இயற்கையை நோக்கி செல்ல
செல்ல... இயற்கை நம்மை நோக்கி சிரித்து வரும். இதமாய் விளைச்சல் தரும். இன்னல் இல்லாத
விளைபொருளைத் தரும். ரசாயன உரம் உடனடி பலனைத் தந்தாலும், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்போதாவது விழித்துக்
கொண்டோமே... என நினைக்கும் விவசாயிகள், இயற்கை விவசாயத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். மதுரை டி.வாடிப்பட்டி,
சாணம்பட்டியைச் சேர்ந்த விவசாயி
கே.சிவசாமி, தனக்கு மட்டுமின்றி,
மற்ற விவசாயிகளுக்குத் தேவையான
மண்புழு உரத்தை தயாரித்து வருகிறார்.
அனுபவத்தில் இருந்து
பாடம் கற்றுக் கொண்டு, அதையே தனது லாபம்
தரும் தொழிலாக மாற்றியதை கூறுகிறார்.
பத்து ஏக்கர் நிலத்தில்
ஆரம்பத்தில் எல்லா வகையான விவசாயமும் செய்து வந்தேன். அப்போதெல்லாம் ரசாயன உரம் தான்
எனக்குத் தெரிந்தது. 2002ல் கதர் கிராமத் தொழில்கள்
ஆணையத்தின் மூலம் மண்புழு உரப்பண்ணை அமைக்க, ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். ரூ.ஒன்றரை லட்சம் மானியம் கிடைத்தது. தரையில் 80 சிமென்ட் தொட்டி அமைத்து மண்புழு உரத்தயாரிப்பை
துவங்கினேன்.
சிமென்ட் தொட்டியில்
உர உற்பத்தி தாமதமாக இருந்தது. அடியில் உள்ள கழிவுகளை புழு சாப்பிடவில்லை. கிடைப்பது
கிடைக்கட்டும் என, கழிவுகளை தென்னை மரத்திற்கு
கீழே கொட்டினேன். சிலநாட்கள் கழித்து பார்த்தபோது, அந்த கழிவுகளை புழுக்கள் தின்று உரமாக மாற்றின.
திறந்தவெளி தென்னந்தோப்பில் மண்புழு பண்ணை அமைத்து பார்க்க முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில் 20 அடி நீளம், நான்கடி அகலத்திற்கு செங்கற்களை பாத்தி போல் அமைத்தேன்.
அதில் 80 டன் மாட்டுச்சாணம்,
20 சதவீதம் சர்க்கரை கழிவை கலந்து
கொட்டி, 15 கிலோ புழுக்களை விட்டேன்.
25 நாட்களில் மேற்பகுதி உரமாக
மாறியிருந்தது. பத்து நாட்கள் இடைவெளியில் ஏழுமுறை அறுவடை செய்தேன். 80 நாட்களில் மொத்த கழிவும் உரமாக மாறியது. தற்போது
செங்கல் அமைப்பதையும் விட்டு விட்டேன்.
தென்னந்தோப்பில் இரண்டு
தென்னைகளுக்கு ஊடாக மொத்தம் 120 படுக்கைகளில் உரம்
தயாரிக்கிறேன். மழைபெய்தாலும் சிறிது நேரத்தில் புழுக்கள் மீண்டும் படுக்கைக்கு வந்து
விடும். இதனால் நஷ்டமில்லை. மாதம் 800 டன் உரம் தயாரிக்கிறேன். தமிழகம், கர்நாடகாவில் 20 சதவீதம்,
கேரளாவில் 80 சதவீதம் விற்பனையாகிறது. விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும்
விலையில் இருந்தால் தான், உரம் வாங்குவர். எனவே,
ஒருகிலோ ரூ.3.50க்கு விற்பனை செய்கிறேன். குறைந்த லாபம் கிடைத்தால்
போதும். தென்னந்தோப்பிற்கும் இதையே தருகிறேன். பத்தாண்டுகளாக வேறெந்த ரசாயன உரம்,
பூச்சிகொல்லியை பயன்படுத்தவில்லை.
சாணத்தோடு அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ பாக்டீரியா,
பொட்டாஷ் பாக்டீரியா நுண்ணுயிர்
கலந்து, பஞ்சகாவ்யம் தெளித்து
வளர்ப்பதால், உரத்தில் நுண்ணுயிர்கள்
பெருகி இருக்கும். விளைச்சலும் அதிகரிக்கும். ஒரு கிலோ மண்புழு ரூ.250க்கு தருகிறேன். தொட்டிக்கு பணம் செலவிடுவதை விட,
இயற்கையான முறையில் மண்புழு
வளர்த்தால், இருமடங்கு உரம் கிடைக்கும்,
என்றார்.
உரம் வாங்குவதற்கு:99947
98312.
Source:http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15584&ncat=7&Print=1
No comments:
Post a Comment