Wednesday

25 சென்ட்... 180 கிலோ..! வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு!

25 சென்ட்... 180 கிலோ..!
வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு!
அதிக மழை, கடும்வெயில் இரண்டுக்கும் தாக்குப்பிடித்து வளர்வதுதான் சிறுதானியங்களின் சிறப்பு. அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. உழுதுவிட்டு விதைத்தால், அடுத்தது அறுவடைதான்... என்பதால் இன்றைக்கும் மானாவாரி விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கின்றன, சிறுதானியங்கள். தமிழகத்தில் சில பகுதிகளில் சிறுதானியங்கள்தான் முக்கியப் பயிராகவும் இருக்கின்றன. அந்த வரிசையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் மலைப்பகுதியும் ஒன்று. இப்பகுதியிலுள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி... சாமை, வரகு, கேழ்வரகு என சிறுதானியங்களையே தொடர்ந்து பயிர் செய்கிறார்.
தர்மபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி வழியாக பாலக்கோடு செல்லும் வழியில் இருக்கிறது, திருமல்வாடி. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி மலைப்பாதையில் 12 கிலோ மீட்டர் பயணித்தால், பெரியூர். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட சரிவுப்பகுதியில் இருக்கும் செம்மண் நிலங்கள் நம்மை வரவேற்கின்றன. நம்முடைய பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பத்தை உயர்த்தி பிடிப்பது போல, மண் அரிப்பைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு வயலிலும் வரிசையாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது... கண்கொள்ளா காட்சி!
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் வரகு!
கோடை வெயிலைத் தாங்க முடியாமல், மலைமாடுகள் எல்லாம் மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்க... களத்தில் வரகு காய வைத்துக் கொண்டிருந்த கோவிந்தசாமி, தன்னுடைய விவசாயம் பற்றி நம்மிடம் பேசினார்.
''இந்தப் பகுதியில மானாவாரி விவசாயம்தான் அதிகம். ரொம்ப பள்ளமான இடங்கள்ல கிணத்துத் தண்ணியை வெச்சு கொஞ்சம் பேர் பயிர் செய்யறாங்க. மேட்டுக்காட்டுல இருக்கிறவங்க மானாவாரியா சாமை, சோளம், வரகு, ஆரியம் (கேழ்வரகு), பனிவரகு, துவரை, அவரை, வேர்க்கடலை, உளுந்து, எள் இப்படி பயிர் செய்றோம். சாமைதான், அதிகமா விளையுது. மழைக் காலத்துலதான் இங்க விவசாயம் களைகட்டும். மலைமாடுகளையும் வளர்த்துட்டு இருக்கோம்.
போன போகத்துல அஞ்சு ஏக்கர்ல சாமை, ஆரியம், சோளம்னு போட்டிருந்தேன். அதோட 25 சென்ட்ல சிறுவரகையும் போட்டிருந்தேன். எங்க ஊர்லயே மூணு பேருதான் விடாம வரகு பயிர் செய்றோம். இது விளையுறதுக்கு ஆறு மாசம் ஆகும்கிறதால, மத்தவங்களெல்லாம் நிறுத்திட்டாங்க. அதில்லாம இதை அரிசியாக்குறதும் சிரமம்னு நினைக்கிறாங்க. நானும் கொஞ்ச வருஷம் வரகை நிறுத்தியிருந்தேன். விவசாயம் போக மீதி நேரங்கள்ல தெருக்கூத்து ஆடுறதுக்கு வெளியூர்களுக்குப் போவேன். அப்படி போகும்போது நேரத்துக்கு சாப்பிடாம, சரியான தூக்கம் இல்லாததால எப்படியோ, எனக்கு சர்க்கரை நோய் வந்திடுச்சி. தெரிஞ்சவர் ஒருத்தரு 'சர்க்கரை நோய்க்கு வரகு ரொம்ப நல்லது’னு சொன்னாரு. அப்ப இருந்து திரும்பவும் வரகு சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன்.
வரகுல குறுவரகு, பெருவரகுனு ரெண்டு வகைகள் இருக்கு. குறுவரகைவிட, பெருவரகு விளையுறதுக்கு பதினைஞ்சு இருபது நாள் அதிகமாகும். அதனால, பெருவரகை வைகாசிப் பட்டத்தில மட்டும் போடுவோம். குறுவரகை மழைக்குத் தகுந்த மாதிரி வைகாசி, ஆனி, ஆடி மாசம் வரை போடுவோம். பயிர் முளைச்சு வெளியே வந்துட்டா... ரெண்டு மாசம் வரை மழை இல்லனாலும், தாக்குப் புடிக்கிற சக்தி வரகுக்கு உண்டு. காய்ஞ்சு போன பயிர்கூட, ஒரு மழை கிடைச்சிட்டா முட்டிக்கிட்டு வந்துடும். போன வருஷம் வைகாசிப் பட்டத்துக்கு சரியான மழை இல்லாததால, ஆனி கடைசியில வரகு போட்டேன்'' என்ற கோவிந்தசாமி, சாகுபடி முறையை விளக்கமாகச் சொன்னார். அதை பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஆறு மாதத்தில் அறுவடை!
''கோடை மழை கிடைத்தவுடன், சாகுபடி நிலத்தில் இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 4 டிராக்டர் என்ற கணக்கில் எருவைத் தூவி உழவு செய்து, விதைகளைத் தூவ வேண்டும் (ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் தேவைப்படும்). 4 முதல் 7 நாட்களுக்குள் பயிர் முளைப்பு எடுத்துவிடும். 15-ம் நாளில் ஒரு ஜான் அளவுக்கு பயிர் வளர்ந்துவிடும். இந்த நேரத்தில் களை எடுக்க வேண்டும். மரத்தாலான களை எடுக்கும் கருவியைப் பயன்படுத்தியோ அல்லது, மாட்டு ஏர் பூட்டியோ களையெடுக்கலாம். மாடு பூட்டிய ஏர் மூலமாக களையெடுத்தால், மழைநீர் நிலத்தில் தங்குவதுடன், பயிர்களுக்குத் தேவையான இடைவெளியும், காற்றோட்டமும் கிடைக்கும்.
விதைகளைத் தூவி விதைத்ததால், ஆங்காங்கே வளர்ந்துள்ள பயிர்களை ஒரு வரிசைக்குக் கொண்டு வரவும் இது உதவியாக இருக்கும். விதைத்த 30-ம் நாளிலிருந்து 40-ம் நாட்களுக்குள் மீண்டும் இதே முறையில் களை எடுக்கவேண்டும். ஏர் மூலம் களை எடுக்கும்போது ஒரு வரிசை முடிந்த பிறகு, கலப்பையை அடுத்த வரிசையில் தூக்கி வைத்துதான் ஓட்ட வேண்டும். இப்படி ஓட்டுவதால் பயிர்களைச் சுற்றி மண்அணைப்பும் ஏற்படும்.
விதைத்ததில் இருந்து நான்கு மாதத்தில் கதிர் பிடிக்கும். தொடர்ந்து, கதிர்களில் பால் ஏறி, ஆறாவது மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். பயிர் கருப்பு நிறத்துக்கு மாறி, தானியங்கள் கொத்துக்கொத்தாக கருப்பு நிறத்தில் தெரிந்தால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். மழை இல்லாத நாட்களில், நெல் மணியை அறுவடை செய்வது போல அறுவடை செய்து, நிலத்தில் படுக்கை வசத்தில் போட்டு, 3 முதல் 4 நாட்கள் காய வைக்க வேண்டும். பிறகு, களத்தில் வட்டமாகப் பரப்பி, மாடுகள் அல்லது டிராக்டர் மூலம் கதிரடித்து தாள்களை உதறி எடுத்தால், தானியங்கள் அடியில் தங்கும். அவற்றைத் தூற்றி மூட்டை பிடிக்க வேண்டும்.
25 சென்ட்... 8 ஆயிரம் ரூபாய் லாபம்!
சாகுபடி பாடம் முடித்த கோவிந்தசாமி நிறைவாக, மகசூல் மற்றும் வருமானம் பற்றி சொன்னார். ''ரெண்டு வருஷமா வரகை விக்கிறதில்லை. அரிசியாக்கி வீட்டுக்குத்தான் வெச்சுக்கிறோம். 25 சென்ட்ல 4 மூட்டை (45 கிலோ மூட்டை) கிடைச்சிடுது. இந்த முறையும் நான் விற்பனை செய்யல. ஒரு கிலோ வரகரிசி, 60 ரூபாய்னு விற்பனையாகுது. விற்பனை செய்திருந்தா... 180 கிலோவுக்கு 10 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சிருக்கும். உழவு, அறுவடைனு 2 ஆயிரம் ரூபாய் செலவு போக, 8 ஆயிரத்து 800 ரூபாய் கையில லாபமா நின்னுருக்கும். இப்போ தருமபுரி மாவட்ட சிறுதானிய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்துல சேர்ந்திருக்கிறதால விற்பனைக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. அதனால, இனிமே கூடுதலா பயிர் செய்யலாம்னு இருக்கேன்'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு:
கோவிந்தசாமி,செல்போன்: 93447-82695.



இப்படித்தான் அரிசியாக்கணும்!
வரகை அரிசியாக்குவது பற்றி பேசிய பெரியூர் மங்கம்மா, ''வரகுல 7 வகையான புரை (தோல்) இருக்கு. களத்துல தூத்தும்போது கொஞ்சம் போகும். மீதியெல்லாம் உரல்ல (திருகைக் கல்) அரைக்கும் போதுதான் போகும். ஆனா, சாதாரணமா உரல் (திருகைக்கல்) போட்டு அரைச்சா ஒரேயடியா மாவாகிடும். அதனால, புரையை மட்டும் நீக்கறதுக்கு உரலைத் தயாரிச்சிக்கணும். அதாவது, உரலோட மேல்பாக சைஸுக்கு, சணல் பையை அறுத்துக்கணும். களிமண்ணை தண்ணியில கரைச்சி, குழம்பு மாதிரி ஆக்கிக்கணும். மேல் உரலோட அடிப்பகுதியில களிமண் கரைசைல லேசா பூசி, சணல் பையை ஒட்டிடணும். பை மேலயும் களிமண் கரைசலை பூசி, அதுமேல அடுப்புச் சாம்பலையும் லேசாக பூசி, உரலோட கீழ்பாகத்துல பொருத்திடணும். பிறகு, களிமண் கரைசல்ல வரகைக் கொட்டி பிசைஞ்சி, வெயில்ல கொஞ்ச நேரம் காய விடணும். அதை எடுத்து உரல்ல கொஞ்ச கொஞ்சமா கொட்டி, சுத்தணும். அரைச்சு வெளியே வர்ற அரிசியைப் புடைச்சி, ஒப்புடி (சுத்தம்) செஞ்சா... சுத்தமான வரகரிசி கிடைக்கும்.
இதை அரிசி சோறு சமைக்கற மாதிரி தண்ணியில கழுவி ஊறப்போட்டு, கொதிக்கிற தண்ணியில போட்டு சோறாக்கலாம். கொள்ளுத் தண்ணி ரசம், கருவாட்டுக் கொழம்பு ரெண்டுக்கும் இது வெகு பொருத்தமா இருக்கும்'' என்றார்.
 மாடுகளுக்கு வரகுப்புல்!
வரகு அறுத்த பிறகு கிடைக்கும் புல்லை இப்பகுதியில் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறார்கள். இதுபற்றிப் பேசிய, பூக்கூட்டமரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகன், ''வரகுப்புல்லுக்கு உடல் வெப்பத்தைக் குறைக்கிற சக்தி இருக்குது. காய்ச்சல் கண்ட மாடுகளைக் கொட்டகையில தனியா கட்டி, வரகுப்புல்லைப் போட்டு விட்டா... மூணு நாள்ல சரியாயிடும். வெயில் காலங்கள்லயும் மாடுகளுக்கு உடல் சூட்ட சீரா வெச்சிக்கிறதுக்கு வரகுப்புல்லதான் கொடுப்போம். நெல் வைக்கோல்ல இருக்கிறதவிட, வரகுப்புல்லுல சுனை குறைவா இருக்கும். மாடுகளும் விரும்பிச் சாப்பிடும்'' என்று சொன்னார்.
 இறவையிலும் வரகு!
திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் கிராமத்தில் உள்ள சிறுதானிய மகத்துவ மையப் பேராசிரியர் நிர்மலகுமாரியிடம் பேசியபோது, 'வரகுப்புல்லின் தண்டுப்பகுதி குறைவாக இருக்கும். இலைப்பகுதி உயரமாகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் இருப்பதால், மாடுகள் சாப்பிட உகந்ததாக இருக்கும். கிராமங்களில் குழந்தை பிறந்தவுடன் இளம்தாயை, வரகுப்புல்லைப் பரப்பி அதன் மேல் பாய் போட்டு படுக்க வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு. மாடுகளுக்கும் உடம்பு சரியில்லை என்றால், வரகுப்புல் கொடுப்பார்கள். இவையெல்லாம் அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. என்றாலும், நீண்டகாலமாக மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
வரகில் உள்ள மணிகளின் அளவு, வளரும் காலம் ஆகியவற்றைப் பொருத்து பெருவரகு, குறுவரகு என்று பிரிக்கிறார்கள். இவையில்லாமல், பனிவரகு என்ற ஒரு ரகமும் உண்டு. இவை மூன்றையும் இறவைப் பாசனத்திலும் பயிர் செய்யலாம். பொதுவாக வரகு, 155 முதல் 180 நாட்களில் அறுவடைக்கு வரும். பல்கலைக்கழக உருவாக்கமான கோ-3 என்ற ரகம், 125 நாட்களில் அறுவடைக்கு வரும்'' என்று தகவல்களைப் பகிர்ந்தார்.
தொடர்புக்கு, சிறுதானிய மகத்துவ மையம், அய்யம்பாளையம் (அஞ்சல்), அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம் - 606603.
செல்போன்: 99949-16832.

த. ஜெயகுமார் படங்கள்: வி. ராஜேஷ்
Source: pasumaivikatan

No comments: