குறைவே இல்லாத வருமானம்... கொடையாக வரும் உற்சாகம்...
போலீஸ் இன்ஸ்பெக்டரின் சம்பங்கி சாகுபடி!
''எல்லாரோட வாழ்க்கையுமே இயந்திரமயமாயிட்டதால, எதையோ தொலைச்ச உணர்வு... எல்லா மனுஷனுக்குள்ளயும் இருக்கு. அதனாலதான் வாழ்க்கையை ரசிச்சு வாழணும்னு எவ்வளவு போராடினாலும், பலருக்கும் அது கைகூடுறதேயில்லை. அரசுப் பணியில் இருந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை நான் திரும்பவும் கையிலெடுத்த பிறகுதான், எனக்கு வாழ்க்கை திருப்தியா இருக்கு'' என்று உணர்வு பொங்கப் பேசுகிறார்... கரூர் மாவட்டம், க.பரமத்தி, வேட்டையார்பாளையம் கிராமத்தில் விவசாயம் செய்து வரும், மனோகரன். இவர், தமிழக காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
காவல் துறையில் இருந்து கழனிக்கு!
தோட்டத்து வேலைகளில் காலை நேரத்து உற்சாகம் பொங்க ஈடுபட்டிருந்த மனோகரனைச் சந்தித்தபோது... ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தார், தன் அனுபவங்களை, இப்படி- ''விவசாயம் எங்களுக்கு பரம்பரைத் தொழில். எனக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை கிடைச்சதால விவசாயத்தை விட்டுப் போயிட்டேன். அப்பாவுக்குப் பிறகு, விவசாயம் செஞ்சு ஜெயிக்க முடியுங்கிற நம்பிக்கையும் இல்லை. அதனால, நிலத்தை சும்மாதான் போட்டு வெச்சிருந்தேன். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருஷம் போலீஸ் வேலை செஞ்ச பிறகு, இப்போதான் எனக்கு 'விவசாயத்துலயும் ஜெயிக்க முடியும்’னு நம்பிக்கை வந்துருக்கு. அதுக்குக் காரணம் 'பசுமை விகடன்’தான். இதைப் படிக்க ஆரம்பிச்சுட்டுத்தான் நம்பிக்கையோட நிலத்துல கால் வெச்சுருக்கேன். விவசாயத் தொழில்ல கிடைக்கிற திருப்தி... வேற எதுலயும் கிடைக்கிறதில்லை.
பாதை காட்டிய பசுமை விகடன்!
'வானகம்' பண்ணையில நம்மாழ்வார் ஐயாகிட்ட ரெண்டு நாள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதேபோல, சுபாஷ் பாலேக்கர் ஐயாவோட ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாரதிதாசன் யுனிவர்சிட்டியில இயற்கை வழி வேளாண்மை படிப்பும் படிச்சேன். இந்த மூணையும் எனக்கு அறிமுகப்படுத்தினது, 'பசுமை விகடன்’தான். பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகு, ஜீவாமிர்தம் தயாரிக்கறதுக்காக நாட்டுப் பசு ஒண்ணு வாங்கியிருக்கேன்.
திண்டுக்கல், தவசிமடையைச் சேர்ந்த இன்ஜினீயர் மருதமுத்து பத்தியும் பசுமை விகடன்ல ஒரு செய்தி வந்திருந்தது.
'60 சென்ட்ல வருஷத்துக்கு ரெண்டரை லட்சம் வருமானம் பாக்குறார்’னு படிச்சதும் ஆச்சரியப்பட்டு அவர்கிட்ட போன்ல பேசுனேன். அவர் நேர்லயே வந்து ஆலோசனை கொடுத்ததோட, 250 கிலோ விதை கிழங்கையும் கொடுத்தாரு. அவர் சொன்னபடி, 70 சென்ட் நிலத்துல சம்பங்கி நடவு செய்ய ஆரம்பிச்சேன். 'இந்த மண்ணுல சம்பங்கி வராது’னு பலரும் கருத்து சொன்னாங்க. நான் எதுக்கும் கவலைப்படாம நடவு செஞ்சேன். இப்ப பாருங்க... சும்மா 'தளதள’னு வளர்ந்து நிக்குது சம்பங்கி'' என்று வயலில் விளைந்து நிற்கும் சம்பங்கியைக் கை காட்டினார் மனோகரன்.
தொடர்ந்து பேசிய மனோகரன், ''இப்ப சராசரியா தினமும் 5 கிலோ அளவுக்கு பூ வந்துக்கிட்டிருக்கு. இன்னும் போகப்போக அதிகமாகும். கரூர் பூ மார்க்கெட்டுக்குத்தான் அனுப்பிட்டுருக்கேன். அதனால தினசரி வருமானம் கிடைச்சுடுது. பனிக்காலத்துல மட்டும் பூ விளைச்சல் குறையும். மத்தபடி சம்பங்கி வளர்க்குறது, பேங்க்ல பணத்தைப் போட்டு வெச்ச மாதிரிதான்.
மொத்தம் 6 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, சம்பங்கி நடவு செஞ்சது போக மிச்ச இடங்கள்ல பெருநெல்லி, முருங்கை, எலுமிச்சை, மல்லி, மலைவேம்பு, செஞ்சந்தனம், வாழை, மா, கொய்யா, தீக்குச்சி மரம், தேக்கு, பப்பாளி, நாவல், கறிவேப்பிலை, தென்னை, பனை, ஊஞ்ச மரம்னு வெச்சுருக்கேன். எந்த இடத்தையும் சும்மா போட்டு வெக்கிறதில்லை. எல்லாமே பசுமை விகடன் படிச்சதோட பாதிப்புதான்'' என்றவர் நிறைவாக,
''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’னு சொல்ற மாதிரி, என்னைப் போல மத்தவங்களும் கத்துக்கிடணும்னு, என் கிராமத்தைச் சுத்தி இருக்குற அஞ்சு நூலகங்களுக்கு, 'பசுமை விகடன்’ கிடைக்குற மாதிரி ஆண்டு சந்தா கட்டியிருக்கேன். இன்னும் 50 நூலகங்களுக்கு ஆண்டு சந்தா கட்டலாம்னு இருக்கேன். எங்க பகுதியில ஆட்கள் கிடைக்கறது, கஷ்டமா இருக்கு. எனக்கும், வேலையில இருந்துகிட்டே விவசாயத்தைப் பாக்குறது சிரமமாத்தான் இருக்கு. ஆனாலும், விவசாயத்தால எனக்கு மன அமைதி கிடைக்குது. என் வாழ்க்கையில ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பசுமை விகடனுக்கு எப்பவும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்'' என்று நெகிழ்ச்சியோடு சொல்லி விடை கொடுத்தார், மனோகரன்.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்...
'சம்பங்கியை பனிக்காலத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம். 70 சென்ட் நிலத்தில் 5 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, கட்டியில்லாத அளவுக்கு இரண்டு மூன்று உழவு செய்ய வேண்டும். பிறகு, 3 அடி அகலம், அரை அடி உயரத்துக்கு நீளமான பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாருக்கும் இடையில் அரை அடி இடைவெளி இருக்கவேண்டும். சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனம், செய்பவர்கள் பாரின் மேல், குழாய்களை அமைத்துக் கொள்ளலாம். வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் அரை அடி (பாருக்கு பார் உள்ள இடைவெளி) இடைவெளியில் உள்ள வாய்க்கால் மூலமாக பாசனம் செய்யலாம். பாரின் இரண்டு ஓரங்களிலும் ஒன்றரை அடி இடைவெளியில் ஆழமாகக் குழி பறித்து... விதைக்கிழங்கை வைத்து மூட வேண்டும்.
தண்ணீர் தேங்கி நிற்காத வகையில்... மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப பாசனம் செய்து வந்தால் போதுமானது. அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். பயிருக்கு ஊட்டம் தேவைப்படும்போது, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா ஆகியவற்றில் ஏதாவதொன்றை பாசனத்துடனோ, இலை வழித்தெளிப்பாகவோ தரலாம். செடிகளுக்கு மூடாக்கு போட்டு விட்டால், தண்ணீர் தேவை குறைவதோடு களைகளும் மண்டாது. ஆறாவது மாதத்தில் இருந்து, மகசூல் எடுக்கலாம். தொடர்ந்து, மூணு வருஷம் விளைச்சல் கொடுத்துக்கிட்டே இருக்கும். அதுக்குப் பிறகு, புதுக்கிழங்கு நடவு பண்ணி திரும்பவும் மகசூல் எடுக்கலாம்'' என்கிறார், மனோகரன்.
Suurce:pasumaivikatan
No comments:
Post a Comment