மானாவாரிக்கேற்ற மகத்தான தானியங்கள்...
வரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...
நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாசார தாக்குதலால், சத்துமிகுந்த உணவுப் பொருட்களின் பயன்பாடு மிகவும் குறைந்து போனதால், நோய்கள் பெருகி வருகின்றன. அதனால், பண்டைய காலத்து உணவுப் பொருட்களுக்கு ஏங்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், பாரம்பரியம் மிக்க சிறுதானியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், இவற்றைப் பயிரிடுவதிலும் கவனம் திரும்பியிருக்கிறது!
இப்படிப்பட்ட பாரம்பரிய உணவு தானியங்களில் சோளம், கேப்பை (கேழ்வரகு) மற்றும் வரகு ஆகியவற்றை மானாவாரியாக சாகுபடி செய்துவரும்
விருதுநகர் மாவட்டம், சித்தூர், மரியபுஷ்பத்தை, சிறுதானியங்கள் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். சோளத்தை தூசு தட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தவர், ''பதினெட்டு வருஷம் விருதுநகரில் உள்ள தனியார் கம்பெனியில கிளார்க் வேலை பாத்தேன். உடல்நிலை சரியில்லாம போனதால, வேலையை விட்டுட்டு, வீட்டுல இருந்து பிள்ளைகளை கவனிச்சிட்டு இருந்தேன். ஆனாலும், சும்மா இருக்க பிடிக்காம, தையல், எம்பிராய்டரிங், கூடை பின்னுறதுனு ஏதாச்சும் செஞ்சுக்கிட்டே இருப்பேன். பிள்ளைகளும் படிச்சி வேலைக்குப் போக ஆரம்பிச்ச சமயத்துல, ரெயில்வே போஸ்ட் ஆபீஸுல வேலை பாத்துட்டு இருந்த கணவரும் ரிடையர்டு ஆயிட்டாங்க.
விருதுநகர் மாவட்டம், சித்தூர், மரியபுஷ்பத்தை, சிறுதானியங்கள் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். சோளத்தை தூசு தட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தவர், ''பதினெட்டு வருஷம் விருதுநகரில் உள்ள தனியார் கம்பெனியில கிளார்க் வேலை பாத்தேன். உடல்நிலை சரியில்லாம போனதால, வேலையை விட்டுட்டு, வீட்டுல இருந்து பிள்ளைகளை கவனிச்சிட்டு இருந்தேன். ஆனாலும், சும்மா இருக்க பிடிக்காம, தையல், எம்பிராய்டரிங், கூடை பின்னுறதுனு ஏதாச்சும் செஞ்சுக்கிட்டே இருப்பேன். பிள்ளைகளும் படிச்சி வேலைக்குப் போக ஆரம்பிச்ச சமயத்துல, ரெயில்வே போஸ்ட் ஆபீஸுல வேலை பாத்துட்டு இருந்த கணவரும் ரிடையர்டு ஆயிட்டாங்க.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
என் மகளுக்கு விவசாயம்னா ரொம்ப இஷ்டம். அவதான் விவசாயம் செய்யலாம்னு 8 ஏக்கர் நிலத்தை வாங்கச் சொன்னா. ஆனால், அவ, வேலை கிடைச்சி அமெரிக்காவுக்குப் போயிட்டதால, விவசாயம் செய்யலாமா... வேணாமானு யோசிச்சிட்டு இருந்தோம். அந்த சமயத்துலதான், 'பசுமை விகடன்’ பத்தி எங்ககிட்ட சொல்லி, அதை அனுப்பி வெச்சா, மக. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதைப் படிக்கிறப்போ, ஒரு நண்பரோட பேசுற உணர்வு எனக்கு ஏற்பட்டதால, என்னோட நண்பனாகவே பசுமை விகடனை ஆக்கிட்டேன். புத்தகம் கைக்கு வந்தவுடனே ஒரே நாள்ல படிச்சி முடிச்சிட்டு, அடுத்த புத்தகத்துக்காக காத்துக்கிட்டே இருப்பேன்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, ராஜகோபால் ஐயாவோட பண்ணையில் மாடு வளர்ப்பு, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பத்தின ஒரு வார பயிற்சி நடக்கிறத... பசுமை விகடன் மூலம் தெரிஞ்சிக்கிட்டு, கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், வானகத்துல நம்மாழ்வார் ஐயாவோட மூணு நாள் பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன்'' என்று அழகான முன்னுரை கொடுத்த மரியபுஷ்பம், தொடர்ந்தார்.
''போன வருஷத்துக்கு முந்தின வருஷம், முதல்முதலா மூணு ஏக்கர்ல, 'இருங்கு சோளம்’னு சொல்லப்படுற சிவப்புச் சோளம் விதைச்சேன். ஆனா, மலட்டுத்தன்மையான மண்ணுங்கறதால சரியான விளைச்சல் கிடைக்கல. போன வருஷம், ஒரு ஏக்கர்ல சிவப்புச் சோளம், மூணு ஏக்கர்ல வரகு, 20 சென்ட்ல கேழ்வரகுனு போட்டேன். மண்ணோட தன்மையை மாத்தறதுக்காக... சில வேலைகளைச் செய்தேன். நல்லா விளைஞ்சு வந்துச்சி... மார்கழி மாசத்துல அறுவடை செஞ்சுட்டேன்'' என்ற மரியபுஷ்பம், சிவப்பு சோள சாகுபடிக்காக நிலத்தை பண்படுத்தியது பற்றி பாடமாகவே கூறினார்.
'இது வானம் பார்த்த பூமி. மழையை நம்பித்தான் விவசாயம். சித்திரையில் கோடை உழவு ஓட்டிவிட்டு, நிலத்தை ஆறவிட வேண்டும். வைகாசி மாதத்தில் 300 ஆடுகளை வைத்து, நிலத்தில் மூன்று நாட்களுக்கு கிடை போடவேண்டும். இதனால், ஆடுகளின் புழுக்கை மற்றும் சிறுநீர் இரண்டும் நிலம் முழுக்க பரவி, நிலத்துக்கு சத்து சேர்க்கும். நான்காவது நாள், கொக்கி உழவு ஓட்ட வேண்டும். ஆடி மாதத்தில் மழை பெய்ததும், ஒரு ஏக்கருக்கு 300 கிலோ மண்புழு உரத்தைத் தூவிவிட்டு, கூடவே சோள விதைகளையும் தூவி, கொக்கி உழவு ஓட்டவேண்டும் (தேவைப்பட்டால், குப்பை உரத்தையும் அடியுரமாகக் கொடுக்கலாம்).
விதைத்த 5-ம் நாளில் முளைப்பு தெரியும். 30-ம் நாளில் முதல் களை எடுத்துவிட்டு, மீண்டும் 300 கிலோ மண்புழு உரத்தைத் தூவவேண்டும். மழை பெய்யும்போது தூவக்கூடாது. அதனால், வானிலை அறிக்கைகளை தெரிந்து செயல்பட வேண்டும். புரட்டாசி மாதம், அதாவது 90-ம் நாளில் கதிர் வர ஆரம்பிக்கும். ஐப்பசியில் பெய்யும் மழையில் கதிர் முற்றி, பால் பிடிக்கும். மார்கழியில் அறுவடைக்குத் தயாராகிவிடும். 20 சென்ட் நிலத்தில் போட்டிருக்கும் கேழ்வரகு மற்றும் மூன்று ஏக்கர் வரகு ஆகிய இரண்டுக்கும் சோளத்தை போலவேதான் சாகுபடி செய்ய வேண்டும்' சாகுபடி பாடம் முடித்த மரியபுஷ்பம்,
45 ஆயிரம் ரூபாய் லாபம்!
''ஒரு ஏக்கர்ல சிவப்புச் சோளம் மூலமா 500 கிலோ மகசூல் கிடைச்சிது. கிலோ 25 ரூபாய்னு விற்பனை செஞ்சதில், 12 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சிது. 20 சென்ட்ல கேப்பை மூலமா 200 கிலோ மகசூல் கிடைச்சிது. கிலோ 35 ரூபாய்னு விற்பனை செஞ்சதில், 7 ஆயிரம் ரூபாய் கிடைச்சிது. 3 ஏக்கர்ல 2 ஆயிரத்து 800 கிலோ வரகு மகசூலாச்சி. கிலோ 13 ரூபாய்னு விற்பனை செஞ்சதில், 36 ஆயிரத்து 400 ரூபாய் கிடைச்சிது. மொத்தம் 4 ஏக்கர் 20 சென்ட்ல இருந்து, 55 ஆயிரத்து 900 ரூபாய் கிடைச்சிது. செலவெல்லாம் போக, 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிது. சிறுதானியங்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயமே, முழுக்க முழுக்க இயற்கை முறையில செய்தா... அதிக பராமரிப்பு செய்யத் தேவையில்லைங்கிறது தான். இடுபொருள் செலவும் பெருசா இருக் காது. இது ரெண்டையும் அனுபவப்பூர்வமா நான் உணர்ந்திருக்கேன். அடுத்தடுத்த வருஷங்கள்ல இதைவிடக் கூடுதலா மகசூல் எடுப்பேங்கிற நம்பிக்கை இருக்கு'' என்றார், பெருமிதத்தோடு.
தொடர்புக்கு, மரியபுஷ்பம்,
செல்போன்: 94881-47966
இ. கார்த்திகேயன் படங்கள்: ஆர்.எம். முத்துராஜ்
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=95244
No comments:
Post a Comment