பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது.
சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. சீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா.
சிகப்பு நெல், வெள்ளை அரிசி கொண்ட இந்த வகை நடுத்தரமான ரகம், மத்தியக் காலப் பயிர், 140 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடியது. நடவு, நேரடி விதைப்பு, ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஏற்றது. நான்கு அடி உயரம்வரை வளரும்.
பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த ரகம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தைவேலுடையார் என்ற பண்ணையார் உருவாக்கியது. 1911-ம் ஆண்டில் கருடன் சம்பா நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் அவர் சாகுபடி செய்துள்ளார். அப்போது அவர் நடவு செய்தபோது கேலி செய்தவர்கள், பின்பு பயிரைப் பார்த்து மிரண்டு போனதாகச் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு நாற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூர் வந்துள்ளது. சாலையில் போவோர், வருவோரெல்லாம் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பண்ணைத் தொழிலாளர்கள் திருஷ்டி பொம்மை ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். 32 சென்டில் ஒவ்வொரு நாற்றாக, முக்கால் அடி சாலை சாலையாக நடவு செய்து ஒரு ஏக்கருக்கு 4,012 கிலோ மகசூல் எடுத்துள்ளார்.
தற்போது இந்த நெல் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது, மகசூல் அதிகபட்சம் 3,500 கிலோ. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விஷங்கள் இல்லாமலேயே விவசாயிகள் மகசூல் எடுத்துவருகிறார்கள்.
- நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 9443320954
Source: tamil.thehindu.com
No comments:
Post a Comment