பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது.
சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. சீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா.