Wednesday

பனையைக் காக்க ஒரு பயணம் !

பனையைக் காக்க ஒரு பயணம் !
பனை மரம் எங்கள் தாய் என்றால்,பதநீர் என்பது தாய்ப்பாலே...
பனையைக் காக்க குழந்தைகளின் பயணம்...
பனை மரம் எங்கள் அடையாளம் அதைப் பாதுகாப்பது நம் கடமை...
பனைமரம் எங்கள் தாய் என்றால், பதநீர் என்பது தாய்ப்பாலே ..
இப்படி 9-ம் வகுப்பு ஷோபனா ராகம்போட்டுப் பாட, 250 சிறுவர்கள் அந்தப் பாடலை உடன் பாடிக்கொண்டு சென்றது, எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. நமது மாநில மரமான பனையின் சிறப்புகளைக் கூறி, அவை அழிக்கப்படாமல் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நடைப் பயணம்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கிராமத்தில் இருக்கும் ஆலமரம் அன்று புதிய நண்பர்களைச் சந்தித்தது. 'குக்கூகுழந்தைகள் வெளியும் 'இயல் வாகைஅமைப்பும் ஒருங்கிணைத்த நடைப் பயணத்துக்காக  கூடிய சிறுவர்களுக்கு, பனை நுங்கு தந்து வரவேற்கப்பட்டது. பழமையான இசைக் கருவியான வாத்தியமான, மண் மத்தளம் வாசிக்கப்பட்டது. பனை மரத்தின் சிறப்புப் பற்றிய பாடல்கள் பாடப்பட்டு, நாடகமும் நடத்தப்பட்டது.
இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், பயணத்தைத் தொடங்கிவைத்தார். ''பனை மரம் நமக்கு எண்ணற்ற பொருட்களைத் தருகிறது. நாம் தேநீருக்குப் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையில் எந்தச் சத்தும் இல்லை. கருப்பட்டி கலந்து குடித்துப் பாருங்கள்... உடல் புத்துணர்ச்சி பெறும். நம் ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் ரொம்பக் குறைவதற்கு பனை மரங்கள் அழிவதும் காரணம் என்பதை நீங்கள் உணரணும்'' என்றார்.
ஊத்துக்குளியைச் சுற்றியிருக்கும் கிராமங்களை நோக்கி அமைந்த அந்தப் பயணம், சிறுவர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. காங்கேயன்பாளையம் எனும் கிராமத்தில் ஆடுகளை மேய்க்கும் ஒரு பெரியவர், இவர்களைப் பார்த்து விசாரித்தார். தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் வழிச் செலவுக்காக 20 ரூபாயைத் தந்தார்.

சிறுவர்களுக்குக் காலை உணவாக சிறுதானியம், கொழுக்கட்டை தரப்பட்டன. கம்பில் செய்த 'அம்புலிஎனும் உணவை ருசித்து, சாப்பிட்டார்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகாண்டி எனும் பனையேறி வந்தார். அவருக்கு பிறவிலேயே இரு கண்களும் தெரியாது. ''நான் 10 வயதில் இருந்து பனை ஏறுகிறேன். ஒரு நாளும் அது என்னைக் கீழே தள்ளிவிட்டது இல்லை. என் முதல் நண்பன் பனை மரம்தான்'' என்றதும், சிறுவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் நெகிழ்ச்சியுடன் அந்தப் பிஞ்சுக் கைகளைப் பற்றிக் கொண்டார்.
அய்யம்பாளையம், கரைப்பாளையம், கஸ்தூரிபாளையம், காங்கயம்பாளையம் உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களிடம், பனையின் சிறப்பு பற்றிக் கதை, விடுகதை, பாடல், நாடகம் மூலம் எடுத்துச் சொன்னார்கள்.
''எவ்வளவு வறட்சியாக இருந்தாலும் வளரக்கூடிய மரம் பனை. இந்த மரத்தின் மூலம் நமக்கு 840 பொருட்கள் கிடைத்தன. இப்போது, அவற்றில் பல கிடைப்பது இல்லை'' என்று தங்கள் மழலைக் குரலில் சொல்வதைக் கிராமத்து மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர்.

கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர்களைக் கடந்த நெடும் பயணம், பெரிய மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளோடு  முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சியை ஸ்டாலின், செந்தில், அழகேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். அழகேஸ்வரி பேசுகையில், ''ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.
மாணவர்களுக்கான ஓவியக் கண்காட்சியில், 'பனை மரம் தந்த ஓலைச் சுவடி இல்லாவிட்டால், நமக்கு திருக்குறளே கிடைத்திருக்காதுஎன்ற கருத்தில் ஒரு மாணவர் வரைந்த ஓவியம், எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

''இனி, வீட்டில் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில், கருப்பட்டிதான் கேட்போம்'' என்ற சிறுவர்களின் குரல், பனை மரம் உயரத்துக்கு கம்பீரமாக ஒலித்தது!
வி.எஸ்.சரவணன்
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90788

No comments: