Wednesday

செலவு குறையுது...வரவு கூடுது... ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !


செலவு குறையுது...வரவு கூடுது...
ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !

'ஜீரோ பட்ஜெட்’ விவசாயத்தின் முக்கிய இடுபொருட்கள்... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இரண்டும்தான். விவசாயிகளே எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இந்த இடுபொருட்களை, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பயன்படுத்தி, கண்கூடாக பலன்களை உணர்ந்திருக்கிறார்கள். அத்தகையோரில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து-ஈஸ்வரி தம்பதிக்கும் இடமுண்டு. இவர்கள், மரப்பயிர்களுக்கு இந்த இடுபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பத்து ஏக்கரில் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் இவர்களின் பண்ணையில், காலைவேளையில் கால் வைத்தோம். வாய் நிறைந்த சிரிப்புடன் வரவேற்று உபசரித்தனர் தம்பதியர். வேப்பமர நிழலில் கட்டியிருந்த நாட்டுமாடுகளுக்கு வைக்கோல் போட்டபடியே பேச ஆரம்பித்தார், புரவிமுத்து.
''எம்பேரு முத்துசாமிங்க. சொந்த ஊரு கொடுமுடி பக்கம் இருக்கிற புரவிப்பாளையம். 15 வருஷமா இங்க குடியிருக்கேன். 'புரவிப்பாளையம் முத்துசாமி’னு அக்கம்பக்கம் உள்ளவங்க கூப்பிட ஆரம்பிக்க... அது சுருங்கி 'புரவிமுத்து'னு ஆயிடுச்சு'' என்று பெயர் விளக்கம் கொடுத்தவர்,
''காலேஜ்ல படிக்கறப்பவே இயற்கை மீது ஆர்வம் அதிகம். லீவு விட்டா காடு, மலைனு சுத்திட்டே இருப்பேன். படிச்சு முடிச்சு விவசாயத்துக்கு வந்தேன். 'கொடுமுடி டாக்டர்’ நடராஜன் மூலமா பஞ்சகவ்யா பத்தித் தெரிஞ்சிட்டேன். தொடர்ந்து, நம்மாழ்வார் அய்யா கூட்டங்கள்லயும் கலந்துகிட்டது மூலமா இயற்கை வேளாண்மை பத்தியும் மரம் வளர்க்குறது பத்தியும் தெரிஞ்சிட்டேன்.
சிலிர்க்க வைத்த ஜீரோ பட்ஜெட் !
அதுக்கப்பறம் 10 ஏக்கர் நிலத்தையும் முழுக்க முழுக்க இயற்கைப் பண்ணையா மாத்திட்டோம். அந்த சமயத்துல 'பசுமை விகடன்’ மூலமா திண்டுக்கல்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல நானும் மனைவியும் கலந்துக்கிட்டோம். சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்... எங்களை ரொம்ப ஈர்த்துச்சு. தொடர்ந்து ஈரோடு, கோவையில நடந்த அவரோட வகுப்புலயும் கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அதுக்கப்பறம் எங்க பண்ணைய முழுசா ஜீரோ பட்ஜெட்டுக்கு மாத்திட்டோம்.
முதல்படியா கலப்பின மாடுகள் அத்தனையையும் வித்துட்டு, நாட்டுமாடுகளை வாங்கினோம். இப்ப 6 நாட்டு மாடுகளும், 2 கன்னுக்குட்டிகளும் இருக்கு. அதுகளோட கழிவுகளை வெச்சுதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயார் பண்ணி பயிர்களுக்குக் கொடுக்கிறோம்'' என்ற புரவிமுத்துவைத் தொடர்ந்தார், ஈஸ்வரி.
மழை ஈர்ப்பு மையம் !  
''இந்த 10 ஏக்கருக்கும் கிணத்துப் பாசனம்தான். 5 ஏக்கர்ல பென்சில், பெருமரம், வாகை, பூவரசு, மலைவேம்பு, காயா, மகோகனி, இலவு, வேம்பு...னு 2 ஆயிரம் மரங்கள் இருக்கு. அதையெல்லாம் நட்டு நாலு வருஷம் ஆச்சு. 5 ஏக்கர்ல சப்போட்டா, மா இருக்கு. இந்த மரங்கள் ஆறு வருஷமா பலன் கொடுத்திட்டிருக்கு. இந்தப் பண்ணைக்கு நாங்க 'கனிச்சோலை’னு பேர் வெச்சுருக்கோம். மரங்கள் நிறைய இருக்கறதால மழை ஈர்ப்பு மையமாவும் இது இருக்கு. மழை பெய்யுற சமயத்துல மத்த இடத்துல பெய்யுறதைவிட இங்க கொஞ்சம் அதிகமாவே பெய்றதை நாங்க கண் கூடா பாத்துருக்கோம்.  
மரங்கள் நடவு செஞ்சு 2 வருஷம் வரைக்கும் வாரம் ரெண்டு தண்ணி கொடுப்போம். ஒவ்வொரு முறையும் ஜீவாமிர்தத்தை பாசனத்துல கலந்துடுவோம். அப்படிக் கொடுக்க ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே மண் பொலபொலப்பாகி, ஈரப்பதம் அதிகமாச்சு. பாலேக்கர் சொன்னது மாதிரியே மண்ணுக்கு அடியில இருந்த மண்புழுக்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிச்சது. வறட்சியிலகூட மரங்கள் வாடிப் போறதில்லை. 3-ம் வருஷத்துல இருந்து 15 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுத்துட்டிருக்கோம்.
ஊட்டம் கொடுக்கும் கனஜீவாமிர்தம் !
ஜீவாமிர்தத்தைவிட அதிக வீரியமா செயல்படுறது, கனஜீவாமிர்தம். பொதுவா, மானாவாரி விவசாயத்துலதான் இதைப் பயன்படுத்துவாங்க. ஆனா, நாங்க எங்க தோட்டத்துல இருக்கற மரங்களுக்கும், பழப்பயிர்களுக்கும் மாதம் ஒரு முறை அரை கிலோ கனஜீவாமிர்தம் கொடுக்குறோம். வறட்சியால பாதிப்பு, வேர் சம்பந்தமான நோய்கள்னு எதுவும் பாதிக்காம தடுத்து, மரங்களுக்கு ஊட்டம் கொடுக்குறது கனஜீவாமிர்தம்தான்'' என்றார் ஈஸ்வரி.  
பூச்சிகள் தொல்லை இல்லை!  
மீண்டும் பேச்சை ஆரம்பித்த புரவிமுத்து, ''பழப்பயிர்களுக்கும் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ரெண்டையும் 15 நாள் இடைவெளியில மரத்துக்கு 5 லிட்டர் வீதம் கொடுக்குறோம். பூக்கும் பருவத்துல 10 லிட்டர் தண்ணியில 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து மரங்க மேல தெளிப்போம். இதனால பிஞ்சுக உதிராம, சேதாரம் இல்லாம காய்ச்சு பழுத்து பலன் தருது. பழங்களை சேதப்படுத்திற வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிக அறவே வர்றது இல்ல'' என்ற புரவிமுத்து, நிறைவாக,
ஜீரோ பட்ஜெட் விவசாயம்ங்கிறதால எங்கள் தோட்டத்தில் இருக்கிற வேலையை நாங்களே செஞ்சிடுவோம். இடுபொருள் செலவும் இல்லை. ஆக எல்லாமே வரவுதான். ''பழமரங்கள் மூலம் சீசனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. 5 ஏக்கர் நிலத்துல இருக்கிற மரங்களை 6 வருஷத்துக்குப் பிறகு வெட்டுறப்போ... குறைந்தபட்சம்
2 ஆயிரம் டன் தேறும். விறகுக்கு வித்தாக்கூட டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய்னு இப்ப இருக்கற நிலவரப்படி 60 லட்சம் ரூபாய் வருமானம் நிச்சயம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.  

இப்படித்தான் தயாரிக்கணும்...
ஜீவாமிர்தம் :
தண்ணீர்-200 லிட்டர், நாட்டு மாட்டுச் சாணம்-10 கிலோ, மாட்டுச் சிறுநீர்-10 லிட்டர், நாட்டுச் சர்க்கரை-2 கிலோ, முளைகட்டியப் பயறு மாவு-2 கிலோ ஆகியவற்றோடு ஒரு கைப்பிடிஅளவு ஜீவனுள்ள நம் தோட்டத்து மண் ஆகியவற்றை ஒரு தொட்டியில் போட்டு கலக்கவேண்டும். தொட்டி நிழலில் இருக்க வேண்டும். தொட்டிக்குள் பூச்சி, பொட்டு விழாமல் இருக்க, மூடி வைக்க வேண்டும். தினம் மூன்று முறை இந்தக் கரைசலை கடிகாரச் சுற்றுப்படி கலக்கி வந்தால், மூன்று நாட்களில் ஜீவாமிர்தம் தயார். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பாசன நீரோடு கலந்து பயன்படுத்தலாம். பூக்கும் தருவாயிலுள்ள பயிர்களுக்கு 10 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து, இலை வழி ஊட்டமாகத் தெளித்தும் விடலாம்.
கனஜீவாமிர்தம் :
நாட்டு மாட்டுச் சாணம்-100 கிலோ, மாட்டுச் சிறுநீர்-10 லிட்டர், வெல்லம்-2 கிலோ, சிறுதானிய மாவு-2 கிலோ ஆகியவற்றை நன்றாகக் கலக்கி மண்தரையில் பரப்பி, நிழலில் உலர வைத்து, பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். தூளாக, உள்ள கன ஜீவாமிர்தம், பயன்படுத்த எனக்கு எளிதாக இருக்கிறது. உருண்டையாக பிடித்து வைத்தும் பயன்படுத்தலாம்.  தேவைப்படும்போது 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரை அதன் மீது தெளித்து, ஈரப்படுத்திக் கொண்டு பயன்படுத்தலாம்.

வருமானத்துக்கு வழி !
நாட்டு மாடுகள் பற்றிப் பேசிய ஈஸ்வரி, ''நாட்டு மாடுகள்ல பால் குறைவாத்தான் கிடைக்கும். கன்னுக்குட்டிக குடிச்சதுபோக, வீட்டுத்தேவைக்கே அந்தப்பால் சரியா போயிடும். அதனால... இயற்கை இடுபொருள் தயாரிக்க மட்டுமே நாட்டு மாடுங்கறது நெருடலா இருந்துச்சு. ஆனா, அதுக்கும் பசுமை விகடன் மூலமாவே மாற்று வழி கிடைச்சுடுச்சு. இப்ப நாட்டு மாடு வருமானம் கொடுக்குற மாடாயிடுச்சு'' என்று குஷியோடு சொன்னவர், அந்த நுட்பங்களையும் சொன்னார். அது-
''சேலத்துல இருக்கிற சுரபி கோசாலையில நாட்டு மாடுகளோட கோமியம், சாணத்தைப் பயன்படுத்தி, அர்க், சாம்பிராணி, விபூதி, ஷாம்பூ, சோப்புக்கட்டி, கொசுவத்திகளைத் தயாரிச்சு விக்கிறாங்கனு பசுமை விகடன்ல ஒரு செய்தி வந்துருந்துச்சு. அந்த கோசாலைக்குப் போய், தயாரிப்பு முறைகளைக் கத்துக்கிட்டு வந்தோம். 2 வருஷமா நாங்களும் தயாரிச்சு வித்துக்கிட்டிருக்கோம். இதன் மூலமா மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. அதனால, நாட்டுமாடுகள்ல பால் வருமானம் இல்லையேங்கிற வருத்தம் சுத்தமா போயிடுச்சு. செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் வளர்த்து வித்துக்கிட்டுருக்கோம். அதுலயும் தனியா வருமானம் கிடைக்குது.''  

படங்கள்: க. ரமேஷ், ஜி. பழனிச்சாமி
Source:pasumaivikatan

No comments: