வாசனைப் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மிளகு. குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த மிளகு, புதுக்கோட்டை போன்ற வறட்சி பகுதிகளிலும் இப்போது சாகுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே அணவயல்-பட்டிபுஞ்சையைச் சேர்ந்த விவசாயி தங்கையன் தனது தென்னந்தோப்பில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்து வருகிறார்.
தனது மிளகு சாகுபடி அனுபவம் குறித்து தங்கையன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கரில் மட்டும் தென்னையில ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யத் தொடங்கினேன். தற்போது அது 3 ஏக்கராக விரிவடைந்திருக்கிறது. மிளகு கொடிகளை தென்னை மரம், பலா மரத்துல ஏத்தி விட்டேன். அதிகமான இடை வெளி உள்ள இடத்துல 5 அடி இடைவெளியில கிலுவை, முருங்கை, கொன்றை மரங்களை நட்டு வைத்து அதிலும் மிளகு கொடியைப் படரவிட்டுள்ளேன்.
எந்த அளவுக்கு தோட்டத்தில் குளிர்ச்சி தன்மையை ஏற்படுத்து கிறோமோ அந்த அளவுக்கு விளைச்சலும் அதிகமாக இருக்கும். ஏராளமான மிளகு ரகங்கள் உள்ளன. எனினும், வறட்சி பூமியில் பன்னியூர் 1 மற்றும் கரிமுண்டா ஆகிய இரண்டு ரகங்கள்தான் எனது அனுபவத்துல சிறப்பாக இருக்கு. ஏற்ெகனவே வளர்க்கப்படும் மிளகு கொடியில் இருந்தே அதன் பிறகு நமக்குத் தேவையான அளவுக்கு நாற்றுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
மிளகு நடவு செய்து 3-வது ஆண்டிலிருந்தே செடிக்கு சுமார் 100 கிராம் வீதம் மிளகு விளைய தொடங்கிவிடும். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அரை கிலோவை எட்டும். ஏக்கருக்கு சுமார் 900 செடிகள் வளர்க்கலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை அறுவடை செய்தால் சுமார் 450 கிலோ மிளகு மகசூல் கிடைக்கும். தற்போது கிலோ ரூ. 900-க்கு விற்கிறோம்.
மிளகுக்காக தனியாக ரசாயன உரம் இடுவதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை ஒரு செடிக்கு சுமார் 6 கிலோ தொழு உரம் இடுவோம். இலைகள் உதிர்ந்து அதுவும் இயற்கை உரமாகிறது. காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு இடு வோம். காய்களில் பூச்சிகள் இருந்தாலோ, காய்கள் திரட்சி யாக இல்லாதிருந்தாலோ பஞ்ச கவ்யம்தான் தெளிக்கிறோம்.
இதைப் பார்த்து இந்தப் பகுதியில் தென்னந்தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள் ஏராளமானோர் இப்போது மிளகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்
தொடர்புக்கு: 89408 38900
Source: tamil.thehindu.com
No comments:
Post a Comment