாம்பழத்தைப் பறித்து சுவைக்கச் சொன்னார். அலாதியான அந்தச் சுவையும் மணமும்... வீட்டுக்குப் பின்புறத்தில், யாருமே உரம் போடாமல் வளர்ந்திருந்த ஒற்றை மாமரத்தில், சின்னவயதில் ஏறிப் பறித்துச் சாப்பிட்ட பழத்தின் நினைவு வந்து மோதியது!
''இயற்கை உரமோ, பூச்சிவிரட்டியோ... எதுவும் இந்த வருஷம் கொடுக்கல ஆனா, விளைச்சல் மட்டும் நிறைவா இருக்கு. 'ஜப்பான் இயற்கை வேளாண் விஞ்ஞானி' மசானோபு ஃபுகோக்கா, 'இயற்கை விவசாயம்னா... விதைக்கணும், அறுக்கணும். இதைத் தவிர வேற எந்தப் பாராமரிப்பும் செய்யக்கூடாது’னுதான் சொல்லியிருக்கிறாரு. அதைத்தான் உழவு செய்யாத வேளாண்மைனு (டூ நத்திங் ஃபார்ம்) சொல்லுவாங்க. எங்க பண்ணையில இப்ப அறுவடை மட்டும்தான் செய்றோம். சொன்னா நம்பமாட்டீங்க... இந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பண்ணையில, ரெண்டு பேர் மட்டும்தான் வேலை செய்றோம். ஒண்ணு நான், ரெண்டாவது பண்ணை மேனேஜர். ஒட்டுமொத்த பண்ணையும் இயற்கையோட கட்டுப்பாட்டுல வந்ததுதான் இதுக்குக் காரணம். சில்லரை வேலைகள செய்ய குதிரை, கழுதை, ஒட்டகம்... உதவி செய்துங்க. அதனால எங்களுக்கே இங்க பெரிசா எந்த வேலையும் இல்ல. பழ சீஸன்ல மட்டும் ஒண்ணு ரெண்டு ஆட்களைக் கூட சேர்த்துக்குவோம்.
களையெடுக்கும் ஆடுகள்!
கோடைக் காலத்துல மரங்க வாடாமா இருக்கணும். அதுக்காக எல்லா மரத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருக்கோம். மா மரத்துக்கு பக்கத்துல வளர்ற களையைக் கட்டுப்படுத்த உழவு ஓட்டிப்போடுங்கனு சிலர் சொல்றாங்க. ஆனா, இங்க வளர்ற 150 ஆடுகளே களையையெல்லாம் தின்னுடறதோட... சத்தான உரத்தையும் மரங்களைச் சுத்தி போட்டுடுதுங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்ன வாங்கின 40 ஆடுகதான், இப்போ 150 உருப்படியா பெருகி நிக்குதுங்க.
காங்கிரேஜ், தார்பார்க்கர்னு நாட்டுரக மாடுங்களும் நாலைஞ்சு இருக்குது. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா இதுக்காகத்தான் அதையெல்லாம் வாங்கிட்டு வந்தேன். இப்ப அந்தத் தேவையும் பூர்த்தியானதால மாடுங்க சும்மாத்தான் நிக்குதுங்க. அதுங்ககிட்டேயிருந்து பாலையும் கறக்கறதில்ல. எல்லாத்தையும் கன்னுக்குட்டிங்களே குடிச்சுடும். அதனாலதான் இந்த கன்னுங்க எல்லாம் தெம்பா இருக்குது'' என்று சொல்லி அவற்றைத் தடவிக் கொடுத்தவர், மா சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் வரவு-செலவு பற்றியும் பகிர்ந்து கொண்டார். அது-
வருமானம் இல்ல... லாபம்!
''ஏக்கருக்கு 30 அடிக்கு 30 அடி இடைவெளியில 40 மரங்கள் வெச்சிருக்கோம். பங்கனப்பள்ளி, அல்போன்சா, செந்தூரா, ஜவாரி, மல்கோவானு விதம்விதமான ரகங்கள நடவு செய்திருக்கோம். சராசரியா ஒரு மரத்துக்கு 150 கிலோ மகசூல் கிடைக்கும். 10 மரத்துல மகசூல் முன்ன, பின்ன இருந்தாலும்... சராசரியா ஏக்கருக்கு 4,500 கிலோ கிடைக்கும். இருக்கறதுலயே விலை குறைவான செந்தூரா ரகம்... கிலோ 30 ரூபாய்; பங்கனப்பள்ளி கிலோ 60 ரூபாய்; அல்போன்சா கிலோ
70 ரூபாய்னு விற்பனையாகுது. குறைந்தபட்சம் கிலோ 30 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 1,35,000
ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதை வருமானம்னு சொல்றதைக் காட்டிலும், லாபம்னுதான் சொல்லணும். ஏன்னா... ஆரம்பக் கட்டத்துல நடவு, சொட்டுநீர் இதுக்காக செய்ததைத் தவிர, இந்த 12 வருஷத்துல பெருசா செலவு இல்லையே'' என்ற பாரதி,
''இப்படி, எந்த சிரமமும் இல்லாம லாபம் மட்டுமே கிடைக்கறதோட... நஞ்சு இல்லாத விளைபொருளும் கிடைக்கறப்ப... ஏன் எல்லா விவசாயிங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறக்கூடாது?'' எனக் கேட்டுவிட்டு,
''என்னோட அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தை மற்றவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கத் தயாரா இருக்கேன். பண்ணையிலேயே வந்து தங்கி எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு போகலாம். சாப்பாட்டுக்கும், தங்கறதுக்கும்கூட பணம் வேண்டாம். இயற்கை அன்னை எனக்கு போதுமான செல்வத்தை அள்ளிக் கொடுக்கறா... அதிலிருந்து கொஞ்சமாவது, மத்த விவசாயிங்களுக்கும் கொடுக்கிறதுதானே நியாயம்'' என்று தத்துவார்த்தமாக சொன்னார்!
பரந்து விரிந்து கிடக்கும், இந்தப் பண்ணையை நிர்வகிக்கும் பாரதி... ஒரு மாற்றுத் திறனாளி. போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், தோட்டத்துக்குள் துள்ளல் நடைபோட்டு சாதித்திருக்கும் பாரதியை பார்க்கும்போது, விண்ணை முட்டுகிறது வியப்பு. உங்களுக்கும்தானே!
வேலியைப் பராமரிக்கும் ஒட்டகம்!
காலையில் பண்ணையில் நுழைந்தபோது வேலி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது ஒட்டகம். மாலை திரும்பும்போது பார்த்தால்... பல நூறு மீட்டர் தூரத்துக்கு வேலியில் இருந்த புல், பூண்டு, முள்... என்று சகலத்தையும் தின்று தீர்த்து, வேலியையே சுத்தப்படுத்தி வைத்திருந்தது ஒட்டகம்.
''ராஜஸ்தான் போனப்ப ஒட்டகச் சந்தை பக்கம் எட்டிப் பார்த்தேன். ஏற்கெனவே நம்மகிட்ட குதிரை, கழுதையெல்லாம் இருக்கு... ஒரு ஒட்டகத்தையும் அதுங்ககூட சேர்த்துவிடலாம்னு ஆசைப்பட்டு, விலைக்கு வாங்கிட்டு வந்தேன். 'இதைப் போய் எதுக்காக வாங்கிட்டு வந்திருக்கான்?'னு ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நான் எந்த பதிலையும் சொல்லல.
ஆனா, நானே ஆச்சரியப்படுற அளவுக்கு அந்த ஒட்டகத்தோட வேலை அமைஞ்சதுதான் ஆச்சரியம். அதுக்கு என்ன மாதிரி தீனி கொடுக்கறதுனுகூட சரியா தெரிஞ்சுக்காத நான், ஒரு நாள் தோட்டத்துல அதை விட்டுட்டு வேடிக்கை பார்த்திட்டிருந்தேன். அதுவா போய் வேலியில இருக்கிற முள்செடி எல்லாத்தையும் அழகாக கடிச்சி திங்க ஆரம்பிச்சுடுச்சி. 'அட, வேலி முள்ளையெல்லாம் இப்படி அழகா கழிச்சு எடுத்துடுச்சே... இதுக்காக வேலையாள் வெச்சா எவ்வளவு செலவாகியிருக்கும்? ஆயிரக்கணக்குல கூலிக் கொடுத்தாகூட வேலி முள்ளை வெட்ட ஆள் கிடைக்காத நிலையில, இது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்’னு அசந்து போனேன். ஆரம்பத்துல என்கிட்ட கேள்வி எழுப்பினவங்கள்லாம்கூட மூக்குல விரல் வெச்சுட்டாங்க.
இப்ப... புல், பூண்டு, முள்ளு’னு எதையும் விடாம தின்னு, பண்ணையைப் பாதுகாக்கற தளபதிகள்ல இந்த ஒட்டகமும் ஒரு ஆளாயிடுச்சு'' என்று ஆச்சரியத் தகவல் சொன்னார் பாரதி.
வாருங்கள்... பறியுங்கள்... சுவையுங்கள்!
இந்தத் தோட்டத்திலிருந்து நேரடியாக வியாபாரிகளுக்குப் பழங்கள் விற்கப்படுவதைவிட, பொதுமக்களே நேரடியாக வந்து வாங்கிச் செல்வதுதான் அதிகமாக இருக்கிறது.
''எங்க தோட்டத்துல பழம் வந்துடுச்சுனு தெரிஞ்சாலே... அக்கம், பக்கம் மட்டுமில்லாம, சென்னையில இருந்தெல்லாம்கூட மக்கள் நேரடியா குடும்பத்தோட வர ஆரம்பிச்சுடுவாங்க. மரத்துல இருந்து அவங்களே பறிச்சி சாப்பிடுவாங்க. தேவையான அளவுக்கு பறிச்சு பையில எடுத்துக்குவாங்க. இங்க சாப்பிடற பழத்துக்கெல்லாம் பணம் வாங்கறதில்ல. எடுத்துக்கிட்டு போற பழங்களுக்கு மட்டும் எடைபோட்டு பணம் வாங்குவோம். அதுவும்கூட மொத்த விலைக்குத்தான்.
குடும்பத்தோட வர்ற சிலர், சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்து, மரத்தடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு, குதிரை, ஒட்டகத்துலயெல்லாம் சவாரி பண்ணிட்டு, சாயந்திரமா புறப்பட்டுப் போறதும் உண்டு. இதுல குழந்தைங்க... பெரியவங்கனு வித்தியாசமே இல்லை!'' என்று சொல்லி சிரிக்கிறார், பாரதி.
காவல் காக்கும் கேமரா!
தோட்டத்தில் இரண்டு இடங்களில் உயரமான இரும்புக் கம்பங்களை நிறுவி, அவற்றில் ஒளிப்படக் கருவிகளை அமைத்திருக்கிறார், பாரதி. இதன் மூலம் பண்ணையிலிருக்கும் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, மொத்தத் தோட்டத்தையும் தொலைக்காட்சிப் பெட்டி மூலம் பார்க்க முடியும். அங்கே நடப்பவை அத்தனையும் அந்தந்த நொடியே ஒளிப்படக்கருவி மூலம் பதிவும் ஆகிவிடுகிறது.
''மாசத்துல 30 நாள் வரைக்கும் இப்படி பதிவு பண்ணிக்கலாம். தேவையான படத்தை, கம்ப்யூட்டர்லயோ... சிடி-யிலயோ பதிவு பண்ணிட்டு, அழிச்சிட்டா... அடுத்த முப்பது நாளைக்கு மறுபடியும் பதிவு பண்ணிக்கலாம்.
எங்க வீடு இருக்கறது திருநின்றவூர்ல. இங்க இருந்து கிட்டத்தட்ட முப்பது, நாப்பது கிலோ மீட்டர் தூரமிருக்கும். இந்த கேமராவுல பதிவாகற விஷயத்தை இன்டர்நெட் மூலமா வீட்டுல இருந்தே பார்க்கிறதுக்கு ஏற்பாடு நடக்குது. மொத்தம் நாலு லட்ச ரூபாய் இதுக்காகவே செலவு பண்ணியிருக்கோம். ஆளுங்களோட நடமாட்டம்... எங்களோட ஆடு, மாடு, கழுதை, குதிரை, ஒட்டகம் இதுங்களோட நடமாட்டம்னு எல்லாத்தையும் இதன் மூலமாவே கண்காணிக்க முடியுது. அதனால எங்க தோட்டத்துக்குனு தனியா காவலாளியே தேவைப்படல'' என்கிறார் பாரதி மகிழ்ச்சியாக.
|
படங்கள்: பொன். காசிராஜன்,
சொ. பாலசுப்பிரமணியன்
தொடர்புக்கு
பாரதி, அலைபேசி: 93805-33376.
-பொன்.செந்தில்குமார்
Source:pasumaivikatan
No comments:
Post a Comment