இந்த வேளாண்மை, இயற்கையின் போக்கில் மரபு வழியாக நடந்தது. இந்த மரபு வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை வேதி உரங்கள் அல்லது ரசாயன உரங்களின் வருகைக்கு முன்பு நடந்தவை.
இன்றைய ‘இயற்கை வழி வேளாண்மை' என்ற சொல்லாடல் கலப்பின விதைகள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பசுமைப் புரட்சி' தொழில்நுட்ப முறைக்கு மாற்றான, அதே போன்றதொரு நுட்பமான வேளாண் தொழில்நுட்ப முறைகளைச் சுட்டும் சொல்லாக உள்ளது.
ஆக, பண்டைய மரபு (பாரம்பரிய) வேளாண்மை முறைக்கும் இன்றைய இயற்கைவழி வேளாண் முறைக்கும் நுட்பமான வேறுபாடு உள்ளது. பண்டைய மரபு வேளாண்மையில் இன்றைய அறிவியல் கண்டறிதல்கள் பலவற்றைப் பற்றிய விளக்கங்கள் விரிவாகப் பேசப்படுவதில்லை.
அன்றும் இன்றும்
குறிப்பாக ‘தாதெரு மன்றங்கள்' என்ற மட்கு எரு (compost) செய்யும் முறை இருந்தது. ஆனால், அது எவ்வாறு வேலை செய்கிறது, அதில் எவ்வகையான நுண்ணுயிர்கள் பங்காற்றுகின்றன என்ற இன்றைய அறிவியல் விளக்கம் இல்லை. அதனாலேயே அதைக் குறைத்து மதிப்பிட வேண்டியதும் இல்லை. அது ஒரு மரபுத் தொழில்நுட்பம். அதையே இப்போது பல வடிவங்களில் மாற்றி காற்றுள்ள இடத்தில் மட்கு செய்வதும், காற்றில்லா இடத்தில் செய்வதும் என்று எண்ணற்ற முறைகள், அதை அடியொற்றி உருவாகியுள்ளன.
இப்படியாக மரபு வழி இயற்கை வேளாண்மையும் நவீன இயற்கை வேளாண்மையும் மாறுபடுகின்றன. ஆனால், கெடுவேளையாக இன்று இயற்கை வேளாண்மையை முன்னெடுப்போர், ‘பாரம்பரிய வேளாண்மையைக் காப்போம்' என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். இது புரிதலில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
எப்படித் தொடங்கியது?
தமிழக நவீன இயற்கை வேளாண்மையின் வரலாறு ‘தற்சார்புப் பொருளியல் அறிஞர்' ஜே.சி. குமரப்பாவிடமிருந்து தொடங்குகிறது, அவர் விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியடிகளுடன் இணைந்து போராடியபோது, வெறும் அரசியல் விடுதலை மட்டும் போதாது, முழுமையான மாற்று வாழ்வியல் விடுதலை வேண்டும் என்பதற்காகப் புதியதொரு இந்தியாவைக் கனவு கண்டார். காந்தியடிகளின் கனவும் அதுவே.
காந்தியடிகளுடன் இருந்த பழமைவாதிகள் ஒரு பக்கமும், மரபை முற்றிலும் அழித்துவிட்டுப் புதிய ஒன்றைக் கட்டமைக்க விரும்பியவர்கள் மற்றொரு பக்கமும் இருந்தனர். இவர்களுக்கிடையில் மண்ணுக்கேற்ற மாற்றத்தை, மரபின் வழியாக நவீனத்துடன் இணைத்துக் கட்ட விரும்பியவர் குமரப்பா.
நவீனப்படுத்துதல்
இவர் பொருளியல் துறை சார்ந்து தனது பங்களிப்பை விரிவுபடுத்தினார், அதே வேளை களப் போரில் கலந்துகொண்டு சிறை செல்லவும் செய்தார். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனது எளிமையான தோழர்களுடன் இணைந்து, மராட்டிய மாநிலம் வார்தாவில் ஆய்வுகளையும் செயல்பாடுகளையும் இவர் மேற்கொண்டார். அந்த ஆய்வுகள் பெரிதும் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது அவற்றை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு போலத் தேடி எடுக்க வேண்டியுள்ளது.
இவரது ஆய்வில் முதன்மையானது வேளாண்மையை நவீனப்படுத்த வேண்டும் என்பதாகும். இதற்காக அவர் பல முயற்சிகளில் ஈடுபட்டார். காந்தியின் மறைவுக்குப் பின்னர் வார்தாவில் இருந்து தமிழகம் வந்து மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் தனது பணியைத் தொடர்ந்தார்.
அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்றும் உள்ளனர். குறிப்பாக மட்கு உரம் செய்வது, வேளாண்மைப் பணிகளைத் திட்டமிடுவது, டிராக்டர் வருகையின் ஆபத்து, ரசாயன உரங்களின் தீமை என்று விலாவாரியாக அவர் விரித்துரைத்திருக்கிறார். அவரது பெயரிலேயே ஒரு தொழில்நுட்பப் பயிற்சி மையமும் அங்கே உருவானது.
இயற்கைவழி
அன்றைய காலகட்டத்தில் ரசாயன வேளாண்மைக்குக் கொடுக்கப்பட்ட ஆதரவுப் பரப்புரையும், நிதிநல்கைகளும் அன்றைய குமரப்பாக்களின் குரல்களை ஆழிப்பேரலையைப் போல அழித்துவிட்டன. நாடாளுமன்றத்தில்கூட இதைப் பற்றி குமரப்பா பேசினார். ஆனால், ஒன்றும் செய்ய முடியவில்லை.
குமரப்பாவின் முயற்சிகளின் தொடர்ச்சியாக லியோ பிரவோ என்ற ஐரோப்பியப் பெண்மணி கல்லுப்பட்டியில் இருந்து, இன்றைய கரூர் மாவட்டத்தில் இன்பச் சேவா சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி நவீன இயற்கைவழி வேளாண்மைப் பணிகளைப் பரப்பி வந்தார்.
இதற்கிடையில் முருகப்பா குழுமத்தில் இருந்த சேஷாத்ரி என்பவர், காய்கறிச் சாகுபடியில் இருமடி பாத்தி என்ற நுட்பத்தை ஐரோப்பிய அமைப்பு ஒன்றின் துணையுடன் பரப்பி வந்தார். அது விரைவாகவே முடிந்துபோனது.
அதன் பின்னர் புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் என்ற அமைப்பின் சார்பாகப் பல உத்திகள் கையாளப்பட்டன. இம்முயற்சிகள் அரங்குக்குள்ளாகவே நடந்தேறியவையாக இருந்தன.
புதிய அலை
ஆனால், பெரும் பரவலாக நவீன இயற்கை வேளாண்மையின் மறுமலர்ச்சிக் காலம் நம்மாழ்வார், சத்தியமங்கலம் நாகராசன், புளியங்குடி அந்தோணிசாமி, கோமதிநாயகம் குழுவினருடன் தொடங்கியது. ஈரோட்டில் இருந்து புறப்பட்டாலும், தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இன்று யாவரும் இயற்கைவழி வேளாண்மை பற்றி பேசுகின்றனர். மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இதைப் பற்றி பேசுகின்றன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் மழை, வெயில் பாராது இரவும் பகலும் உழைத்தனர். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது பெரிய ஈகம் செய்யப்பட்டது.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

Source;tamil.thehindu.com