Wednesday

வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள்


வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் பண்டைக்காலம் முதலே தொன்று தொட்டு அனைத்து மக்களாலும் உண்ணப்பட்டு வந்துள்ளது. வாத்து இறைச்சியில் மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக அதிக அளவிலான பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. தற்போது கோழி இறைச்சி பிரபலமடைந்துள்ளது போல் வாத்து இறைச்சி அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதில்லை.


சாதாரணமாக, வாத்துக்கள் அதிக அளவில் பெரிய முட்டைகளை இடவல்லவை. மேலும் வாத்துக்களை வீட்டுப்புறத்தில் வளர்ப்பதன் மூலம் வீட்டின் அன்றாடத் தேவையான உணவும், வருமானமும், கிடைக்க ஏதுவாக அமையும். அது மட்டுமல்லாமல் வாத்துக்கள் குறைந்த அளவிலான தீவனத்தை உட்கொண்டு நல்ல உடல் எடையை அடைந்து முட்டையிடும் திறனையும் கொண்டுள்ளதால், குறைவான உற்பத்திச் செலவில் வாத்துக்களை வளர்த்து அதிக இலாபம் அடையலாம்.



வாத்து இறைச்சியின் குணாதிசயங்கள்: வாத்து இறைச்சியின் கொழுப்பில் உள்ள பாஸ்போலிபிட் என்ற வேதிப்பொருள், குறிப்பிடத்தக்க இறைச்சி வாசம் வருவதற்குக் காரணமாக அமைகிறது. வாத்து இறைச்சியில் இரும்புச் சத்தும், ஹீம் எனப்படும் வண்ண ஊக்கியும் அதிகளவில் உள்ளதால் இவ்வகை இறைச்சி மற்ற கோழி இறைச்சியை காட்டிலும் வண்ணம் மிகுந்ததாகக் காணப்படுகிறது.

கோழி இறைச்சியைப் போலவே, வாத்து இறைச்சியிலும் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளதால், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற இறைச்சியாக கருதப்படுகிறது.

வாத்து இறைச்சியின் தன்மை, வாத்து இனத்தை மற்றும் தீவனத்தை மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக வெள்ளை பெகின் வாத்து இறைச்சி மஸ்கோவி இனத்தைக் காட்டிலும் அதிகக் கொழுப்பு நிறைந்த இறைச்சியாகும்.

வாத்து இறைச்சியில் அதிகளவில் ஒலியிக் அமிலம் எனப்படும் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பால்மிடிக் அமிலமும் உள்ளது. வாத்து இறைச்சியின் தீவனத்தில் மாற்றம் செய்வதன் மூலம் அதிகளவில் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள் உள்ளவாறு மாற்றி அமைக்கலாம்.

இறைச்சிக்காக வளர்க்கப்படும் வாத்துக்கள் 7 முதல் 8 வார வயதில், விற்பனை செய்யப்பட வேண்டும். சுவை மற்றும் சத்து மிகுந்த விலங்கினப் புரதமான இறைச்சி மற்றும் முட்டையை அதிகளவில் குறைவான காலகட்டத்தில் உற்பத்தி செய்ய வல்லவை. எனவே வாத்து இனங்கள் மனிதர்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்து மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு இறைச்சியைக் குறைவான செலவில் அளிக்கவல்ல ஒரு வரப்பிரசாதமாக அமையும் என் பது ஒரு திடமான கருத்தாகும். தகவல்: இர.க.கனிமொழி, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51.
கே.சத்தியபிரபா, உடுமலை.

No comments: