உழவில்லை... உரமில்லை... செலவில்லை...
மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !
'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை என்றாலே... இடுபொருட்களாக பயன்படுத்தப்படும் ஜீவாமிர்தம் உள்ளிட்ட அமிர்தங்கள்... அக்னி அஸ்திரம் உள்ளிட்ட அஸ்திரங்கள்... ஆகியவை முக்கியமாக கவனத்தில் வந்து நின்றுவிடும். இவையில்லாமல்... ஜீரோ பட்ஜெட் இல்லை.
ஆனால், ''இவை மட்டுமே ஜீரோ பட்ஜெட் இல்லை'' என்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு.
''அமிர்தங்கள் மற்றும் அஸ்திரங்கள் மூலமே சிறந்தப் பலன்கள் கிடைக்கும் என்றாலும், காற்றுத் தடுப்பு வேலிகள், இயந்திரங்கள் பயன்படுத்தாமை, உயிர்மூடாக்கு... என 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் சொல்லும் அத்தனை வழிமுறைகளையும் கடைபிடித்து, முழுமையாக ஜீரோ பட்ஜெட் வேளாண்மை செய்யும்போது... கூடுதல் பலன் என்பது கண்கூடு'' என்று சொல்லும் சக்திவேலு, பாலேக்கர் சொல்லும் பெரும்பாலான ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து அரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்.