Monday

மண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள்

நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் சீர்கெட்டு வருகிறது. பொதுவாக மண்ணின் வளம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மண்ணின் தன்மையைப் பொறுத்து மண்வளம் இடத்திற்கு இடம் மாறுபடும். பயிர்கள் எடுத்துக் கொள்ளும் சத்துக்களின் அளவுகளை அறிந்து அதற்கேற்ப அங்கக உரங்களை இரசாயன உரங்களுடன் சேர்த்து நிலத்தில் இட்டால்தான் மண் வளம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மணற்பாங்கான மண்ணில் மண் துகள்கள் கட்டுமானம் அடையாமல் தனித்தனியாக இருக்கும். எனவே நீர் பிடிப்புத்திறன் குறைவாக இருக்கும். ஆகையால் பயிர்களுக்கு அளிக்கப்படும் நீரும், இரசாயன உரங்களும் எளிதில் நீரில் கரைந்து வீணாகிவிடும். எனவே நீர்த்தேவையும் உரத்தேவையும் அதிகரிக்கும். அதே போன்று களிமண் அதிகமாக உள்ள நிலங்களில் மண் இறுகிவிடும். எனவே மண்ணில் நீர் ஊடுறுவும் தன்மை, காற்றோட்டம், மண்ணில் வெப்பம் பரவுதல், சத்து ஊடுறுவும் தன்மை குறைந்து காணப்படும். கரிமப் பொருள் போதுமான அளவில் இருந்தால் மணல் நிலம், களி நிலம் இரண்டிலுமே மண் குருணைகளாகக் கட்டுமானம் பெற்றுக் காற்றோட்டம், வெப்பநிலை, நீரை ஈர்த்து வைக்கும் திறன் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அமையும்.

சத்துக்கள் நிலை நிறுத்தப்படுதல்

நாம் இடும் இரசாயன உரங்கள், அங்கக உரங்களிலிருந்து பயிர்கள் சத்துக்களை அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. அவை மண்ணில் பல உயிர் வேதிவினைகளுக்கு உட்பட்டு அயனிகளாக உருவாகின்றன. இந்த அயனிகளைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. பயிர்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டால்தான் பயிர்களின் வளர்ச்சி காலம் முழுவதும் சத்துக்களை மண் வழங்க முடியும். மணற்பாங்கான மண்ணில் இந்த அயனிமாற்று திறன் குறைவாக இருக்கும்.
எனவே சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்தப்பட்டால் மண் கரைசலுடன் சேர்ந்து வீணாகிவிடும். ஆனால் அங்கக உரங்களை தொடர்ந்து மண்ணில் இடும் போது மண்ணின் கூழ்மத்தன்மை அதிகரித்து மண்ணின் வளமும் அதிகரிக்கும். இச்சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்தப்படுவதால் அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு சத்துக்கள் குறைந்து இட்டால் போதுமானது.

நுண்ணூட்டச் சத்துக்கள்

பயிர் வளர்ச்சிக்கு தேவையான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம் ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை பொறுத்தவரை இந்தச் சத்துக்கள் அனைத்தையும் சேர்த்து கொடுக்கக் கூடிய உரம் எதுவும் இல்லை. மேலும் இரசாயன உரங்கள் மூலம் நீரில் கரையாத நிலைக்கு மாற்றப்படுகின்றன.

அங்கக உரங்கள் மண்ணில் சிதைவடையும் பொழுது உருவாகும். அங்கக அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம் முதலிய உலோக அயனிகளுடன் இணைந்து கீலேட் என்னும் கரிம உலோக கூட்டுப் பொருட்கள் உருவாகும். இந்த கரிம உலோக கூட்டுப் பொருளை பயிர்கள் எளிதாக உறிஞ்சிக் கொள்ள முடியும். மேலும் உலோக அயனிகள் மண்ணில் இடும் மணிச் சத்துடன் இணைந்து கரையாத நிலைக்கு மணிச்சத்து மாறுகிறது. அங்கக உரங்களை இடும்போது உருவாகும் அங்கக அயனிகள் உலோக அயனிகளுடன் இணைவதால், மணிச்சத்து கரைந்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் நிலைக்கு மாற்றப்படுகிறது. மேலும் கரிமப் பொருட்கள் இடும்போது வளர்ச்சி ஊக்கிகள், நொதிகள் உருவாகின்றன. இவை பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மண்ணில் தாங்கல் தன்மை

மண்ணின் முக்கியமான இரசாயனப் பண்புகளில் அமில கார நிலை முக்கியமானதாகும். மண்ணின் அமில கார சமநிலைக்கு அருகில் இருந்தால் தான் மண் வளம் நன்றாக அமையும். அமில நிலங்களிலும் கார நிலங்களிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு மண் வளம் பாதிக்கப்பட்டு பல ஊட்டச்சத்துக்கள் பயிர்கள் எடுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு மாற்றப்படும். அமிலத் தன்மை காரத்தன்மை உடைய உரங்களை நாம் தொடர்ந்து இடும்போது மண்ணின் அமிலகார நிலையில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் வளம் பாதிக்கப்படும். ஆனால் அங்ககச் சத்துக்கள் போதுமான அளவில் உள்ள மண்ணின் தாங்கல் தன்மை அதிகரிப்பதால் இடும் ரசாயன உரங்களினால் மண்ணின் அமிலகார நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

மண் புழுக்கள்

விவசாய நிலங்கள் வளமாக அமைவதற்கு மண் புழுக்கள் பெருமளவில் உதவுகின்றன. மண் புழுக்கள் நிலத்தில் மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஊர்ந்து செல்லும் போது ஏற்படும் துவாரம் வழியாக மண்ணில் காற்றோட்ட வசதி அதிகமாகும். குறிப்பாக களிமண் அதிகமாக உள்ள நிலத்தில் மண் இறுகி விடுவதால் காற்றோட்ட வசதி குறைவாக இருக்கும். இந்த நிலங்களில் மண்புழுக்கள் காற்றோட்ட வசதியை அதிகரித்துக் கொடுக்கும். மண் புழுக்களுக்கு கரிமப் பொருட்கள் தான் உணவாகும்.

மண்ணும் கரிமப் பொருட்களும் மண் புழுக்களின் உடலுக்குள் சென்று கழிவுப் பொருட்களாக வெளியே வருவதால் சத்துக்கள் பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு மாற்றப்படுகின்றன.

நுண்ணுயிர்கள்

மண் ஒரு உயிரூட்டமுள்ள பொருளாக இருப்பதே மண்ணில் உள்ள நுண்கிருமிகளால் தான். மண்ணில் பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகள் உள்ளன. நுண் கிருமிகள் பயிர்களுக்கு இடப்படும் சத்தை பயிர்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் மாற்றுகின்றன. மேலும் இடும் அங்கக உரங்களை சிதைவடையச் செய்து எளிய பொருளாக மாற்றுகின்றன. நுண் கிருமிகள் மண்ணில் இல்லாவிட்டால், பல ஊட்டசத் சத்துக்களின் மொத்த அளவுகள் அதிகமாக இருந்தாலும், இவைகளில் பெருமளவு பயிர்கள் உறிஞ்சிக் கொள்ள முடியாத வடிவங்களிலேயே இருக்கும். இந்த நுண்கிருமிகளின் வளர்ச்சிக்கு கரிமப் பொருட்கள் தான் உணவாகும். அவைகளின் வளர்ச்சிக்குத் தேவையான கார்பன் தனிமம் அங்கக பொருட்களிலிருந்து தான் கிடைத்தாக வேண்டும்.
சில வகை நுண்கிருமிகளால் தான் காற்றிலுள்ள கரியமில வாயுவிலிருந்து கார்பன் தனிமத்தை கிரகித்துக் கொள்ள முடியும். பெரும்பாலான நுண்ணுயிர்கள் கார்பன் தனிமத்திற்கு கரிமப் பொருட்களைத் தான் நம்பி உள்ளன. எனவே தான் கரிமப் பொருட்கள் அதிகமாக உள்ள நிலங்களில் வளர்ச்சியடைந்து உயிர் வேதி மாற்றங்களை நன்கமைத்து ஊட்டசத்துக்களை பயிர்கள் உறிஞ்சிக் கொள்ள கூடிய நிலைக்கு மாற்றப்பட்டு, மண்வளம் சீர் பெறும். அந்த மாதிரி நிலங்களில் பயிர் வளர்ச்சி சிறப்பாக அமையும்.

மேற்கூறிய கருத்துக்கள் மண்வள மேம்பாட்டில் அங்கக பொருட்களின் முக்கியத்துவத்தை தெரிவிக்கின்றன. இந்த அங்கக பொருட்களை தொழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், கரும்பாலைக் கழிவு, தென்னை நார்க் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றின் மூலம் நிலத்திற்கு அளிக்க முடியும். இந்த அங்கக உரங்களில் ஏதாவது பொருட்களை இடுவதால் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா நுண்ணூட்டச் சத்துக்களும், நொதிகளும், ஹார்மோன்களும் தேவையான அளவுகளில் கிடைப்பதோடு, மண்ணின் பௌதிக, ரசாயன மற்றும் உயிரியில் பண்புகள் மேம்பட்டு மண் பக்குவப்பட்டு மண் வளம் மேம்படும். மேலும் பாசன நீர் மற்றும் உரம் முதலிய இடுபொருட்களின் சிக்கனம் செய்ய முடியும். மேலும் மண்ணின் உற்பத்தித் திறன் உயர்ந்து பயிர் மகசூல் பெருக்கமும், விளை பொருட்களின் தரத்தில் உயர்வு ஏற்படும்.


பொதுவாக நமது மண்ணில் கரிமச் சத்து அளவு 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. மண்ணின் வளம் நன்றாக இருக்க வேண்டுமானால் மண்ணில் கரிமச் சத்தின் அளவு 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் மற்றும் மண் புழுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரித்து மண் வளத்தை பெருக்க முடியும். எனவே விவசாயத்தில் ரசாயன உரங்களோடு எளிதில் கிடைக்கின்ற ஏதாவது ஒரு அங்கக உரத்தை இட்டு மண்ணின் வளத்தைப் பெருக்கி, தொடர்ந்து வேளாண்மை செய்து பயிர் உற்பத்தியைப் பெருக்கிடுவோம்.

No comments: