Friday

ஒருங்கிணைந்தப் பண்ணையம் - நெல், தென்னை, ஆடு, கோழி, புறா, முயல், வாத்து.

புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''


இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'ஜீரோ பட்ஜெட் பிதாமகன்' சுபாஷ் பாலேக்கர்... போன்ற வேளாண் ஆர்வலர்களும், விவசாயப் பொருளியல் நிபுணர்களும் இப்படித்தான் வலியுறுத்திக் கொண்டுள்ளனர்.


பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்' எனும் இந்தக் கோட்பாடு, இடையில் பசுமைப் புரட்சி காரணமாக கரைய ஆரம்பித்தாலும்... தற்போது மீண்டும் வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக லாபம் பார்க்கும் விவசாயிகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சிவிக்காடு-அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த வைரக்கண்ணு.

''சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துலயும் கால்நடை வளர்ப்புலயும் அதிக ஆர்வம். பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு விவசாயத்தைப் பாக்க வந்துட்டேன். கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு அனுபவங்களை ஏற்படுத்திக்கிட்டு... சம்பாதிச்சதுலதான் இப்போ, எட்டு ஏக்கர்ல ஒருங்கிணைந்தப் பண்ணையத்தை உருவாக்கி இருக்குறேன். ரெண்டு ஏக்கர்ல தென்னை, ரெண்டு ஏக்கர்ல கோ-4, ஒரு ஏக்கர்ல தீவனச் சோளம் இருக்கு. மூணு ஏக்கர்ல வழக்கமா இரு போகம் நெல் போடுவேன். அதே நிலத்துல கோடையில ஒரு போகம் சோளம், நிலக்கடலை, எள்ளு, உளுந்துனு போட்டு எடுத்துடுவேன்.

தென்னந்தோப்புக்கு உள்ளயே தனித்தனியா கொட்டகை போட்டு, அதுல 500 நாட்டுக்கோழி, 15 ஆடு, 50 ஜோடிப் புறா, 10 முயல், 9 மாடுங்கனு வளர்த்துட்டு இருக்கேன். இதில்லாம, 15 வாத்துகளும் இருக்கு. வேலி ஓரத்துல சூபாபுல், கிளரிசீடியா, கல்யாணமுருங்கை, வேம்பு, ஒதியன், நுணா மரங்கள் இருக்கு. பக்கத்துல இருக்குற பஞ்சாயத்துக்குச் சொந்தமான ரெண்டு குளத்தைக் குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்த்துட்டு இருக்கேன்'' என்று தன்னுடைய ஒருங்கிணைந்தப் பண்ணை பற்றிய முன்னுரையைக் கொடுத்த வைரக்கண்ணு, பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார்.


களை எடுக்கும் கால்நடைகள்!


''தென்னந்தோப்புல மரங்களுக்கு இடையில களைகளை எடுக்கறதுக்காக உழவெல்லாம் ஓட்டுறதில்லை. தண்ணியையும் தாராளமா கொடுக்கறதில்லை. பத்து நாளைக்கு ஒரு தடவைனு காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தண்ணி பாய்ச்சுவேன். இப்படிச் செய்றதால... தென்னையோட சல்லி வேர்கள் அழுகாம இருக்கும். மண்ணும் இறுகாம இருக்கும். களைகள், புல் பூண்டுகளை... கோழி, வாத்து, ஆடு, மாடுகள் சாப்பிட்டுடும். இந்தச் செடிகளை அறுத்து, முயலுக்கும் கொடுப்போம். ஆடு, மாடுகள் மேயுறதால, அதுகளோட கழிவுகள் தோப்புல விழுந்து, மண் நல்ல வளமா இருக்கு. ஏகப்பட்ட மண்புழுக்களும் இருக்கு. அதனால, தென்னைக்கு எந்த ஊட்டமும் கொடுக்காமலே செழிப்பா இருக்கு. 


கழிவிலிருந்து உரம்!


கால்நடைக் கழிவுகள், இலை தழைகள் எல்லாத்தையும் வெச்சு, வருஷத்துக்கு 3 டன் மண்புழு உரம் தயாரிக்குறோம். ரொம்ப வருஷமா ஒரு தென்னை மரம் சரியா காய்க்காம இருந்துச்சு. அதை வெட்டிடலாமானுகூட யோசிச்சுட்டு இருந்தோம். அந்த சமயத்துல யதார்த்தமா அந்த மரத்துக்குப் பக்கத்துல மண்புழு உரம் தயாரிக்க படுகை போட்டோம். கொஞ்ச நாள்லயே அந்த மரம் அருமையா காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. அதனால, இங்க வெள்ளாமை வைக்கிற எல்லா பயிர்களுக்கும் இதைத்தான் உரமா போடுறோம். அதோட பஞ்சகவயாவையும் தெளிச்சு விடுவோம். வேற எந்த ஊட்டத்தையும் பயன்படுத்துறதில்லை.

செலவைக் குறைக்கும் மாட்டு வண்டி!

