வேளாண்மை லாபகரமான தொழிலாக மாறி வருவதால் மென்பொருள், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களும் விவசாயிகளாக மாறி வருவதாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வளம்குன்றா, லாபகரமான வேளாண்மை என்னும் கருத்தை வலியுறுத்தும் விதமாக, தென்னிந்திய அளவிலான வேளாண் கருத்துக் காட்சி, உழவர் நாள் விழா ஆகியவை நடைபெறுகின்றன.
4 நாள்களுக்கு நடைபெறும் விழாவின் தொடக்க நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
மத்திய வேளாண் அமைச்சக பண்ணைத் தகவல் துறை இயக்குநர் ஓ.பி.தாஹியா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக வேளாண் துறை இணைச் செயலர் சி.ராஜேந்திரன், பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அ.ராமகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநர் வி.வின்சென்ட் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
"வேளாண் உற்பத்தியை இரு மடங்கு ஆக்குவோம், உழவரின் வருவாயை மும்மடங்கு ஆக்குவோம்' என்ற தலைப்பில் வேளாண் தொழில்நுட்ப குறும்படக் காட்சி நடைபெற்றது.
முன்னதாக, பல்கலைக்கழக தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வேளாண் விளை பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இதை வேளாண்மைத் துறை இணைச் செயலர் சி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில், வேளாண் கருவிகள், புதிய கண்டுபிடிப்புகள், விளை பொருள்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வேளாண் கருத்துக் காட்சி, உழவர் தினவிழா குறித்து துணைவேந்தர் கு.ராமசாமி கூறியது:
நாட்டில் ஒட்டுமொத்தமாக ஆராய்ச்சிக்கு செலவிடும் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே வேளாண் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும் நவீன தொழில்நுட்பம், விவசாயிகளின் ஆர்வம் காரணமாக இப்போது 1.13 கோடி டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
வேளாண்மை மிகவும் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. இதனால் அதிகளவில் மாத வருவாய் பெறக்கூடிய தொழில்களான மென்பொருள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த பொறியாளர்கள் கூட, தங்களது பணிகளை விட்டு விட்டு இப்போது வேளாண் தொழிலில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அருகேயுள்ள சிங்கபெருமாள்கோயில் அருகில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவன முன்னாள் பணியாளர்கள், காய்கறிகளை பயிரிட்டு கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் திருவாரூர், தேனி மாவட்டங்களில் வாழை பயிரிடும் மென்பொருள் பொறியாளர்கள், பழங்களை உலர்த்தி, சாக்லெட் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர்.
மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் தனியார் பெரு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருபவர்கள், மன நிம்மதிக்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விவசாயம் செய்து வருகின்றனர். பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றும் அவர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது தோட்டத்துக்கு வந்து வேலை செய்கின்றனர்.
அதிநவீன யுக்திகளைக் கையாளும் மென்பொருள் நிறுவன முன்னாள் பணியாளர்கள் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும் வருவாய் ஈட்டி வருகின்றனர். வாழை உற்பத்தியில் தேசிய அளவில் சாதனை படைத்தவர்கள் தனியார் நிறுவனத்தில் இருந்து விலகி, விவசாயத்துக்கு வந்தவர்கள்தான். எனவே, உணர்வுப்பூர்வமாக விவசாயத்தில் நுழைபவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைவார்கள்.
விவசாயத் தொழிலைத் தேர்வு செய்ய விரும்பும் இளைஞர்களுக்காகவும், அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் இதுபோன்ற வேளாண் கருத்துக் காட்சி, உழவர் நாள் விழாக்கள் துணையாக இருக்கும் என்றார் அவர்.
பார்வையாளர்களைக் கவர்ந்த பாரம்பரிய விதை சேமிப்புக் கலன்கள்
உழவர் திருவிழா கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பாரம்பரிய விதை சேமிப்புக் கலன்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், பாரம்பரிய விதை சேமிப்புக் கலன்களான வைக்கோலால் ஆன கோட்டை, களிமண்ணால் ஆன குதிர், மரத்தாலான பத்தாயம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இவை தொடர்பாக அரங்கின் நிர்வாகி உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறும்போது, விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் நெல் உள்ளிட்ட பயிர்களில் தரமானவற்றை விதைக்காகத் தேர்வு செய்து அடுத்த ஆண்டு வரை சேமித்து வைப்பார்கள். வைக்கோல் மூலம் எளிய முறையில் பாதுகாக்கப்பட்டு, சாணி கொண்டு பூசப்படும் கோட்டை என்ற கலனில் விதைகள் பூச்சி, புழுக்கள் தாக்காமல் பாதுகாக்கப்படும்.
இதை அடுத்த ஆண்டில் நீரில் ஊறவைத்து விதைகளை எளிதாகப் பிரித்து பயன்படுத்த முடியும். இதே போலவே குதிர், பத்தாயங்கள் மூலம் நமது முன்னோர்கள் விதைகளை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
ஆனால், விதைகளைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தொய்வால் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது வெறும் 100 பாரம்பரிய ரகங்கள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அதிலும் 10 முதல் 15 ரகங்கள் மட்டுமே விவசாயிகளால் பயிரிடப்படுகின்றன என்றார்.
விதை சேமிப்புக் கலன்களைப் போலவே, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வைக்கப்பட்டிருந்த மின்சாரமின்றி காய்கறிகளை கெடாமல் பாதுகாக்கக் கூடிய, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழம் சேமிப்புக் கலன்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
By DN, கோவை
Source: Dinamani
No comments:
Post a Comment