Saturday

சவால் விட்ட ரசாயனம்... சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்... இயற்கையிலும் இனிக்கும் பன்னீர் திராட்சை!


சவால் விட்ட ரசாயனம்... சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்...
இயற்கையிலும் இனிக்கும் பன்னீர் திராட்சை!
தெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ... மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை... இளநீர் கடை ஆகியவையும் முளைத்திருக்கின்றன. எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி... நோயாளியைப் பார்க்க வருபவர்கள், ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி என வாங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கும் திராட்சையில்தான், 'அதிகளவு பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது’ என்பது பலரும் அறியாத உண்மை.
பெரும்பாலான பழங்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டாலும், விவசாயிகளுக்கு சவால் விடும் பழங்களில் ஒன்று திராட்சை. இதை, 'இயற்கையில் விளைய வைத்தோம்’ என்று யாராவது சொன்னால்... இயற்கை விவசாயிகள்கூட ஆச்சரியத்தோடுதான் பார்க்கிறார்கள். ஆண்டுக்கு முப்போகம் திராட்சை விளையும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்கூட,
'இயற்கை விவசாயத்தில் திராட்சையை சாகுபடி செய்ய முடியாது’ என்றுதான் உறுதியாக நம்புகிறார்கள். ஆனால், இக்கருத்தை அடித்து நொறுக்கி 'ஜீரோ பட்ஜெட்’ முறையில் திராட்சையை விளைய வைத்து, அசத்திக் கொண்டிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த ஜானகிராமன்.
மதுரை-திண்டுக்கல் சாலையில் காந்திகிராமத்துக்கு அடுத்துள்ளது, செட்டியப்பட்டி. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கிழக்கு திசையில் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்தால், ஜானகிராமனின் தோட்டம். சிறுமலை அடிவார ஜிலீர் காற்றில் சிலுசிலுக்கும் திராட்சைக் கொடிகள், ரோஜா தோட்டங்கள், தென்னந்தோப்பு எனப் பார்க்க பார்க்க பரவசம் கொடுக்கும் பசுமைச் சூழலில் திராட்சைப் பந்தலில் நின்றிருந்த ஜானகிராமனைச் சந்தித்தோம்.
வியாபாரத்தில் இருந்து விவசாயம் !
''எனக்குத் தொழில் விவசாயம் இல்ல. மதுரையில ரெடிமேட் துணிக்கடை நடத்திக்கிட்டு இருந்த என்னை, விவசாயத்துக்கு இழுத்துட்டு வந்ததே 'பசுமை விகடன்’தான். அதுல வர்ற கட்டுரைகளையும், விவசாயிகளோட அனுபவங்களையும் படிக்கும்போது, என்னை அறியாமலேயே விவசாயத்து மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுப் போச்சு. ஒரு கட்டத்துக்கு மேல கடைகளை, என் பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, விவசாயத்துக்காக நிலம் தேட ஆரம்பிச்சேன். பல இடங்கள்ல அலைஞ்சும் தோதான இடம் அமையல.
கடைசியா சிறுமலை அடிவாரத்துல இருக்குற இந்த இடத்தைப் பாத்ததும் மனசுக்குப் பிடிச்சுப் போச்சு. மொத்தம் 21 ஏக்கர். நான் வாங்கும் போதே 6 ஏக்கர்ல தென்னை, ஒன்றரை ஏக்கர்ல திராட்சை, ரெண்டு ஏக்கர்ல மா, ரெண்டு ஏக்கர்ல சப்போட்டா இருந்துச்சு. கொஞ்சம் தேக்கும் இருந்துச்சு. இங்க தண்ணிக்கு பிரச்னையே இல்ல. அதனால, நிலத்தோட விலையில மலைச்சு நிக்காம, உடனே வாங்கிட்டேன். ஏற்கனவே, தோட்டத்துல இருந்த வேலையாட்களையே நானும் வெச்சுகிட்டேன். நிலம் வாங்கற வரைக்கும் விவசாயத்தைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. பசுமை விகடனை மட்டுமே துணையா வெச்சுகிட்டு, துணிஞ்சு இறங்கினேன்' என்று முன்னுரை கொடுத்த ஜானகிராமன், தொடர்ந்தார்.
இயற்கை விவசாயம் தற்கொலைக்கு சமம் !
''இனிமே இந்த பூமியில ரசாயனம் படக்கூடாது. இயற்கை விவசாயம் மட்டும்தான் செய்யணும்னு சொன்னதும்... இங்க இருக்கற வேலையாளுங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சாங்க. நான் எதைப்பத்தியும் கவலைப்படல. 'நான் சொல்றதை மட்டும் செய்யுங்க, லாப, நஷ்டத்தைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையில்ல’னு சொல்லிட்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். ஏற்கெனவே இருந்த திராட்சையை, ரசாயன விவசாயத்துலதான் செஞ்சுகிட்டு இருந்தாங்க. அதை முதல்ல இயற்கை முறைக்கு மாத்தலாம்னு நினைச்சேன். ஆனா, நிறைய பேரு, 'இயற்கை முறையில திராட்சை உற்பத்தி பண்ண நினைக்கிறது, தற்கொலைக்கு சமம்’னு மிரட்டுனாங்க.
கற்றுக்கொடுத்த கர்நாடகா !
இப்படி எல்லாரும் சொன்னதே எனக்குள்ள ஒரு வேகத்தைக் கிளப்பி விட்டுச்சு. 'இயற்கையில சாத்தியமில்லாத விஷயம் எதுவுமே இல்லியே’னு தோணுச்சு. அதுவும் இல்லாம கர்நாடகாவுல ஜீரோ பட்ஜெட் முறையில திராட்சை விளையுறதா 'பசுமை விகடன்'ல ஏற்கெனவே படிச்சுருந்தது நினைவுக்கு வந்துச்சு. அதுல இடம்பிடிச்சுருந்த கர்நாடக மாநிலம், குல்பர்கா பகுதியைச் சேர்ந்த கும்பார் உள்ளிட்ட விவசாயிகளைத் தேடிப்போய் பாத்தேன். அவங்க ஜீரோ பட்ஜெட் முறையில திராட்சையை உற்பத்தி செய்றதை நேரடியாப் பாத்ததும் என்னோட நம்பிக்கை அதிகமாச்சு. அதோட எனக்கிருந்த சில சந்தேகங்களையும் தெளிவு பண்ணிக்கிட்டேன். ஊருக்கு திரும்பினதும் ஜீரோ பட்ஜெட் முறையில திராட்சையை சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டேன். 'பக்கத்துல எல்லாம் மருந்தடிக்குறப்ப நாம அடிக்காம இருந்தா, மனுவாகாது'னு (மகசூல் வராது) தோட்டக்காரர் புலம்பினாரு. ஆனா, நான் எதையும் காதுல வாங்கிக்கல.  
குழந்தைக்குக் கூட கொடுக்கலாம் !
இயற்கை விவசாயத்துக்கு மாறுன முதல் போகத்துல சொல்லிக்கிற மாதிரி மகசூல் கிடைக்கல. 'நான் சொன்னதைக் கேட்டிருந்தா இப்படி ஆகியிருக்குமா’னு தோட்டக்காரர் நக்கலா சொன்னார். 'என்ன ஆனாலும் பரவாயில்ல. கடைசிவரைக்கும் ஒரு கை பாத்துடுவோம்’னு தொடர்ந்து இயற்கையிலயே செஞ்சேன். ரெண்டாவது போகத்துல சுமாரான மகசூல். மூணாவது போகத்துல இருந்து, நானே எதிர்பார்க்காத அளவுக்கு பந்தல் முழுக்க பழமா காய்ச்சி தொங்கிடுச்சு. அதைப் பாத்த பிறகுதான் இயற்கை விவசாயத்து மேல எங்க ஆளுங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு. இந்த வருஷம் அக்கம்பக்க தோட்டங்கள்ல விளைஞ்ச அதே அளவு திராட்சை என் தோட்டத்துலயும் விளைஞ்சுருக்கு. ஆனா, அவங்களைவிட எனக்கு செலவு குறைச்சல். பழமும் விஷமில்லாம விளைஞ்சுருக்கு. வழக்கமா,திராட்சையை அதிகமா சாப்பிட்டா தொண்டை கமறும். ஆனா, இயற்கை முறையில விளைய வெச்ச இந்தத் திராட்சை எவ்வளவு சாப்பிட்டாலும், தொண்டை கமறாது. பச்சைக் குழந்தைக்குக் கூட கொடுக்கலாம். நீங்களே சாப்பிட்டு பாருங்களேன்'' என்றபடி ஒரு கொத்து திராட்சையைக் கையில் கொடுத்தார், ஜானகிராமன்.
உண்மைதான்... அதீத சுவையுடன், தொண்டையில் கரைந்து கொண்டு இறங்கியது அந்த திராட்சை. இரண்டு மூன்று குலைகளைச் சாப்பிட்ட பிறகும்கூட தொண்டைக் கமறல் இல்லாதது ஆச்சரியப்படுத்தியது.
தொடர்ந்த ஜானகிராமன், ''ஏற்கெனவே ரசாயன உரம் போட்டு வளர்ந்த செடிகள்ங்கிறதால, இந்தத் திராட்சையில பழைய ரசாயனங்களோட எச்சம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை, நம்மால கண்டுபிடிக்க முடியாது. அதனால, முழுக்க முழுக்க நடவுல இருந்தே இயற்கை முறையில திராட்சையை சாகுபடி செய்யணும்னு ரெண்டு ஏக்கர்ல திராட்சையை நடவு செஞ்சிருக்கேன்.
அதுக்கு இடையில ஊடுபயிரா நிலக்கடலையை சாகுபடி செஞ்சிருக்கேன். நிலக்கடலை இன்னும் பத்து நாள்ல அறுவடைக்கு வந்துடும். இதுபோக, பப்பாளி, நிலக்கடலை சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா தயாரிக்கிறதுக்காக ரெண்டு நாட்டு மாடுகளை வெச்சிருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, தனது திராட்சை சாகுபடி முறையைச் சொன்னார்.
அடிச்சு விரட்டும் அஸ்திரங்கள் !
''பழைய திராட்சைக் கொடியை கவாத்து பண்ணிட்டு, ஜீவாமிர்தத்தை ஒரு முறை தெளிச்சேன். கவாத்து செஞ்ச 10-ம் நாள் 300 லிட்டர் (ஒன்றரை ஏக்கருக்கு) ஜீவாமிர்தத்தைத் தெளிச்சேன். 20-ம் நாள் ஒரு லிட்டர் ஜீவாமிர்தம், 50 மில்லி பஞ்சகவ்யா ரெண்டையும் 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சேன். 10 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தையும், பஞ்சகவ்யா கலந்த ஜீவாமிர்தத்தையும் மாத்தி மாத்தி தொடர்ச்சியா தெளிச்சேன். 60-ம் நாள் 200 லிட்டர் தண்ணியில 5 லிட்டர் புளிச்சத் தயிரைக் கலந்து தெளிச்சேன். கத்தாழை பூச்சி தாக்குனப்போ, 10 லிட்டர் தண்ணியில அரை லிட்டர் அக்னி அஸ்திரத்தைக் கலந்து தெளிச்சேன்.
வேற பூச்சிகள் தாக்குனா, அக்னி அஸ்திரம் தெளிச்ச அளவுலேயே, நீம்அஸ்திரத்தைத் தெளிச்சேன். செடிகள வாட விடாம தண்ணி பாய்ச்சுறதால, எப்பவும் மண்ணுல ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கும். தோட்டத்துல இருக்கற நாட்டுக்கோழி, வான்கோழிகள் எல்லாம் திராட்சைப் பந்தலுக்குக் கீழே, மண்ணைக் கிளறி விட்டு மேயும். அதனால, களைகள் அதிகமா வர்றது இல்ல. தவறி விழுற பழங்களே இதுகளுக்கு சாப்பாடாயிடுது.
இதுபோக, வழக்கமான முறையில, களை எடுக்கறது, கொடி கிள்ளுறது மாதிரியான வேலைகளையும் தவறாம செஞ்சேன். போன முறை ஒண்ணரை ஏக்கர்ல இருந்து, நாலரை டன் திராட்சை கிடைச்சது. இந்த முறை இதுவரைக்கும் 5 டன் கிடைச்சுருக்கு. இன்னும் அறுவடை முடியல'' என்ற ஜானகிராமன் நிறைவாக,
ஒரு ஏக்கர்! ஒரு லட்சம் !
''இந்தப் பகுதியில வியாபாரிங்களே வயலுக்கு வந்து விலை பேசி, அறுவடை செஞ்சுட்டு போயிடுறாங்க. இந்த முறை கிலோ 30 ரூபாய் விலையில வித்தேன்.
5 டன்னுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். செலவு 30 ஆயிரம் ரூபாய் போக, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபம். இப்ப தினமும் மதுரையில இருந்துக்கிட்டு பண்ணைக்கு வந்து போயிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல பண்ணையில இருந்து அப்பப்ப மதுரைக்கு போயிட்டு வரலாம்னு நினைக்கிறேன். அந்தளவுக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கு விவசாயம். அதுக்கு நான் நிச்சயமா பசுமை விகடனுக்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று சொல்லி நெகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
ஜானகிராமன், செல்போன்: 91500-09998.

''இப்படி ஒரு சுவையை ஆயுசுக்கும் கண்டதில்ல!''
இயற்கை விவசாயத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து, தற்போது ஆதரவாளராக மாறியிருக்கும் ஜானகிராமனின் தோட்டக்காரர் கருப்பையாவிடம் பேசினோம். ''வழக்கமா உரம், மருந்து வெச்சுதான் வெள்ளாமை செய்வோம். ஆனா, இவங்க (ஜானகிராமன்), 'அதெல்லாம் கூடாது. மாட்டுச் சாணம், மூத்திரத்தை மட்டும் வெச்சு, வெவசாயம் பாக்கணும்’னு சொன்னதும், எனக்கு ஒண்ணும் விளங்கல. அவரு சொன்ன மாதிரி செஞ்சி, மனுவாகாமப் போச்சுன்னா, 'எங்களைத்தானே சொல்வாங்க’னு பயமா இருந்துச்சு. 'பக்கத்துத் தோட்டத்துல மருந்த அடிச்சு கிளப்புறாங்க, இவரு, எதை எதையோ அடிக்கச் சொல்றாரே’னு நினைச்சேன். இவரு சொன்ன மாதிரி செஞ்சா மகசூல் வரும்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஆனாலும், அவரு பேச்சைத் தட்ட முடியாம செஞ்சேன். ஆனா, அவரு சொன்ன மாதிரியே விளைஞ்சதைப் பாத்ததும் ஆச்சரியமாகிப் போச்சு. 'இத்தனை வருஷமா சம்சாரியா இருந்தும், நமக்கு இது தெரியாமப் போச்சே’னு வெக்கமாப் போச்சு. மத்த தோட்டக்காரங்களைவிட கம்மியான செலவுல, அமிர்தமா விளைஞ்சி நிக்குது பழங்க. என் ஆயுசுக்கும் திராட்சையில இப்படி ஒரு டேஸ்டை பாத்ததில்ல'' என்று சிலாகித்தார், கருப்பையா.

மாட்டுக்கிடை !
ஜானகிராமன் தோட்டத்தில் மலைமாடுகளை பட்டி அடைத்திருக்கிறார், வலையபட்டியைச் சேர்ந்த இலுங்கன்.
''என்கிட்ட மொதல்ல நூறு மாடுங்களுக்கு மேல இருந்துச்சு. இப்ப சரியா மழையில்லாம எங்கயும் மேய்ச்சல் இல்ல. அதனால கொஞ்சம் மாடுகளை கழிச்சுட்டேன். இப்ப 60 மாடுக இருக்கு. இதை பகல்ல வெளிய ஓட்டிட்டுப் போய் மேய்ச்சுட்டு, சாயங்காலமா கொண்டு வந்து பட்டி போடுற இடத்துல அடைச்சுடுவோம். இப்படிக் கிடை போடுறதுக்கு, ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 5 ரூபானு தோட்டக்காரங்க கொடுக்குறாங்க. இதை வெச்சுதான் எம் பொழப்பு ஓடுது. இந்தத் தொழிலும் அடுத்தத் தலைமுறை வரைக்கும் தாங்காது. மாடு வளக்குறதை கௌரவக் குறைச்சலா மனுஷன் நினைக்க ஆரம்பிச்சப்பவே கெடுதியும் ஆரம்பமாகிடுச்சு'' என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார், இலுங்கன்.


ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்!
திராட்சையில் ரசாயனம் தெளிப்பதால்தான் பழங்களின் மேல் புகைபடிந்ததைப் போல வெள்ளை நிறத்தில் ஒரு படிமானம் ஒட்டியிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இதுபற்றி விளக்கிய ஜானகிராமன், ''இயற்கை, ரசாயனம்னு எந்த முறையில விளைய வெச்சாலும், திராட்சையில வெள்ளை நிறத்துல புகைமாதிரி ஒரு படிமானம் வரத்தான் செய்யும். அதை தண்ணியில அலசிட்டு சாப்பிடலாம். ஆனா, ரசாயனம் தெளிச்ச திராட்சைகளை தண்ணியில அலசுனாலும், அந்தப் படிமானம் போகாது. இயற்கை முறையில விளைய வெச்ச திராட்சைகளை, தண்ணியில அலசினா படிமானம் போயிடும். இதை வெச்சே பழம் இயற்கை முறையில விளைஞ்சதா. ரசாயனத்துல விளைஞ்சதானு கண்டுபிடிச்சுடலாம்'' என்றார்.

Source:pasumaivikatan

No comments: