Saturday

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்... பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்... பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!
காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள்.
அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.
பேராசிரியர் விதைத்த வித்து!
காலைவேளை ஒன்றில், தன் தோட்டத்தில் பரத் வேலை செய்து கொண்டிருந்தபோது சந்தித்தோம். ''சென்னை, பச்சையப்பா காலேஜ்ல எம்.எஸ்.சி ஜுவாலஜி படிச்சுட்டு இருந்த சமயத்துல, பஞ்சகவ்யா பத்தி ஒரு பேராசிரியர் சொன்னார். அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் வந்து, அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கறதுதான் வேலை. அங்கதான், மரங்கள்ல இலையைச் சாப்பிடற பூச்சிகள், தண்டுகள துளைக்கிற வண்டுகள், வேரை பாதிக்கிற பூச்சிகள் பத்தியெல்லாம் அனுபவரீதியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, தேக்கு மரத்துல இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோயோட பாதிப்பு அதிகமா இருந்துச்சு. அந்த மரங்களுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ பூச்சிகள் கட்டுப்பட்டுச்சி. நன்மை செய்ற பூச்சிகளும் நிறைய வந்துச்சி. புதுசா வெச்ச மரக் கன்றுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்துச்சி. அப்போதான், 'இதைப் பயன்படுத்தி நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது?’னு யோசனை வந்துச்சி. இதுதான், இன்னிக்கு என்னையும் ஒரு விவசாயியா உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
நிறைய இயற்கை... கொஞ்சம் செயற்கை!
நாலு வருஷமா அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்குற தம்பி பாஸ்கரனும் லீவு நாட்கள்ல எங்களோட சேர்ந்துக்கு வான். ஒரே பயிரைப் போடுறப்போதான், பூச்சிகள், நோய்கள், விலை இல்லாம போறதுனு பல பிரச்னைகள் வரும். அதனால, கீரை, காய்கறிகள், நெல்னு கலந்துதான் சாகுபடி செய்றோம். கொஞ்சம் ரசாயனம், கொஞ்சம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கலந்து விவசாயம் செய்றோம். நண்பர் மூலமா சீரகச் சம்பா விதைநெல் கிடைச்சுது. 20 சென்ட்ல அதை விதைச்சு... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் சேத்துக் கொடுத்ததுல நல்லா வளந்துச்சு. இப்போ ஊர்க்காரங்கள்லாம் என்கிட்ட பஞ்சகவ்யா பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்ற பரத், தொடர்ந்தார்.
கலப்புப் பயிரோடு கறவை மாடுகளும்!
''மொத்தம் ரெண்டு ஏக்கர் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். அதனால, எந்தப் பயிர் வெச்சாலும் தங்கமா விளையும். 15 சென்ட்ல கோ-4 தீவனப் பயிர், 10 சென்ட்ல மிளகாய் (இந்த 25 சென்ட்லயே 20 செம்மரம், 20 மகோகனி, 20 தேக்குக் கன்றுகள 6 க்கு 6 இடைவெளியில் நடவு போட்டிருக்கிறார்), 30 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா அவரையும், 20 சென்ட்ல கனகாம்பரம், 10 சென்ட்ல ராகி, 15 சென்ட்ல தனியாக கீரையும், 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா நூக்கல், முள்ளங்கி, பாம்பு வெள்ளரியை போட்டிருக்கேன். மீதி 40 சென்ட்ல வெண்டையும், நெல்லும் அறுவடை முடிச்சுருக்கேன். மூணு மாடுகள், மூணு கன்னுகுட்டிகளும் இருக்கு. அதுல, ரெண்டு மாடு கறவையில இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. மரப்பயிர், கனகாம்பரம், ராகி இதெல்லாம் இப்பத்தான் நடவு போட்டு வளர்ந்துகிட்டிருக்கு. இதுல மகசூல் பார்க்க இன்னும் நாளாகும்.

சிறுகீரையை 17-வது நாள்ல இருந்து அறுவடை பண்ணலாம். அரைக்கீரை, முளைக்கீரை ரெண்டையும் 20-வது நாள்ல அறுவடை பண்ணலாம். தொடர்ந்து, 5 நாள் வரை கீரை பறிக்கலாம். தனித்தனியா மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒவ்வொரு பாத்தியிலயும் ரெண்டு நாள் இடைவெளியில விதைகளைத் தூவுவேன். இப்படி செய்யுறப்போ, தொடர்ந்து 20 நாளுக்கு கீரை பறிக்க முடியுது. மேட்டுப்பாத்திங்கிறதால, மழைக் காலத்துல தண்ணி தேங்காது. அதேமாதிரி சுழற்சி முறையில்தான் பயிர் நடவு செய்றேன். ஒரு முறை கீரை போட்டா... அந்த நிலத்துல அடுத்த முறை வெண்டை, அடுத்த முறை நெல், அடுத்த முறை கேழ்வரகுனு மாத்தி மாத்தி பயிர் செய்றப்போ, நிலத்துல சத்துக்கள் குறையறதில்லை.
நிலத்திலேயே விதை வங்கி!
இப்போ, கடைகள்ல 1 கிலோ விதை சிறுகீரை-180 ரூபாய், முளைக்கீரை-300 ரூபாய், அரைக்கீரை-400 ரூபாய்னு விதைகளை விற்பனை பண்றாங்க. விலை கூடுதலா இருக்கறதால... நானே விதையை உற்பத்தி பண்ணிக்கிறேன். எவ்வளவு விதை தேவையோ... அந்தளவுக்கான கீரைகளை மட்டும் பறிக்காம நிலத்துல விட்டுட்டா 40-45 நாள்ல விதை வந்துடும். அப்படியே கீரையை வேரோட பிடுங்கி, ஒரு வாரத்துக்கு காய வெச்சு கம்பால தட்டி தூத்துனா, விதைகள் கிடைச்சுடும். இதனால, விதைச்செலவு குறைஞ்சுடுது'' என்ற பரத் வருமானம் பற்றிச் சொன்னார்.
3 மாதங்கள்... 90 ஆயிரம் ரூபாய்!
''30 சென்ட்ல இருக்கற வெண்டை அறுவடை முடிஞ்சிருக்கு. ஒரு அறுப்புக்கு ஏறக்குறைய 60 கிலோ வரைக்கும் கிடைச்சுது. எனக்கு மொத்தம் 22 அறுப்பு மூலமா 1,300 கிலோ காய் கிடைச்சுது. ஒரு கிலோ 13 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரைக்கும் வித்துச்சி. சராசரியா 15 ரூபாய் கிடைக்கும். அப்படி பார்த்தா... 1,300 கிலோ மூலமா, 19 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. வருஷத்துல மூணு முறை இப்படி வெண்டை போட்டுடுவேன்.
கீரை மொத்தம் 75 சென்ட்ல இருக்கு. இதுல தனியா 15 சென்ட்ல இருக்கற கீரை இன்னும் அறுவடைக்கு வரல. 60 சென்ட் கீரை மூலமா... 3 ஆயிரத்து 800 கட்டு கீரை அறுவடை செஞ்சு, கட்டு 6 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 22 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சுது. இந்த 60 சென்ட் கீரையில ஊடுபயிரா போட்டிருந்த வெள்ளரி, முள்ளங்கி, நூக்கல் எல்லாத்துலயும் சேர்த்து 5,800 ரூபாய் கிடைச்சுது. இதுல ஊடுபயிரா இருக்கற அவரையில 300 கிலோ கிடைச்சுது. கிலோ 20 ரூபாய் வீதம் விற்பனை செய்ததுல... 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிளகாய்ல 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. ஆகக்கூடி மூணு மாசத்துல கிடைக்கிற மொத்த வருமானம்... 61 ஆயிரத்து 600 ரூபாய்.
மாடு வளர்க்கறதால... பால் மூலமா மாசம் 9 ஆயிரம் 660 ரூபாய் கிடைக்குது. இதையே மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா..
28 ஆயிரம் 980 ரூபாய் கிடைக்குது. ஆக, 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல இருக்கற பயிர் மற்றும் மூணு கறவை மாடுகள் மூலமா, 90 ஆயிரத்து 580 ரூபாய் கிடைக்குது. மூணு மாசத்துக்கான செலவு 23,200. லாபம்...
67 ஆயிரத்து 380 ரூபாய். மாசத்துக்கு 22 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்'' என்ற பரத், நிறைவாக, ''எவ்வளவு நல்ல விலை கிடைச்சாலும், ஒரே காயை அதிகப் பரப்புல சாகுபடி செய்ய மாட்டேன். கலந்து பயிர் செய்றதால எனக்கு விலை கிடைக்கலைங்கிற பிரச்னை இல்லை. நிறைய பேர் என்கிட்ட 'நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்தை ஏன் பாக்குற’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மழை மட்டும் கைகொடுத்தா, இன்னும் கூடுதலாவே என்னால சம்பாதிக்க முடியும். நல்ல மனநிறைவோட எனக்கு பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்'' என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.


தொடர்புக்கு, பரத்,  
செல்போன்: 99766-92219.

த. ஜெயகுமார் படங்கள்: சொ. பாலசுப்ரமணியன், தி. குமரகுருபரன்
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=94385


No comments: