ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர்வளம், தட்பவெப்ப நிலை… ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும்.இதில், ஊடுபயிர்களும் விதிவிலகல்ல. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கேற்ற பயிர்களில் ஒன்று பாக்கு. இம்மாவட்டத்தில் பலரும், தனிப்பயிராகவும். தென்னைக்கு இடையில் ஊடுபயிராகவும் பாக்கு சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்… வில்சன் ராஜப்பன்.
நாகர்கோவில் –சுருளங்கோடு சாலையில் பதினெட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, அருமநல்லூர் கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் கவால் வீரர்கள் போல வரிசை கட்டி நிற்கின்றன தென்னை மரங்கள். இங்குதான், வில்சன் ராஜப்பனின் பாக்குத் தோட்டம்.
எங்க குடும்பத்திற்கு பூர்வீகத் தொழில் விவசாயம்தான். முக்கால் ஏக்கரில் பாக்கும், அதற்கு ஊடுபயிராக ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிறேன். இது போக நிறைய தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்தும் வாழை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். பாக்குக்கு அதிக தண்ணீர் தேவை என்பதால் வாய்க்கால் பாசனம்தான்.