25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் !
மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...
'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.
'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!
''எனக்கு நாலு ஏக்கர் தோட்டம் இருக்கு. மணல் கலந்த செம்மண் பூமி. மஞ்சள், மக்காச்சோளம், கடலை, கரும்பு, புகையிலைனு எதைப் போட்டாலும் நல்லா வரும். ஆனா, தண்ணிதான் கொஞ்சம் பத்தாக்குறை. கிணறு, போர் ரெண்டும் இருந்தாலும், கொஞ்சம் தட்டுப்பாடுதான். கிடைக்கிற தண்ணியை வெச்சு நாலு ஏக்கர்லயும் ஒரே சமயத்துல சாகுபடி பண்ண முடியாது. 'குறைவான தண்ணியை வெச்சு என்ன பயிர் பண்ணலாம்?’னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப மல்பெரி விவசாயத்தைப் பத்தி என் மனைவி மகேஸ்வரி சொன்னாங்க'' என முன்னுரை கொடுத்த மூர்த்தி தொடர்ந்தார்.
''பட்டுப்புழு வளர்ப்புக்கு முக்கியமானது, மல்பெரி. மனைவி கொடுத்த தைரியத்துல இதை வளக்க ஆரம்பிச்சு பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கி, வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருக்கேன். மல்பெரி செடிகள்ல பல ரகங்கள் இருக்கு.
ஆரம்பத்துல 'எம்.ஆர்-2’ங்கிற ரகத்தைத்தான் வளத்தோம். அப்பறம், 'வி-1’ங்கிற ரகத்தை பட்டுவளர்ச்சித் துறை விஞ்ஞானிங்க வெளியிட்டாங்க. இதுல புரதம் அதிகமா இருக்கறதோட, மகசூலும் அதிகம் கிடைக்குது. இதை ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்கேன். ஏழு வருஷம் வரைக்கும் அறுவடை செய்யலாம்'' என்றவரை இடைமறித்து, தான் பேச ஆரம்பித்தார், மகேஸ்வரி.
''இன்னிய தேதியில் வெண்பட்டு உற்பத்தியில கொடிகட்டி பறக்கிறது, கோபிச்செட்டிப்பாளையம் ஏரியாதான். ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வெண்பட்டு உற்பத்தியில ஈடுபட்டு இருக்காங்க. அதனால மல்பெரி செடி சாகுபடியும், தேவையும் அதிகரிச்சுட்டே வருதுங்க. குறிப்பா, வி-1 ரகத்துக்கு அதிக தேவை இருக்கு.
பொதுவா, மல்பெரிக்கு விதைக் கரணைகளைத்தான் நடுவாங்க. ஆனா, விதைக்கரணைகளை நடும்போது நிறைய பேருக்கு சரியா வளர்றதில்லை. அதுக்கு தீர்வு கேட்டப்போ 'நாற்று முறையில நடவு செஞ்சா நல்லா வரும்’னு அதிகாரிகள் சொன்னாங்க. நாமளே ஏன் நாத்து உற்பத்தி பண்ணக்கூடாதுனு தோணுச்சு. அதை வீட்டுக்காரர்கிட்ட சொன்னப்போ ரெண்டு பேருக்குமே அது சரினு பட்டது. அதனால, வீட்டுக்குப் பக்கமா இருக்குற 25 சென்ட் நிலத்துல வி-1 ரகத்தை நட்டு நாத்து உற்பத்தியை ஆரம்பிச்சுட்டோம்' என்ற மகேஸ்வரி நிறைவாக,
'இந்த ரகத்துல அதிகமான புரதச்சத்து இருக்கறதால கறவை மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதை தீனியா கொடுக்குறாங்க. இதைச் சாப்பிடுற மாடுகள் அதிகமா பால் கறக்கும். ஆடுகள் வேகமா வளரும். அதனால, நிறைய பேருக்கு தேவை இருக்கறதால, நாத்து விற்பனைக்கு பிரச்னையே இல்லை. ஒரு நாத்து 2 ரூபாய்னு வித்துகிட்டிருக்கோம்.
25 சென்ட் மூலமா அஞ்சு மாசத்துல ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக 80 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடை கொடுத்தார்.
'இப்படித்தான் நாத்து உற்பத்தி செய்யணும்...’
நாற்று உற்பத்தி செய்யும் முறையைப் பற்றி மூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...
நாற்று உற்பத்திக்காக விதைக் கரணைகளை நடவு செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஏற்றவை. தென்னை நிழல் இருக்கும் பகுதியில்கூட நாற்றங்கால் அமைக்கலாம். 25 சென்ட் நாற்றங்காலில் 4 டன் தொழுவுரம், 5 கிலோ நுண்ணுயிரி உரம் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிலத்தை சமப்படுத்தி, அரையடி இடைவெளியில் பார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரில், 4 அங்குல இடைவெளியில், விதைக்கரணைகளை நடவு செய்ய வேண்டும். பாசனத்துக்கு தெளிப்புநீர் முறையை அமைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை பாசனம் செய்து வர வேண்டும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து, களை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக, எந்த ரசாயன உரங்களையும் செடிகளுக்கு இடக் கூடாது. அப்படிக் கொடுத்தால் வேர் அழுகல் நோய் தாக்கிவிடும். தெளிப்புநீர்ப் பாசன முறையில் பூச்சிகள் தாக்குவதில்லை. அதனால், பூச்சிக்கொல்லிகள் தேவையே இல்லை. அப்படியே பூச்சிகள் தாக்கினாலும், ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டி கட்டுப்படுத்தி விடலாம்.
130 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளைப் பறித்து விற்பனை செய்யலாம். அனைத்து நாற்றுக்களையும் ஒரே சமயத்தில் பறிக்கக் கூடாது. உதாரணமாக, 50 ஆயிரம் நாற்றுகள் இருந்தால்... முதலில் 20 ஆயிரம், அடுத்து 10 ஆயிரம், கடைசியாக 20 ஆயிரம் என்ற கணக்கில் பறிக்க வேண்டும்.
தொடர்புக்கு, மூர்த்தி, அலைபேசி: 98427-23677
No comments:
Post a Comment