பராமரிப்புச் செலவுக்கு... தென்னை, வாழை...
வளமான வருமானத்துக்கு... செடி முருங்கை...
'ஒரு பயிரை மட்டும் நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்தால்தான் விவசாயத்தில் வெற்றி பெற முடியும்’
- பல ஆண்டுகளாக விவசாய வல்லுநர்கள் பலரும் கூறி வரும் வித்தை இது. இப்படி வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலும் ஒருவர்.
சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் வருகிறது, நரையன் குடியிருப்பு. அதன் அருகிலுள்ள கருவேலம்பாடு கிராமத்தில்தான் ஜெயபாலின் பண்ணை இருக்கிறது. ரம்மியமான சூழலில், செடிமுருங்கை, தென்னை, வாழை, மா, எலுமிச்சை, கொய்யா, நெல்லி, சப்போட்டா... என மகசூலை வாரி குவிக்கும் மரங்கள் சூழ அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறது, பத்து ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பண்ணை.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
''நான், என் மனைவி ரெண்டு பேருமே ஆசிரியர்கள்தான். நான் இப்போ ரிட்டையர்டு ஆயிட்டேன். பூர்விக தொழிலே விவசாயம்தான். முப்பது வருசத்துக்கு முன்ன இந்தத் தோட்டத்தை வாங்கிப் போட்டேன். இந்த பத்து ஏக்கர் போக, தனியா இருபது ஏக்கர்ல மரப்பயிர்களை சாகுபடி பண்றேன். ஆரம்பத்துல விவசாயத்துல சொல்லிக்கற மாதிரி வருமானம் இல்ல. ஆனாலும், விவசாயத்து மேல இருந்த ஈர்ப்பால அதை விடறதுக்கு மனசும் வரல.
விவசாயம் சம்பந்தமான புத்தகங்களை நிறைய படிப்பேன். மூணு வருசத்துக்கு முன்ன, பஸ்ல போறப்போ, தற்செயலா 'பசுமை விகடன்’ என் கண்ணில் பட்டுச்சு. புத்தகத்தைப் படிச்ச உடனேயே ஒரு நம்பிக்கை பிறந்துடுச்சு. வீட்டுக்குப் போனதுமே பசங்களைக் கூப்பிட்டு 'மக்கா... நாம இத்தனை வருசமா ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லியையும் மண்ணுல கொட்டி இந்த மண்ணை மலடாக்கிட்டோம்டே. இனி இயற்கைக்கு மாறலாம்னு இருக்கேன்’னு என் விருப்பத்தைச் சொன்னதும், மொத்த குடும்பமும் உற்சாகமாகிடுச்சு. பள்ளிக்கூடத்தில் நான் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துருக்கேன். ஆனா... எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற ஆசான், 'பசுமை விகடன்’தான்'' என்று நெகிழ்ச்சியான முன்னுரை கொடுத்த ஜெயபால், பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே பேசினார்.
செடிமுருங்கையில் ஆண்டுக்கு 3 லட்சம்!
''பத்து ஏக்கர்ல 1,000 செடிமுருங்கை, 450 தென்னை, 300 வாழை, 6 மாமரம், 10 நெல்லி, 5 எலுமிச்சை, 7 கொய்யா, 20 சப்போட்டா நிக்குது. அரை ஏக்கர்ல தென்னைக்கு ஊடுபயிரா நிலக்கடலை சாகுபடி பண்றேன். மூணு வருசத்துக்கு முன்ன 'பசுமை விகடன்’ கொடுத்த தைரியத்துலதான் இயற்கைப் பக்கம் திரும்பினேன். விவசாயத்துல எந்த சந்தேகம் வந்தாலும், உடனே பசுமை விகடனை எடுத்துப் பார்த்துக்கிடுவேன். போன வருசம் செடிமுருங்கையில 60 டன் வரைக்கும் மகசூல் கிடைச்சுது. வேலையாட்கள் கூலி, முருங்கை பராமரிப்புச் செலவுகள் எல்லாத்தையும் தென்னை, வாழையில இருந்து கிடைக்கிற வருமானத்துலயே ஈடுகட்டிடலாம். செடி முருங்கையில கிடைக்கற வருமானம் முழுக்க லாபம்தான். வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது.
தென்னைக்குக் குறைவான பராமரிப்புதான்!
மூணு வயசுல இருந்து 30 வயசு வரைக்கும் மொத்தம் 450 தென்னை மரங்கள் நிக்குது. ஆறு மாசத்துக்கு ஒரு முறை தொழுவுரம் கொடுப்பேன். கூண்வண்டு தாக்காம இருக்கறதுக்காக புகையிலைச் சாறு, வசம்புத் தைலம் ரெண்டையும் கலந்து தெளிப்பேன். அவ்வளவுதான் பராமரிப்பு. 40 நாளைக்கு ஒரு முறை காய் பறிப்பேன். ஒவ்வொரு பறிப்புலயும் 3 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்குது.
வாட்டி எடுத்த வறட்சி... தாக்குப் பிடித்த இயற்கை!
வாழையில, செவ்வாழை, கோழிக்கோடு, கற்பூரவல்லி, நாட்டு ரகம்னு கலந்து வெச்சிருக்கேன். என் நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து விதைக்கிழங்கை வாங்கிக்கிட்டேன். சுண்ணாம்புக் கரைசல்ல விதைக்கிழங்கை முக்கித்தான் நடவு செய்வேன். நடவுக்குழிக்குள்ள ஒரு கையளவு வேப்பம் பிண்ணாக்கையும் போட்டுடறதால ஆரோக்கியமா வாழை வளருது. ஆறடி இடைவெளி கொடுத்துதான் வாழை நட்டிருக்கேன். கரன்ட் பிரச்னையால வாழைக்கு சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியல. ஆனாலும், ஓரளவு மகசூல் வந்திருக்குனா அதுக்கு இயற்கை விவசாயம்தான் காரணம்'' என்று இயற்கையை ஆராதித்த ஜெயபால், நிறைவாக நிலக்கடலை வயலுக்கு அழைத்துச் சென்றார்.
ஆரோக்கியத்தைக் கூட்டும் நிலக்கடலை!
''என் தோட்டம் முழுக்க செம்மண் பூமிதான். அதனாலதான் நாட்டு ரக நிலக்கடலை போட்டிருக்கேன். மெஷின் மூலமாத்தான் கடலையை நடவு செய்வேன். மண்புழு உரம், அசோஸ்பைரில்லம் ரெண்டும்தான் ஊட்டத்துக்கு. தேவைப்பட்டா... பூச்சிவிரட்டிகளை தெளிப்பேன். அறுவடை செஞ்சு காய வெச்சா, அரை ஏக்கர்ல 10 மூட்டை
(37 கிலோ மூட்டை) வரைக்கும் கடலை கிடைக்கும். நான் நிலக்கடலையை வெளியில் விக்குறது இல்லை. சொந்த பந்தங்களுக்கு கொடுக்கறதுக்கே சரியா இருக்கும். சந்தோஷத்தோட அவங்களுக்கெல்லாம் கொடுத்துடுவேன்'' என்று குஷி பொங்கச் சொன்னார் ஜெயபால்!
தொடர்புக்கு, ஜெயபால், செல்போன்: 94421-61417.
இப்படித்தான் சாகுபடி செய்யணும் செடிமுருங்கையை !
ஜெயபால் சொல்லும் செடிமுருங்கை சாகுபடி இதுதான்- 'டிசம்பர், ஜனவரி மாதங்கள் செடிமுருங்கை நடவுக்கு ஏற்றவை. நான்கு அடி நீளமுள்ள விதைக்குச்சியை, அரை அடி வரை மண்ணில் புதையுமாறு பதியம் போடவேண்டும். இவற்றில், எட்டு நாட்களுக்குப் பிறகு நன்றாகத் தழைத்து வரும் விதைக்குச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். 2 கன அடி அளவுக்குக் குழிபறித்து, ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கை இட்டு தேர்ந்தெடுத்த விதைக்குச்சிகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து, மண்ணால் மூட வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு முறை நடவு செய்தால்... 5 வருடங்கள் வரை பலன் கிடைக்கும். மரங்களின் வேர்ப்பகுதியில் பூச்சி, புழுத் தாக்குதல் இருந்தால்... அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
நடவு செய்த இரண்டாவது மாதத்தில், ஒவ்வொரு மரத்தின் இரண்டு பக்கங்களிலும், முக்கால் அடி ஆழத்துக்குக் குழிபறித்து, ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ மட்கிய கோழி எருவை வைக்க வேண்டும். நான்காவது மாதத்தில் இதேபோல் குழிபறித்து, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மாட்டுச் சாணம், அரை கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கலவையை இடவேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பூண்டுக் கரைசல், வசம்புத் தைலம் தெளிக்கவேண்டும். செடிமுருங்கையில் சில பூச்சிகளின் தாக்குதல் காரணமாக, இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி, பிசின் பிடிக்கும். இதை வசம்புத் தைலம் கட்டுப்படுத்தி விடும்.
நான்காவது மாத இறுதியில் செடிமுருங்கையில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். முதல் பூ பூத்தவுடன் உதிர்ந்துவிடும். அடுத்த பூ நன்றாக பிடிப்பதற்காக, அரை கிலோ பெருங்காயம், சிறிது காதி சோப் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிய கரைசலை, மரத்தின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், இருபது மில்லி பெருங்காயக் கரைசல் வீதம் கலந்தால்... இரண்டு மரங்களுக்கு அடிக்க முடியும். இதைக் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப தயாரித்துக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவது மாதத்தில் மரங்கள் காய்ப்புக்கு வரும். மாதம் இரண்டு அறுவடை வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து அறுவடை செய்யலாம். 1,000 செடிமுருங்கை இருந்தால், ஒரு பறிப்புக்கு 5 டன் வரை முருங்கைக்காய்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்தில், இலையெல்லாம் உதிர்ந்து மொட்டையாகிவிடும். அந்த நேரத்தில் மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதிகளை முற்றிலுமாக வெட்டி... தோட்டத்தில் ஆங்காங்கே 5 அடி ஆழம்,
5 அடி அகலத்தில் குழிபறித்து, அதனுள் போட்டு மூடிவிட வேண்டும். இவை மட்கி உரமாகி, அடுத்த போகத்தில் நல்ல மகசூலைக் கொடுக்க உதவியாக இருக்கும்'' என்றார்.
வசம்புத் தைலம் !
அரை கிலோ வசம்பு, அரை கிலோ வெள்ளைப் புகையிலை ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு, இரண்டையும் ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். இந்தச் சாறுடன் ஒரு லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரைச் சேர்த்தால்... வசம்புத் தைலம் தயார். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வசம்புத் தைலம் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
பூண்டுக் கரைசல் !
வெள்ளைப் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி தலா ஒரு கிலோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயைச் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) அரைத்து வடிகட்டி எடுத்தால்... பூண்டுக் கரைசல் தயார். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பூண்டுக் கரைசல் என்ற விகிதத்தில் இதைப் பயன்படுத்தலாம்.
Source: pasumaivikatan
No comments:
Post a Comment