ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...
குதூகலமூட்டும் குறும்புடலை!
'வேலையாட்கள் குறைவாகத்தான் தேவைப்பட வேண்டும்; அதிக வேலை வைக்கக் கூடாது; நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும்...'
-நீங்கள், இப்படியெல்லாம் கணக்குப் போட்டு விவசாயம் செய்பவராக இருந்தால், உங்களுக்கான விவசாயம்... பந்தல் காய்கறிகளாகத்தான் இருக்க முடியும். ஆம், இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் விவசாயிகள் பலரும், தொடர்ந்து பந்தல் வகை காய்கறிகளைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்... திருவண்ணாமலை, வேங்கிக்கால், சுரேஷ்குமார்! இவர், குறும்புடலை சாகுபடியில், குதூகல வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்!
திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில், பதினெட்டாவது கிலோ மீட்டரில் வருகிறது, மங்கலம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் ஆர்ப்பாக்கம். இங்கேதான் இருக்கிறது... சுரேஷ்குமாரின் தோட்டம்! நெல், கரும்பு, நிலக்கடலை... என பல வகைப் பயிர்களோடு, குறும்புடலையும் நம் கவனத்தை ஈர்க்கிறது.
புடலை அறுவடையில் ஈடுபட்டிருந்த சுரேஷ்குமார், ''பிறந்து, வளர்ந்தது எல்லாமே திருவண்ணாமலையிலதான். டிப்ளமோ இன்ஜினீயரிங் படிச்சேன். வேலை கிடைக்காததால, ஃபிரண்ட்ஸோட சேர்ந்து, அரிசி வியாபாரம் செஞ்சேன். மூட்டை கணக்குல நெல் வாங்கி, அரைச்சு விப்போம். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடைச்சுது. ஆனா, ஒரு கட்டத்துல பணத்தை வசூல் பண்றதுல தொய்வு வந்துடுச்சு. பல பேர் திருப்பிக் கொடுக்காம போனதால, பெரிய நஷ்டம். அதனால... அப்பா வாங்கிப் போட்டிருந்த நிலத்துல விவசாயத்தைப் பாக்கறதுக்கு வந்தேன்.
எங்க பாட்டி மூலமா, சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயம் அறிமுகம்தான். அந்த தைரியத்துல முதல் போகத்துலேயே கரும்பு போட்டேன். ஏக்கருக்கு 40 டன் மகசூல் கிடைச்சுது. செலவு போக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயைத்தான் லாபமா பாக்க முடிஞ்சுது. 'இந்த லாபத்துக்கு விவசாயம் பண்ணினா... கட்டுப்படியாகாது'னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஆட்கள் தேவையைக் குறைத்த பந்தல்!
'நல்ல லாபம் கிடைக்கறதுக்கு எதைப் பயிரிடலாம்'ங்கற தேடல்லயே இருந்தேன். அப்ப ஒரு நாள், நண்பர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்சதுல... 'காய்கறி சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் வரும்’னு தெரிஞ்சுக்கிட்டு... 40 சென்ட்ல சுரைக்காய் போட்டேன். செலவுபோக 40 ஆயிரம் கிடைச்சுது. பிறகு... 3 ஏக்கர்ல வெண்டை, கத்திரி, மிளகாய்னு சாகுபடியில இறங்கினேன். நல்ல வருமானம். ஆனா... வேலையாட்கள் அதிகமா தேவைப்பட்டாங்க. சிலர்கிட்ட யோசனை கேட்டப்போதான், பந்தல் காய்கறியை முயற்சி பண்ணச் சொன்னாங்க. பாகல், பீர்க்கன், புடலை மூணையும் தனித்தனியா சாகுபடி செஞ்சேன். ஒரு ஏக்கர்ல 15 டன் பாகல், 18 டன் பீர்க்கன், 23 டன் புடலைங்கற கணக்குல மகசூல் கிடைச்சுது. மூணுலயும் புடலை சாகுபடிதான் வசதியா இருந்துச்சு. அதனால, குறும்புடலையை மட்டும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சுரேஷ்குமார்,
இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!
''மொத்தம் 12 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 9 ஏக்கர்ல நெல், 3 ஏக்கர்ல குறும்புடலை இருக்கு. ஆரம்பத்துல முழுக்க முழுக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும்தான் பயன்படுத்தினேன். 'பசுமை விகடன்', 'கேத்தனூர்’ பழனிச்சாமி' ரெண்டு பேரும் தந்த தைரியத்துல... இயற்கை விவசாயத்துல கால் வெச்சேன். கோழி எரு, மாட்டு எரு, சூடோமோனஸ், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கொஞ்சம் கொஞ்சமா இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறேன். இன்னும் கொஞ்ச நாள்ல முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்'' என்று சந்தோஷ குரலில் சொன்னார்!
10 மாத வயது!
அவர் சொன்ன சாகுபடி முறைகளைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
''குறும்புடலையின் சாகுபடி காலம் 10 மாதங்கள். இதற்கு ஆடிப்பட்டம் ஏற்றது. செம்மண் கலந்த, மணற்பாங்கான பூமியில் நன்கு விளையும். ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் ஒரு டிப்பர் மாட்டு எரு, தலா அரை டிப்பர் ஆட்டு எரு மற்றும் கோழி எரு ஆகியவற்றைக் கலந்து கொட்டி கலைத்து... மண் பொலபொலப்பாக மாறும் அளவுக்கு மூன்று சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 12 அடி நீளம் கொண்ட மூங்கிலை, எட்டு அடி இடைவெளியில், ஒன்றரையடி ஆழத்தில் நட்டு, தரையில் இருந்து ஐந்தடி உயரத்தில் 'ஸ்டே’ கம்பியில் இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கம்பிகளுக்கிடையில் அரையடி இடைவெளியில், தடிமனான 'நைலான் ஒயர்’களால் பின்னி, பந்தல் தயார் செய்ய வேண்டும். இந்த முறையில் பந்தல் அமைக்க, ஏக்கருக்கு 800 மூங்கில், 120 கிலோ ஸ்டே கம்பி, 35 கிலோ நைலான் ஒயர் தேவைபடும். பந்தலை ஐந்தாண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு 600 கிராம் விதை!
வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளியும் (ஒரு மூங்கில் தூண் விட்டு, ஒரு மூங்கில் தூண் அருகில்), செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளியும் கொடுத்துச் சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்துக்கு பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கி, 2 அடி இடைவெளியில் குத்துக்கு ஒரு புடலை விதை வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில், ஆயிரத்து 200 விதைகளை நடவு செய்யலாம் (ஏக்கருக்கு 600 கிராம் விதை தேவைப்படும்). நடவு செய்யும்போதே தனியாக நாற்று உற்பத்தித் தட்டில் 100 நாற்றுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இடை உழவுக்கு மினி டிராக்டர்!
நடவு செய்த 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும். சரியாக முளைக்காத இடங்களில், தனியாக உற்பத்தி செய்திருக்கும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 6 கிலோ கடலைப் பிண்ணாக்கை, 60 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து, 15-ம் நாளில் செடிக்கு 50 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 20-ம் நாள் முதல் மாதம் ஒரு முறை வீதம், மூன்று மாதங்களுக்கு... செடிகளைச் சுற்றிலும் கைகள் மூலமாகவும், இடைவெளிப் பகுதிகளில் மினி டிராக்டர் மூலமாகவும் களைகளை அகற்ற வேண்டும். அதற்கு மேல், கொடியானது பந்தலில் அடர்ந்து மூடிக்கொள்வதால், களை எடுக்க வேண்டியிருக்காது.
ஊட்டம் கொடுக்கும் கோழி எரு!
மண்ணின் தன்மையைப் பொருத்துப் பாசனம் செய்தால் போதுமானது. 20-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா (ஏக்கருக்கு 3 லிட்டர்) அல்லது ஜீவாமிர்த கரைசல் (ஏக்கருக்கு 10 லிட்டர்) என மாற்றி மாற்றி சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். 30, 60 மற்றும் 90-ம் நாளில் 19:19:19 நீரில் கரையும் உரத்தை, டேங்குக்கு 100 கிராம் வீதம் கலந்து இலை வழி உரமாகத் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 8 டேங்குகள் தேவைப்படும். 35-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்கு ஒரு கிலோ வீதம் கோழி எருவை வேர் பகுதியில் வைக்க வேண்டும். 40-ம் நாளில் தலா 50 கிலோ வீதம் புங்கன் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து... ஒவ்வொரு செடிக்கும் 100 கிராம் வைக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால், இயற்கைப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கலாம்.
20-ம் நாளில் இருந்து செடிகளில் பக்கக் கிளைகள் வரும். அதில் நேராக செல்லும் கொடியை மட்டும் 'ஒற்றைப்பிரி’ சணலால் கட்டி பந்தலில் ஏற்றிவிட வேண்டும். மற்றக் கிளைகளை அகற்றிவிட வேண்டும். 45-ம் நாளில் பூ வைத்து, 50 முதல் 60-ம் நாளில் பிஞ்சாக மாறி, 70-ம் நாளிலிருந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.’
ஒரு ஏக்கரில் 34,500 கிலோ!
நிறைவாக பேசிய சுரேஷ்குமார், ''இங்க விளையுற புடலையை சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுலதான் விற்பனை செய்றேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு அறுவடை செய்யலாம். மொத்தம் 115 அறுவடை வரும். ஒரு ஏக்கர் நிலத்துல அறுவடைக்கு 250 கிலோவில் இருந்து 350 கிலோ அளவுக்கு புடலங்காய் கிடைக்குது. சராசரியா, 300 கிலோனு கணக்குப் போட் டாலே... 34,500 கிலோ மகசூல் கிடைச்சுடும். கிலோ சராசரியா 8 ரூபாய்னு விற்பனை யாகுது. இதன்படி கணக்குப் போட்டா... ரெண்டு லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய் வருமானம். பந்தல் செலவு, மத்த செலவுகள்னு எல்லா செலவுகளும் போக ஒரு லட்சம் ரூபாய் லாபம். பந்தல் செலவு முதல் வருஷம் மட்டும்தான். அடுத்த நாலு வருஷத்துக்கு... அந்த 68 ஆயிரமும் லாபத்துல சேர்ந்துடும்'' என்று வெற்றிக் களிப்புடன் சொன்னார்!
தொடர்புக்கு,
சுரேஷ்குமார்,
செல்போன்: 99447-42928.
சுரேஷ்குமார்,
செல்போன்: 99447-42928.
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
Source:pasumaivikatan
No comments:
Post a Comment