Friday

தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்


தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்...
அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!
ஆசை இருக்கு அரசாள... அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க’ என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட... இது மேல் என்று சொல்லும் அளவுக்கு... மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல்!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகளவில் உருவாகி வரும் ஆட்டுப்பண்ணைகளே அதற்கு சாட்சி! அவர்களில் ஒருவராக... நிறைவான லாபம் பார்த்து வருகிறார்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜன். இளங்கலை வணிகவியல் பட்டதாரியான இவர், புகைப்பட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கைகொடுத்த மூலிகை வைத்தியம்!
கம்பீரமான தோற்றத்தோடு, 250 ஆடுகளுடன் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது, இவரது ஆட்டுப் பண்ணை. ஆடுகளுக்கு பசுந்தீவனம் போட்டுக் கொண்டே நம்மோடு பேச ஆரம்பித்தார், ராஜன்.
''பசுமை விகடனோட தீவிர வாசகர் நான். 2009-ம் வருஷம் நவம்பர் மாசம், ஏழு லட்ச ரூபாய் முதலீடு போட்டு... 86 தலைச்சேரி, 10 போயர், 15 சிரோஹி, 15 தலைச்சேரி-போயர் கலப்பு ஆடுகள்னு மொத்தம் 126 ஆடுகளோட பண்ணையை ஆரம்பிச்சேன். அந்த சமயம் குளிர்காலங்கிறதால, ஆடுகளுக்கு கடுமையான சளித்தொந்தரவால நிமோனியா வந்துடுச்சு. எவ்வளவோ இங்கிலீஷ் மருந்துகள் கொடுத்தும், சரி பண்ண முடியல. 20 ஆடுகள் வரைக்கும் இறந்துடுச்சு. கடைசியா, தஞ்சாவூர், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தோட தலைவர், டாக்டர். புண்ணியமூர்த்தி சொன்ன மூலிகை வைத்தியத்தைக் கடைபிடிச்சப்போ... எல்லா ஆடுகளுமே குணமாகி, ஆரோக்கியமா வளர ஆரம்பிச்சுது. அதனால வரப்பு ஓரத்துல எல்லாம்... ஆடு, மாடுகளுக்குத் தேவையான மூலிகைகளையும் வளர்த்து தேவைப்படுறப்போ பயன்படுத்திகிட்டிருக்கோம்.
இயற்கை உரத்தில் தீவன சாகுபடி!
தீவனத்துக்காக 3 ஏக்கர்ல கோ-4, ஒன்றரை ஏக்கர்ல தீவனச் சோளம், ஒன்றரை ஏக்கர்ல வேலிமசால், அரை ஏக்கர்ல அகத்தினு சாகுபடி செய்யுறோம். சொந்தமா பசுந்தீவனம் சாகுபடி செஞ்சு தாராளமா கொடுக்கறதால, ஆடுகளும்... ஊட்டமா, திடகாத்திரமா வளருதுங்க. தீவனச் செலவும் குறையுது. எங்ககிட்ட இருக்கற 15 மாடுகளுக்கும் இதுலயே பசுந்தீவனம் கிடைச்சுடுது. அடர்தீவனத்துக்கு மக்காச்சோளம் அதிகமா தேவைப்படுறதால, 3 ஏக்கர்ல அதையும் போட்டிருக்கோம். தேவைக்குப் போக, மீதியை விற்பனை செஞ்சுடுவோம்.
பத்தரை ஏக்கர்ல நெல், கடலை, எள், வாழைனு இருக்கு. வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்கு 500 கிலோ ஆட்டு எருவும் ரெண்டரை டன் மாட்டு எருவும் போடுறோம். பசுந்தீவனத்துக்கு எந்த ரசாயன உரமும் கொடுக்குறதில்ல. நெல், மக்காச்சோளம், கடலை மாதிரியான பயிர்களுக்கு மட்டும் கொஞ்சமா யூரியா போடுவோம். அதனால எங்களுக்கு உரச் செலவும் குறைஞ்சுடுது'' என்ற ராஜன், தொடர்ந்தார்.
பாதுகாப்பான பரண்!
''தரையில் இருந்து நாலரை அடி உயரத்துல ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டு, பரண் அமைச்சுருக்கேன். தாராளமா காத்தோட்டம் கிடைக்கிற மாதிரி அமைச்சுருக்கறதால, உள்ள வெக்கை இருக்காது. 220 அடி நீளம், 21 அடி அகலத்தில் கொட்டகை இருக்கு. இதை 13 பாகமா பிரிச்சுருக்கேன். ஒரு பாகத்துல பெரிய ஆடுகள் 20 வரைக்கும் அடைக்கலாம். குட்டிகளா இருந்தா, 30 வரை அடைக்கலாம். கழிவுகள் கீழ விழுற மாதிரி கொட்டகையோட தரைப்பகுதியில இடைவெளி விட்டிருக்கேன். பரணுக்கு கீழே சேகரமாகுற கழிவுகளை வாரத்துக்கு ஒரு தடவை அள்ளிடுவோம்.  
4 கிலோ பசுந்தீவனம்... அரை கிலோ அடர்தீவனம்!
கோ-4-ல 40%, வேலிமசால்ல 20%, தீவனச்சோளத்துல 25%, அகத்தியில 10%, கிளரிசீடியா, சூபாபுல், கல்யாணமுருங்கை ஒவ்வொண்ணுலயும் 5% னு எடுத்து, மொத்தமா கலந்து... அதுல ஒரு பெரிய ஆட்டுக்கு தினம் 4 கிலோ அளவுக்குக் கொடுக்குறோம். இதை மூணு வேளையா பிரிச்சு கொடுப்போம். குட்டிக்கு ஒண்ணரை கிலோ அளவுக்குக் கொடுக்குறோம். இதுபோக, தினமும் மதியம் ஒரு மணியளவுல அடர்தீவனம் கொடுப்போம். குருணையா உடைச்ச மக்காசோளம் 40%, கோதுமைத் தவிடு 10%, நெல் தவிடு 21%, கடலைப் புண்ணாக்கு 15%, சோளமாவு 10%, தாது உப்பு 3%, சாதாரண கல் உப்பு 1% இந்த விகிதத்துல கலந்து, இதுல பெரிய ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 500 கிராம் வரைக்கும், குட்டிகளுக்கு 200 கிராம் வரைக்கும் கொடுக்குறோம்'' என்ற ராஜன் மற்ற பராமரிப்பு முறைகளையும் சொன்னார்.
காலந்தவறாமல் தடுப்பூசி!
''15 நாளைக்கு ஒரு தடவை பரணை சுத்தமா கூட்டி விட்டுடுவோம். தினமும் காலையில, சாயங்காலம் ஆடுகளை வெயில்ல கொஞ்ச நேரம் நிறுத்துவோம். வருஷத்துக்கு ரெண்டு தடவை, துள்ளுமாரி நோய், அம்மை நோய்களுக்கான தடுப்பு ஊசி போட்டுடுவோம். மூணு மாசத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்க மருந்து தருவோம். பனிக் காலத்துல கொட்டகையை சுத்தி நாலு பக்கமும் பாலிதீன் படுதா கட்டி, குளிரைக் கட்டுப்படுத்துவோம். நோய் அறிகுறி ஏதும் தெரிஞ்சாலே, அதுக்கான மூலிகை வைத்தியத்தை உடனே செஞ்சுடுவோம்.
ராத்திரி நேரத்துல வேப்பங்கொட்டையை உடைச்சி, நெருப்புல போட்டு, ஆடுகள் இருக்கற பகுதியில புகை உண்டாக்குவோம். அதனால, ஆடுகளுக்கு கதகதப்பா இருக்குறதோட, ஈ, கொசு இதெல்லாம் அண்டாம இருக்கும். கொட்டகையை சுத்தி பயிர் பண்றதால வெயில் காலங்கள்ல வெக்கையும் தணிஞ்சுடும்.
20 பெட்டைக்கு ஒரு கிடானு சேர்த்து விடுவோம். ஒரு ஆடு, ரெண்டு வருஷத்துல, மூணு தடவை குட்டி போடும். இதன் மூலமா ஆறு குட்டிகள் கிடைக்கும். சராசரியா ரெண்டு வருஷத்துல அஞ்சு குட்டி கிடைச்சுடும்.
கிலோ 300 ரூபாய்!
கிடா குட்டிகளை அஞ்சு மாசத்துல இருந்து ஆறு மாச வயசுல வித்துடுவோம். தலைச்சேரி கிடாவும் சிரோஹி கிடாவும் இந்த வயசுல 15 கிலோ வரை வந்துடும். தலைச்சேரி-போயர் கலப்பினக் கிடா... ஆறு மாசத்துல 20 கிலோ வரை வந்துடும். கிடா ஆடுகளை பெரும்பாலும் இறைச்சிக்காகதான் வாங்குவாங்க. ஒரு கிலோ உயிர் எடை 225 ரூபாய்னு விப்போம். பெட்டை ஆடுகளை வளர்ப்புக்காக வாங்கிட்டுப் போவாங்க. அதனால, ஆறு மாச வயசுல இருந்து பத்து மாச வயசு வரைக்கும் வளர்த்து விப்போம். வளர்பபு ஆடுகள்ங்கறதால, உயிர் எடை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் விலை கிடைக்கிது. போயர் ரகத்துல, கிடா, பெட்டை இரண்டையுமே வளர்ப்புக்காகத்தான் வாங்கிக்கிட்டு போவாங்க. இதுல கிடா, உயிர் எடையில ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். பெட்டை, 1,500 ரூபாய்க்கு விலை போகும். ஆனா, அதிகமா விலை கிடைக்குதேனு அதிக எண்ணிக்கையில வளர்த்துடக் கூடாது. இதை வாங்குறவங்க ரொம்ப குறைவு'' என்று எச்சரிக்கையும் தந்த ராஜன், நிறைவாக...
4 ஆண்டுகள்... ஆயிரம் ஆடுகள்!
''இந்த நாலு வருஷத்துல எல்லா ரகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் ஆடுகள் வரை பெருகியிருக்கு. இதுவரைக்கும்
850 ஆடுகளை, 51 லட்ச ரூபாய்க்கு வித்துருக்கோம். தீவனம், ஆள் சம்பளம், மருத்துவம், மின்சாரம், பராமரிப்புனு செலவெல்லாம் போக... 30 லட்சம் ரூபாய் நிகர லாபமா கிடைச்சுருக்கு. 250 ஆடுகள் கொட்டகைகள்ல நின்னுக்கிட்டு இருக்கு.
பண்ணைக்குப் போக மீதி இருக்குற ஆட்டு எருவை ஒரு டன் 2 ஆயிரத்து 500 ரூபாய்னு விக்கிறோம். வருஷத்துக்கு 20 டன் வரைக்கும், விக்கிறோம். இதுலயும் கணிசமான வருமானம் கிடைக்குது. எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்தா... இதைவிட பெருசா வேற லாபம் என்ன வேண்டிக்கிடக்குனுதான் எனக்கு கேக்க தோணும்'' என்று புன்னகைத்தார்!
தொடர்புக்கு,
ராஜன்,
செல்போன்: 99420-64180

Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71240


1 comment:

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238