Sunday

5 சென்ட்... 8 மாதங்கள்... 47 ஆயிரம் ரூபாய்!

5 சென்ட்... 8 மாதங்கள்... 47 ஆயிரம் ரூபாய்!
குஷியான மகசூலுக்கு குலசை கத்திரிக்காய்!
 பாரம்பரிய மகசூல்
'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... நெய் மணக்கும் கத்திரிக்கா... நேத்து வெச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா’... 'முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் கத்திரிக்காய் மணக்காமல் இருக்காது. அசைவம், சைவம் என்று இரண்டு உணவுகளிலுமே இடம்பெறும் காய்களில் கத்திரிக்காய்க்கும் முக்கியமான இடம் உண்டே! வெள்ளைக்கத்திரி, பூனைக்கத்திரி, இலவம்பாடி முள்ளு கத்திரி, மணப்பாறை கத்திரி... என பிரத்யேகமான சுவைகளில் நாட்டுக் கத்திரி ரகங்கள் பல உள்ளன. அந்த வரிசையில்... திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரபலமான நாட்டு ரகம்தான், குலசை கத்திரி.
திருச்செந்தூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குலசேகரன்பட்டினத்தின் சுருக்கம்தான் குலசை. இப்பகுதியில் விளைவதால், இதற்கு குலசை கத்திரி என்று பெயர் வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜோராக விளைந்து கொண்டிருந்த குலசை கத்திரி, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. ஒரு காலத்தில் ஊர் முழுவதும் விளைவிக்கப்பட்ட இந்த கத்திரி, இப்போது விரல்விட்டு எண்ணும் அளவிலான விவசாயிகளால் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இவர்களில் ஒருவரான குலசேகரன்பட்டினம், செல்வராஜை, 'பாரம்பரிய விதைகள் சிறப்பிதழு’க்காகச் சந்தித்தோம்.
தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு நம்மிடம் வந்தவர், ''வருஷம் முழுக்க விவசாயமும், சீசன் சமயங்கள்ல பனை ஏறுறதும்தான் பரம்பரைத் தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்ல. ஆரம்பத்துல இருந்தே கத்திரி, வெங்காயம், மிளகாய்னு சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். விவரம் தெரிஞ்சதுல இருந்து குலசேகரன்பட்டினம் முழுசும் கத்திரி விவசாயம்தான். கடற்கரை ஓரத்துல இருக்கிறதால, கடல் மண்ணும், நல்ல மண்ணும் கலந்திருக்கும். அதனால, இந்த கத்திரிக்கு தனி ருசி கிடைக்குது. மத்த மண்ல இதே கத்திரியை வெச்சாலும், இந்த ருசி கிடைக்கிறதில்ல. காரத்தன்மை கம்மியா இருக்கும். திருச்செந்தூர்ல இருந்து உடன்குடி, உவரி, மணப்பாடு, கன்னியாகுமரி மாதிரி ஊர்களுக்குப் போறதுக்கு பஸ் ஏறுனா... வழி நெடுக கத்திரி வயல்தான். வீட்டுக்குப் பின்னாலயும் சின்னத்தோட்டம் போட்டு, கத்திரி போட்டுருப்பாங்க. எல்லாருமே குலசை கத்திரிதான் நடுவோம்.
மைசூருக்கு அடுத்தபடியா, இந்த ஊர்லதான் தசரா திருவிழா ரொம்ப சிறப்பு. அந்த சமயத்துல வெளியூர், வெளிநாட்டு பக்தர்களெல்லாம் வருவாங்க. எல்லாரும், கடைவீதியில் விற் பனைக்கு வெச்சுருக்குற குலசை கத்திரியைத் தேடி வாங்கிட்டுப் போவாங்க. அதெல் லாம் அந்தக் காலம். ஊர் முழுக்க செழிச்ச கத்திரியை, இப்போ பத்து பேர்தான் நட்டுருக்கோம். நான், 5 சென்ட்லதான் போட்டிருக்கேன்'' என்று பழைய நினைவு களில் மூழ்கிய செல்வராஜ், தொடர்ந்தார்.
சொத்தைக் காயில் வத்தல் போடுவோம்!
''எங்க பகுதியில மீன், கருவாடு இதுக்கெல்லாம் பஞ்சமே இருக்காது. இந்த கத்திரி வத்தலும் எல்லா வீட்டுலயும் இருக்கும். வயல்ல இருக்குற சொத்தைக் கத்திரியில சொத்தையை மட்டும் வெட்டி எடுத்துட்டு, காய வெச்சு வத்தலாக்கிடுவோம். இது, குண்டு குண்டா திண்ணமா இருக்கும். சாப்பிடும்போது சிக்கன் மாதிரி இருக்கும். கருப்பட்டிப்பாகுல இந்தக் கத்திரியை ஊற வெச்சும் சாப்பிடுவோம். இப்படிப்பட்ட குலசை கத்திரி ரகம் கொஞ்சம் கொஞ்சமா காணாம போயிரும்போல இருக்கு. இதைக் காப்பாத்தணுமேனுதான் விடாம சாகுபடி செய்றேன். எனக்கும் வயசாயிட்டு. எங்க காலத்துக்குப் பிறகு யார் காப்பாத்தப் போறாங்களோ...'' என்று ரொம்பவே வருத்தப்படும் செல்வராஜ், இந்த கத்திரியை சாகுபடி செய்யும் முறை இதுதான்-
நிலத்தை ஓர் உழவு செய்து, இரண்டு நாட்கள் ஆறவிட்டு, 5 சென்ட் நிலத்துக்கு 500 கிலோ தொழுவுரத்தைக் கொட்டி கிளறி, இரண்டு நாட்கள் கழித்து உழவு செய்யவேண்டும். பிறகு, பலகை வைத்து மட்டப்படுத்தி, இரண்டுக்கு இரண்டடி அளவில், பாத்தி அமைத்து... ஒவ்வொரு பாத்தியிலும் வடக்கு, தெற்கு ஓரங்களில் இரண்டு அல்லது மூன்று விதைகளைப் போட்டு மண்ணால் மூடி, உயிர்நீர் விடவேண்டும். 5 சென்ட் நிலத்துக்கு 100 கிராம் விதைகள் போதும். என்றாலும், பாத்திகளில் விதைத்த பிறகு விதைகள் மிச்சப்படும்.
சிறிய நாற்றங்கால் அமைத்து, அதில் இந்த விதைகளைத் தூவிவிடலாம். ஒரு வாரத்துக்குள் முளைப்பு எடுக்கும். பாத்திகளில் விதைத்த விதைகளில், சில முளைக்காமல் போகலாம். நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை எடுத்து, பாத்திகளில நட்டு செடிகளின் எண்ணிக்கையை சமமாகப் பராமரிக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு தண்ணீர் விட்டால் போதும். நடவில் இருந்து 40 முதல் 45 நாட்களில் பூ பூத்து... 50 முதல்
55 நாட்களில் காய்க்கத் துவங்கும். பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. என்றாலும், காய்ப்பு துவங்கியவுடன், 10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வேப்பங்கொட்டையை ஊற வைத்து இடித்து, கொஞ்சம் காதி சோப்பைக் கலந்து பூச்சிவிரட்டி தயாரிக்க வேண்டும். இதில் 500 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி இருபது நாட்களுக்கு ஒருதடவை தெளிக்க வேண்டும்.
60-ம் நாளிலிருந்து பறிப்புக்கு வரும். இதிலிருந்து தொடர்ந்து 180 நாட்களுக்குக் காய்க்கும். ஆறு நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம் மொத்தம் 30 முறை பறிக்கலாம். இது நாட்டுரகம் என்பதால் அடுத்த போகத்தில் விதைக்கு செலவு செய்யத் தேவையில்லை. முற்றிய, பெரிய காய்களை நன்கு பழுக்கும் வரை செடியில் விட்டுவைத்து, பழுத்து கீழே விழும் பழத்தை எடுத்து, தண்ணீரில் போட்டு அலசினால், விதைகள் தனியே பிரிந்துவிடும். இவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
நிறைவாகப் பேசியவர், ''5 சென்ட்ல ஒரு பறிப்புக்கு சராசரியாக 45 கிலோ காய் கிடைக்குது. கிலோ சராசரியா 35 ரூபாய்னு விலை போகுது (கடைகளில் 60 ரூபாய் வரை விலை வைத்து விற்கிறார்களாம்). மொத்தம் 30 பறிப்புகள் மூலமா 1,350 கிலோ கிடைக்கும். இதை விற்பனை செய்றது மூலமா 47 ஆயிரத்து 250 ரூபாய் வருமானமா கிடைக்கும். எல்லா செலவும் போக, 42 ஆயிரத்து 250 ரூபாய் லாபமா நிக்கும். 5 சென்ட் நிலத்துல இந்த வருமானம் வேறெந்த விவசாயத்துல கிடைக்கும்'' என்று பெருமையுடன் கேட்டு விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, 
செல்வராஜ், 
செல்போன்: 95515-07569



விற்பனைக்கு வில்லங்கமில்லை..!
இதே ஊரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஆபிரகாம், ''குலசை கத்திரியை, குண்டு கத்திரினும் சொல்வாங்க. பத்து வருஷத்துக்கு முன்னவரைக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்ல அருமையா விற்பனையாகிட்டு இருந்துச்சு. 'குலசை கத்திரி இங்கு கிடைக்கும்’னு போர்டு வெச்சு விற்பனை செய்வாங்க. பாக்குறதுக்கே அழகா இருக்கும். இப்ப நிறைய வீரிய ரகங்கள் வந்துட்டதால இதை சாகுபடி செய்றதைக் குறைச்சுட்டாங்க. ஆனாலும் இன்னமும் இதுக்கு மவுசு குறையலை. மத்த கத்திரிக்காயை விட ரெண்டு மடங்கு விலைக்குத்தான் இப்பவும் விற்பனையாகுது. இப்போ, வரத்து கம்மியா இருக்கிறதால, குலசேகரன்பட்டினம், உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகள்ல மட்டும்தான் கிடைக்குது. ஆனாலும், தேவை இருந்துட்டுதான் இருக்கு'' என்று சொன்னார்.
கத்திரியில் கணக்கில்லாத பயன்கள்!
கத்திரியில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கத்திரியில் 24 சதவிகித கலோரி, 9 சதவிகித நார்ச்சத்து ஆகியவை உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்திரியுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிட்டால், நல்ல பலன் இருக்கும். இதற்கு, பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் நரம்புகளுக்கு வலுவூட்டும் தன்மையும் உண்டு.
கத்திரி சாப்பிட்டால்... சளி, பித்தம், தொண்டைக்கட்டு, கரகரப்பான குரல், மூச்சுவிடுதலில் சிரமம், பித்தம், வாதநோய் மற்றும் இருமல் ஆகியவை கட்டுப்படும். கொழுப்பு குறையும். உடல் சூடு தணிவதோடு, நீரிழிவும் கட்டுப்படும். முற்றிய கத்திரியைச் சாப்பிட்டால்தான் உடலில் அரிப்பு ஏற்படும். அதனால், பிஞ்சுக்காயைத்தான் சாப்பிட வேண்டும். மாடுகளுக்கு வரும் வயிற்றுவலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்கு கத்திரிக்காயை தணலில் சுட்டு, சிறிது பெருங்காயம் சேர்த்து கொடுக்கலாம்.
இ. கார்த்திகேயன் படங்கள் : ஏ.சிதம்பரம்
Source: pasumaivikatan

No comments: