4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம்
விவசாயக்
குடும்பத்தில் பிறந்திருந்தாலும்… வாழ்க்கை
முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத்
தொடர முடியாத பலரும், நிலங்களைப்
பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட நிலத்தை விற்க மனமில்லாமல்,
அதில் மரங்களை வளர்த்து, விவசாயத்தைத்
தொடர்பவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர்… சென்னை, மாங்காடு, விநாயகமூர்த்தி.
குன்றத்தூர்
நால்ரோட்டிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் குறுகிய சாலையில் இரண்டு
நிமிடம் பயணித்தால், சிமெண்ட் காம்பவுண்டுக்குள் கம்பீரமாகக் காட்சி தருகிறது
விநாயகமூர்த்தியின் மரச் சோலை. உள்ளே, உயர வளர்ந்துள்ள மலைவேம்பு, குமிழ், மகோகனி மரங்களுக்கு இடையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
விநாயகமூர்த்தியின் மரச் சோலை. உள்ளே, உயர வளர்ந்துள்ள மலைவேம்பு, குமிழ், மகோகனி மரங்களுக்கு இடையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
”எங்க
பரம்பரைச் சொத்தை பாகம் பிரிச்சதுல,
ஆறரை ஏக்கர் கிடைச்சது. அதுல
நெல்லு மட்டும்தான் போடுவேன். பக்கத்துல செம்பரம்பாக்கம் ஏரி இருக்கறதால பாசனத்துக்குப்
பஞ்சமில்ல. ஒரு கட்டத்துல விவசாயம்
செய்யறதுக்கு ஆளுங்க கிடைக்காம, நிலத்த
சும்மா போட வேண்டி வந்துச்சு.
அப்ப, இந்தப் பகுதியில நிலம்
நல்ல விலைக்குப் போயிட்டு இருந்ததால… நிறைய பேரு வித்துட்டாங்க.
எனக்கு மனசு வரல. ‘நாம
இருக்கிறவரை நிலத்தைக் காப்பாத்தி வைக்கணும். அதுக்கு என்ன பண்றது?’னு யோசிச்சுட்டு இருந்த
சமயத்தில, என்னோட மச்சான் மூலம்
மரம் வளர்க்குற யோசனை கிடைச்சுது.
நான் ‘பசுமை விகடன்’ தொடர்ந்து படிப்பேன். அதனால, மலைவேம்பு, குமிழ்,
மகோகனி மரங்களைப் பத்தி தெரிஞ்சு வெச்சுருந்தேன்.
இருந்தாலும், மர சாகுபடி செஞ்சிருக்கற
சில விவசாயிங்களோட தோட்டத்தையும் போய் பாத்துட்டுதான் மர
வளப்புல இறங்கினேன். 2010-ம் வருஷம் அக்டோபர்
மாசம், 4 ஏக்கர் நிலத்துல… 15 அடிக்கு 15 அடி இடைவெளியில, மூணடி
ஆழத்துக்கு ‘ஜே.சி.பி.’
வெச்சு குழி எடுத்தேன். வாய்க்கால்
எடுத்து, 1,500 மலைவேம்பு, 500 குமிழ், 200 மகோகனி கன்னுகளை நடவு
செஞ்சுருக்கேன். பொதுவா 15 அடிக்கு 15 அடி இடைவெளியில நடவு
செய்யுறப்ப, ஏக்கருக்கு 225 மரம்தான் நடவு செய்ய முடியும்.
அதன்படி பார்த்தா நாலு ஏக்கர்லயும் 900 மரங்கள்
நடலாம். ஆனா, இடைவெளி கிடைச்ச
இடத்துலயெல்லாம்கூட மரங்களையும் நடவு செஞ்சுருக்கேன். அதாவது,
15 அடி இடைவெளிக்கு, இடையில் மலைவேம்பு, குமிழ்,
மகோகனி மரங்களை நடவு
செய்திருக்கேன். ஆக, மொத்தம் 2,200 மரங்களை
இந்த முறையைப் பயன்படுத்தி நடவு செய்தேன்.
மரமெல்லாம்
நல்லா வேர் பிடிக்கிற வரைக்கும்
தண்ணி பாய்ச்சினேன். 100 கிலோ மாட்டுச் சாணம்,
50 லிட்டர் கோமியம், 5 கிலோ வெல்லம் மூணையும்
கலந்து ரெண்டு நாள் ஊற
வெச்சு, பாசன தண்ணியில அடிக்கடி
கலந்து விட்டுடுவேன். செடி நல்லா வேர்
பிடிச்ச பிறகு, 20 நாளைக்கு ஒரு தண்ணி கொடுக்கிறேன்.
மரங்கள் 20 அடி உயரம் வரை
வளர்ற வரைக்கும் அப்பப்போ கவாத்து பண்ணிட்டு இருந்தேன்.
இப்ப பண்றதில்லை” என்று சற்றே இடைவெளி
கொடுத்த விநாயகமூர்த்தி, தொடர்ந்தார்.
களை எடுக்கும் கால்நடைகள்!
”என்
தோட்டத்தை சுத்தியும் ஆறடிக்கு சுவர் இருக்கு. மரங்களுக்கு
இடையில புல் நிறைய வளர்ந்ததால,
ஏழு மாடுகளை வாங்கி விட்டேன்.
அதுல ஒண்ணு மட்டும் இப்போ
கறவையில இருக்கு. மத்ததெல்லாம் சினையா இருக்குது. மேய்ச்சல்னு
பார்த்தா…
தோட்டத்துல இருக்கிற புல் மட்டும்தான். ‘மரங்களுக்கு
இடையில, தீவனப்பயிர்கள வளர்க்கலாம்’னு பசுமை விகடன்ல
ஒரு கட்டுரை படிச்சேன். உடனே
50 சென்ட்ல கோ-4. ரகத்தையும், 25 சென்ட்ல
கோ.எஃப்.எஸ்.-29 ரக
சோளத்தையும் விதைச்சேன். இப்போ வெளியில வைக்கோல்
வாங்கறத நிறுத்திட்டேன்.
அதோட,
500 தேக்கு, 10 மூங்கில், 5 கிளரிசீடியா, 3 பேரீட்சை, 10 இமாம் பசந்த், 10 பங்கனப்பள்ளி,
10 மல்லிகா, 5 அல்போன்சா, 100 கற்பூரவல்லி வாழைனு ஊடுபயிரா, வேலியோரங்களிலும்
நட்டுருக்கேன். கொஞ்ச இடத்துல வீட்டுத்
தேவைக்காக, கத்திரிக்காய், சுரைக்காய், பூசணி, அகத்தி, இன்சுலின்,
சோத்துக் கத்தாழை, பிரண்டை, நித்ய கல்யாணி மாதிரியான
செடிகளையும் வளர்த்துட்டு இருக்கேன்” என்ற விநாயகமூர்த்தி, நிறைவாக,
”மூணு
வருஷத்துல ஒரு லட்ச ரூபாய்
வரை செலவு செஞ்சுருக்கேன். இப்போ,
மலைவேம்பு 30 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு
வந்துடுச்சு. குமிழ், 20 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு
வந்துடுச்சு. இன்னும் 12 வருஷம் கழிச்சுதான் மகோகனியோட
வளர்ச்சி தெரியும். ரெண்டு வருஷம் கழிச்சு,
மலைவேம்பை அறுவடை செய்யலாம். குறைஞ்சபட்சம்
ஒரு மலைவேம்பு மரம் சராசரியா அரை
டன் எடைக்கு வந்திருக்கும். மொத்தமிருக்கற
1,500 மலைவேம்புல பாதிக்கு பாதி. அதாவது, 800 மரங்கள்
மட்டுமே தேறும்னு வெச்சுக்கிட்டாலும்… 400 டன்
கிடைக்கும். இன்னிக்கு மார்க்கெட்ல ஒரு டன் மலைவேம்பு
6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு போயிட்டு இருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சு
இதைவிட இன்னும் அதிகமாகுமே தவிர,
குறைய வாய்ப்பில்லை. ரொம்ப மோசமா… ஒரு டன் 3 ஆயிரம்
ரூபாய்க்கு விலை போனாகூட, 12 லட்ச
ரூபாய் கிடைக்கும்.
இன்னும்
4 வருஷத்துல குமிழ் அறுவடைக்கு வரும்.
500 மரங்கள், குறைந்தபட்சம் 250 டன் எடைக்கு வரும்.
டன் 5 ஆயிரம் ரூபாய்னு கணக்குப்
போட்டா…
12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
இதைத் தவிர மத்த மரங்கள்
எல்லாம் இருக்கு. இருந்தாலும், இந்த ரெண்டு மரங்கள்
மூலமாவே… இன்னும் 2 வருஷம் பண்ற செலவுகள்
போக, 20 லட்ச ரூபாய்க்கு மேல
லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்” என்று
விடைகொடுத்தார், இன்முகத்தோடு!
”நெருக்கி
நட்டால் லாபம்!”
காஞ்சிபுரம்
மாவட்டம் மரம் வளர்ப்பு சங்கத்
தலைவர் ‘எழில்சோலை’ பா.ச. மாசிலாமணியிடம்,
நான்கு ஏக்கரில் இவ்வளவு மரங்களை சாகுபடி
செய்ய முடியுமா? என்று கேட்டோம்.
”மரப்
பயிர்களை நெருக்கி நடவு செய்வதுதான் நல்லது.
அதைத்தான் இந்த விவசாயியும் செய்திருக்கிறார்.
அதிக இடைவெளிவிட்டு நடவு செய்தால், கிளைகள்
பரப்பி, மரங்கள் நேராக வளராது.
இதனால், அந்த மரங்களை மர
வேலைக்குப் பயன்படுத்துவது சிரமம். நெருக்கமாக நடவு
செய்யும்போது, சூரிய ஒளியைத் தேடி,
மரங்கள் மேல் நோக்கி வளரும்.
இப்படி வளரும் மரங்கள் சந்தையிலும்
நல்ல விலைக்கு விற்பனையாகும். தற்சமயம் நெருக்கி நடவு செய்வதில், விவசாயிகள்
ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு
ஏக்கரில், 15 அடிக்கு 12 அடி இடைவெளியில், ஏக்கருக்கு
250 மரக்கன்றுகளும்; 15 அடிக்கு 15 இடைவெளியில் 200 கன்றுகளும் நடவு செய்யலாம். ஆக,
ஏக்கருக்கு 450 மரக்கன்றுகளை நடவு செய்ய முடியும்.
இது தவிர வரப்பைச் சுற்றிலும்
கூட, செடிகளை நடவு செய்யலாம்.
இதன்படி பார்த்தால், ஏக்கருக்கு 500 மரக்கன்றுகள் வரை தாராளமாக சாகுபடி
செய்யமுடியும். இதற்கு மேலும் காடு
போல மரங்களை வளர்ப்பதும் சாத்தியம்தான்’’ என்றார்.
த. ஜெயகுமார் படங்கள்: தி. குமரகுருபரன்
தொடர்புக்கு,
செல்போன்: 94436-38545.
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=46015
No comments:
Post a Comment