ரெண்டு வண்டி மாடுகள், ஏழு கலப்பினப் பசுக்கள் இருக்கு. சூபாபுல், தீவனச் சோளம், கிளரிசீடியா, கோ-4, சோளத்தட்டை எல்லாத்தையும் கலந்து, ஒரு மாட்டுக்கு தினமும்


7 கிலோ அளவுக்கு பசுந்தீவனம் கொடுக்குறோம். வண்டி மாடு இருக்குறதால போக்குவரத்துச் செலவும் அதிகமா இருக்கறதில்லை. எப்பவும் 3 மாடு கறவையில இருக்கும். தினமும்

20 லிட்டருக்குக் குறையாம பால் கிடைக்குது'' என்ற வைரக்கண்ணு, கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.


மேய்ச்சல் முறையில் நாட்டுக் கோழிகள்!


''தாய்க்கோழியா 90 பெட்டைகள், 10 சேவல்கள் இருக்கு. இதில்லாம, வெளியில இருந்து வாங்கின 400 நாட்டுக் கோழிக்குஞ்சுகளும் இருக்கு. ஒருநாள் வயசுள்ள குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். குஞ்சுகளுக்கு ஒரு மாசம் வரைக்கும் கம்பெனி தீவனம் வாங்கிப் போடுவோம். அதுக்கப்பறம், நாங்களே தயாரிக்குற தீவனத்தைக் கொடுத்துடுவோம். ஒருநாள் வயசுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு கோழிக்கு ரெண்டரை கிலோ தீவனம் கொடுக்க வேண்டியிருக்கும். வருஷத்துக்கு இதுமாதிரி 1,400 குஞ்சுகளை வளர்த்து வித்துட்டு இருக்கேன். எங்ககிட்ட இருக்குற கோழிகள் மூலமா கிடைக்கிற குஞ்சுகளையும் இதேபோல வளர்த்து விற்பனை செய்றோம். நாட்டுக்கோழி முட்டைகளையும் தனியா விற்பனை செய்றோம். கோழிகள் இங்கேயே மேய்ஞ்சுடும். இருந்தாலும், தினமும் அரிசி, குருணை, தவிடு எல்லாத்தையும் கலந்து போடுவோம். அப்பதான் நாம கூப்பிட்டா கோழிகள் ஓடி வரும்'' என்று சொல்லிக்கொண்டே... தீவனத்தை அள்ளி வீசிய வைரக்கண்ணு ஆடு, முயல், வாத்து ஆகிய வற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.


பரணில் ஆடுகள்... கூண்டில் முயல்கள்!


''ஜமுனாபாரி ரகத்துல 2 கிடாவும், 6 பெட்டையும் இருக்கு. நாட்டு ஆடுகள்ல 3 பெட்டையும், 4 குட்டிகளும் இருக்கு. நாட்டு ஆடுகளோட, ஜமுனாபாரி கிடாவை இனச்சேர்க்கை செய்யும்போது தரமான குட்டிங்க கிடைக்குது. ஜமுனாபாரி ஆடுகளை பரண் அமைச்சு வளர்க்குறோம். ஆடுகளுக்கு எங்க தோட்டத்துல கிடைக்கிற பசுந்தீவனத்தையே கொடுத்துடுவோம். ஆடுகள் மூலமா கிடைக்கிற குட்டிகளை, எட்டு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். ஜமுனாபாரி ஆடுகளை நாட்டு ஆடுகளோடு கலக்காம விற்பனை செய்றதால... நல்ல விலை கிடைக்குது.


கூண்டு முறையில 8 பெட்டை முயல் களையும், 2 ஆண் முயல்களையும் வளர்க் கிறோம். இங்க விளையுற பசுந்தீவனங்களைத் தான் முயல்களுக்கு கொடுக்கிறோம். ஒவ்வொரு முறையும் குட்டி போட்டதும் ஆணோட சேர விடாம ஒரு மாசத்துக்கு பெட்டைகளைப் பிரிச்சு வெச்சுடுவோம். அப்பதான் முயல்கள் ஆரோக்கியமா இருக்கும். வருஷத்துக்கு மொத்தமா 240 குட்டிகள் கிடைக்குது. இதை மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம்.


வாத்துகள்ல 3 ஆண், 12 பெண் இருக்கு. ஒரு வாத்து, வருஷத்துக்கு 270 முட்டைகள் இடும். உடைஞ்சு சேதாரமானது போக, இதுல 200 முட்டைகள் தேறும். அப்படி பார்த்தா... வருஷத்துக்கு 2 ஆயிரத்து 400 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை 5 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். பகல் நேரங்கள்ல வாத்துகளை மீன் குளத்துல விட்டுட்டா... பாசி, புழுக்களை எல்லாம் சாப்பிட்டுடும். வாத்தோட கழிவுகள், மீன்களுக்கு உணவாகிடும். வாத்துக்கும், முயலுக்கும் எங்களுக்கு தீவனச் செலவே கிடையாது. அதனால, இந்த ரெண்டு மூலமா கிடைக்கிறது எல்லாமே லாபம்தான்!


நாட்டுப் புறாவுல 50 ஜோடி இருக்கு. இது மூலமா வருஷத்துக்கு 1,000 குஞ்சுகள் கிடைக்கும். இதுல 800 குஞ்சுகள் தேறும். இதையெல்லாம் மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். புறாக் களுக்கு பொட்டுக்கடலை, கம்பு, பச்சைப் பயறு எல்லாம் கலந்து தீவனமா கொடுப் போம்'' என்ற வைரக்கண்ணு, அடுத்து போய் நின்றது... மீன்குளத்தில்!


''ஒரு ஏக்கர் பரப்புல ஒண்ணு, ரெண்டு ஏக்கர் பரப்புல ஒண்ணுனு மொத்தம் ரெண்டு குளம் இருக்கு. பிறந்து ஒருநாள் ஆன, 1 லட்சம் மீன்குஞ்சுகள வாங்கிட்டு வந்து, ஒரு குட்டையில விட்டு 2 மாசம் வளர்க்கணும். விரல் அளவுக்கு வளந்ததும், அதுகள குளத்துல விட்டுடுவோம். 1 லட்சம் குஞ்சுகளுக்கும் சேர்த்து, 15 நாள் வரைக்கும் தினமும் அரை கிலோ கடலைப் பிண்ணாக்கை தீவனமா கொடுப்போம். அடுத்த 45 நாளைக்கு, தினமும் ஒரு கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஒரு கிலோ எண்ணெய் எடுத்த தவிடு ரெண்டையும் கலந்து போடுவோம். ரெண்டு மாசம் கழிச்சு பார்த்தா... 20 ஆயிரம் குஞ்சுகள் தேறும். இதுல 9 ஆயிரம் குஞ்சுகளை மட்டும் மூணு ஏக்கர் குளத்துலயும் விட்டுட்டு, மீதியை விற்பனை செஞ்சுடுவோம்.






குளத்துல வளர்ற குஞ்சுகளுக்கு சோயா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு எல்லாத்தையும் கலந்து களி மாதிரி வேகவெச்சு தீவனமா கொடுப்போம். ஒரு ஏக்கர் குளத்துக்கு முதல் ஒரு மாசத்துல தினம் ஒரு கிலோ; 2-ம் மாசம் தினம் 2 கிலோ; 3-ம் மாசம் தினம் 3 கிலோனு தீவனம் கொடுக்கணும். 4-ம் மாசத்துல இருந்து 8-ம் மாசம் வரைக்கும் தினம் 4 கிலோ அளவுக்கு தீவனம் கொடுப்போம். தீவனத்தை நைலான் சாக்குல, மூட்டையா கட்டி, அதுல மூணு துளை போட்டு, தண்ணீரோட மேற்பரப்புல இருக்குற மாதிரி தொங்க விட்டுடுவோம். கூடவே, தினமும் 2 கிலோ கோழி எச்சத் தையும் சாக்குல கட்டி தொங்க விடுவோம்.


எட்டு மாசம் கழிச்சு, தவளை, ஆமை இதெல்லாம் பிடிச்சு சாப்பிட்டது... தானாகவே செத்துப் போனது... வளர்ச்சி அடையாததுனு மீன்குஞ்சுகள்ல இழப்பு வரும். இதெல்லாம் போக, 3 ஏக்கர் குளத்துக்கும் சேர்த்து மொத்தமா 5 ஆயிரம் மீன்கள் கிடைக்கும். ஒரு மீன் முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை இருக்கும். எடை கணக்குல சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு மீன்கள் கிடைக்கும். வியாபாரிகளே குளத்தை தேடிவந்து, மீனைப் பிடிச்சு எடை போட்டு, கிலோ 100 ரூபாய்னு எடுதுக்குறாங்க'' என்ற வைரக்கண்ணு நிறைவுப் பகுதிக்கு வந்தார்.






''விவசாயம், கால்நடைனு ஒண்ணைச் சார்ந்து, ஒண்ணை வெச்சுருக்குறதால... செலவு குறையுது. ஒண்ணோட கழிவு இன்னொண்ணுக்கு உணவாயிடுது. பசுந் தீவனங்கள் இருக்கறதால தீவனச் செலவு குறைஞ்சுடுது. குறிப்பா... வாத்து, முயலுக் கெல்லாம் தீவனச் செலவே இல்லாம வருமானம் மட்டும் வந்துட்டே இருக்குது. இந்த எட்டு ஏக்கர் ஒருங்கிணைந்தப் பண்ணையம் மூலமா வருஷத்துக்கு 13 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்குது'' என்று கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாட சொன்ன வைரக்கண்ணு,


''கொஞ்சம் மெனக்கெட்டா... கண்டிப்பா நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்கிறதுக்கு நானே நல்ல உதாரணம்தானே'' என்று கேட்டு புன்னகைத்தார்!
Source : http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90538

3 comments:

fox said...

can we visit this farm house ?

Siva said...

Super Info !!

Can we have an contact number for Vairakannu Sir?

thanks,
Siva

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238