நம்பிக்கை,
இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட
நிலத்தில் பசுமை புரட்சி செய்து,
சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.
பச்சைப்
பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும்
எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம்
அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம்,
குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக
இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி
சரளை மண், கரிசல் மண்ணாக
இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய
தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும்
விவசாயம் செய்து சாதிக்க முடியும்
என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள
70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம்
செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும்
இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை
விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண்
பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில்
ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும்
கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை
பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும்
கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட்,
கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய்,
பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.
என்ன தொழில் நுட்பம்?
விவசாயி
சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை
வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி
பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன.
அவற்றின்
சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு
பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில்
விழும் காய்ந்த சருகு மற்றும்
சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை
உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள
50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின்
விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள்
மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில்
உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம்
தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும்
பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
தினமும்
அறுவடை:
களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு
இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை,
நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை
அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும்
பயிரிடப்பட்டுள்ளது.
"ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி
ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை
இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு
நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில்
கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று
ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது.
வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை
காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல்
என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.
தாய்லாந்து
புளி:
தாய்லாந்தை
பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி
தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக
தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது.
அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை,
இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார்.
அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை
அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து
வைத்து, "இயற்கை இனிப்பு புளி'
என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.
இந்த புளியை அதிக அளவில்
பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி
தெரிவித்தார்.
"துளிநீரைக்கூட
வீணாக்குவதில்லை':
விவசாயி
சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில்
விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை
பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில்,
நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன
முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை
ஏற்படுத்தி, மழை பெய்யும் போது
வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை
நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும்
அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட,
நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment