Sunday

வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! 60 சென்ட்... 3 மாதங்கள்... 47 ஆயிரம்!

வெகுமதி கொடுக்கும் வெள்ளரி!
60 சென்ட்... 3 மாதங்கள்... 47 ஆயிரம்!
சுட்டெரிக்கும் கோடை வெயில் காலங்களில் பகல் நேரப் பேருந்துப் பயணங்களை குளிர்ச்சியாக மாற்றுவது, ஜன்னல் ஓரங்களில் விற்கப்படும் 'நாட்டு வெள்ளரிக்காய்’ பிஞ்சுகள்தான். பயணிகளைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையோடு சாகுபடி செய்யும் விவசாயிகளின் மனதையும் வருமானத்தால் குளிர்ச்சியடைய வைக்கிறது, வெள்ளரி. இந்த சூட்சமம் தெரிந்த பலரும் கோடை காலத்தில் அறுவடைக்கு வருவது போல வெள்ளரியை சாகுபடி செய்வது வழக்கம்.
அவர்களில் ஒருவர்தான், விழுப்புரம் நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவா.
செங்கல் சூளையிலியிருந்து விவசாயத்துக்கு!
வெள்ளரிப் பிஞ்சுகள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவாவைச் சந்தித்தோம். கடிப்பதற்கு ஒரு வெள்ளரிப் பிஞ்சைக் கொடுத்து விட்டுப் பேச ஆரம்பித்தவர், ''பத்தாவது படிக்கும்போது, செங்கல் தொழில் எங்க ஊர்ல கொடிகட்டிப் பறந்தது. அப்பா, அந்தத் தொழில் பார்த்ததால படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டு, அப்பாவுக்கு உதவியா நானும் அதுல இறங்கிட்டேன். அப்படியே தபால் மூலமா டிகிரியும் முடிச்சிட்டேன். செங்கல் தொழிலோட டிராவல்ஸும் நடத்தினோம். கிட்டத்தட்ட 15 வருஷமா உச்சத்துல இருந்த செங்கல் தொழில்ல அதிகமான போட்டி காரணத்தால லாபம் குறைய ஆரம்பிக்கவும், விவசாயத்துக்கு வந்துட்டோம். இப்போ அஞ்சு வருஷமா விவசாயம்தான் பார்த்துட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சிவா, தொடர்ந்தார்.
''எங்க ஊர்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல விழுப்புரம் டவுன் இருக்கறதால கத்திரிக்காய், வெண்டைக்காய்னு சாகுபடி செஞ்சு விற்பனை செய்றேன். காலையில காய்களைப் பறிச்சுக்கிட்டுப் போகும்போது, 'ஃபிரஷ்ஷா’ இருக்கறதால உடனே வித்துடும். அதனால, விற்பனைக்கு பிரச்னையே இல்லை. கோடை காலத்துல வெள்ளரிக்கான தேவை அதிகமா இருக்கறதால, எங்க கிராமத்துல நிறைய பேர் அதை சாகுபடி செய்றாங்க. அதனால நானும் மூணு வருஷமா சாகுபடி செய்றேன். வியாபாரிங்க தோட்டத்துக்கே வந்து வெள்ளரி பிஞ்சுகளைப் பறிச்சுக்கிட்டுப் போயிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு தப்பி பழுத்துடுச்சுனா, அதுல இருந்து விதை எடுத்துக்குவோம். விதையையும் ஒரு கிலோ 100 ரூபாய்க்குக் குறையாம விற்பனை செய்ய முடியும்.
வெள்ளரிப் பழ சாகுபடியைவிட பிஞ்சு வெள்ளரியிலதான் லாபம் அதிகம். செலவும் குறைவு. எங்களுக்கு இருக்குற 10 ஏக்கர் நிலத்துல, ஒரு ஏக்கர் 40 சென்ட்ல கத்திரி, ஒரு ஏக்கர்ல வெண்டை, 3 ஏக்கர்ல கொய்யா, 4 ஏக்கர்ல நெல், 60 சென்ட்ல நாட்டு வெள்ளரி சாகுபடி செய்திருக்கேன்'' என்ற சிவா, 60 சென்ட் நிலத்தில் வெள்ளரி சாகுபடி செய்யும் முறை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருகிறோம்.
60 சென்ட்டுக்கு அரை கிலோ விதை!
'வெள்ளரியின் ஆயுட்காலம் 90 நாட்கள். இதற்கு, வடிகால் வசதியோடு இருக்கும் அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. தை மாதம் முதல் மாசி மாதம் வரை உள்ள பட்டத்தில் சிறப்பாக விளையும். 60 சென்ட் நிலத்துக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, இரண்டு சால் டிராக்டர் உழவு செய்து, 15 நாட்கள் ஆறப்போட வேண்டும். மீண்டும் ஓர் உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக மாற்றி... 3 கிலோ மண லுடன், அரை கிலோ வெள்ளரி விதையைக் கலந்து விதைத்து, மூங்கில் முள் படல் அல்லது டிராக்டர் மூலம் இயங்கும் பரம்புப் பலகையை வைத்து, நிலத்தின் மீது இழுத்து மண்ணால் மூடிவிட வேண்டும்.
50-ம் நாளில் அறுவடை!
7-ம் நாளில் விதைகள் முளைப்பு எடுத்துவிடும். 20-ம் நாளில் களை எடுத்துவிட்டு, பரிந்துரைக்கப்படும் ரசாயன உரத்தை இட்டு, தண்ணீர் கட்டவேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, தண்ணீர் கட்டினால் போதும். 25-ம் நாளுக்குமேல் வளர்ந்து, வெள்ளரிக் கொடிகள் நிலத்தில் படர ஆரம்பிக்கும். அதற்கு மேல் களை எடுக்கத் தேவையில்லை. 35-ம் நாளில் பரிந்துரைக்கப்படும் ரசாயன உரத்தைத் தூவி தண்ணீர் கட்ட வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் பூச்சித் தாக்குதல் இருந்தால், பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.
45-ம் நாளில் பூவெடுத்து, 50-ம் நாள் அறுவடைக்கு வந்துவிடும். அதற்குப் பிறகு, தினம் வெள்ளரிப் பிஞ்சுகளை அறுவடை செய்யலாம். 55-ம் நாளில் அதிகப் பூக்கள் பூப்பதற்காக வளர்ச்சி ஊக்கிகளைத் தெளிக்க வேண்டும். காய்கள் பறிக்க ஆரம்பித்த பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை பரிந்துரைக்கப்படும் ரசாயன உரத்தைத் தூவி, தண்ணீர் கட்ட வேண்டும். 50-ம் நாளில் இருந்து 90-ம் நாள் வரை தொடர்ச்சியாக 40 நாட்கள் வெள்ளரிப் பிஞ்சுகளை அறுவடை செய்யலாம்.’
சாகுபடிப் பாடம் சொன்ன சிவா, ''60 சென்ட்ல தினமும் 600 பிஞ்சுல இருந்து 800 பிஞ்சு வரை கிடைக்கும். சராசரியாக தினம் 700 பிஞ்சுனு வெச்சுக்கிட்டா...
40 நாளைக்கு மொத்தம் 28 ஆயிரம் பிஞ்சுகள் கிடைக்கும். தோட்டத்திலேயே ஒரு பிஞ்சு ரெண்டு ரூபாய்னு எடுத்துக்கிறாங்க. அது மூலமா, 56 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். எப்படியும் கொஞ்சம் பழுத்துடும். அதுல இருந்து, சராசரியா 20 கிலோ விதை கிடைச்சுடும். அதை கிலோ 100 ரூபாய்னு விற்பனை செய்தால், 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் கிடைக்கிற 58 ஆயிரம் ரூபாயில் செலவுகள் போக... 47 ஆயிரம் ரூபாய் லாபம்... 90 நாள்ல'' என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு,
சிவா, செல்போன்: 98431-26661 
ஏகாம்பரம், செல்போன்: 90959-74287



 இயற்கை வெள்ளரி!
சிவா, செய்து கொண்டிருப்பது ரசாயன விவ சாயம். இதையே இயற்கை முறையிலும் எளிதாகச் செய்ய முடியும் என்பதற்கு வழிகாட்டுகிறார்... இயற்கை முறை காய்கறி சாகுபடி தொழில்நுட்ப வல்லுநர் ஏகாம்பரம்.
''ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு... ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும்.  
அசுவினியை விரட்டும் உரக்கலவை!
20-ம் நாளில் களை எடுத்துவிட்டு, 100 கிலோ எருவுடன், 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் நான்கு விரல் அளவுக்கு வைத்து தண்ணீர்விட வேண்டும். 30-ம் நாளுக்குமேல் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில், டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளித்துவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டேங்குகள் தேவைப்படும். 40-ம் நாளில் 10 கிலோ சாம்பல் தூள், 10 கிலோ வெள்ளாட்டுச் சாணத்தூள், 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தூவி, தண்ணீர் கட்ட வேண்டும். இது அசுவினித் தாக்குதலைக் குறைக்கவும், காய்களைப் பெருக்க வைக்கவும் உதவும்.
காய்புழுவைத் துரத்தும் மூலிகைப் பூச்சிவிரட்டி!
45-ம் நாளில் டேங்குக்கு (10 லிட்டர்) 500 மில்லி தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண் டும். 50-ம் நாளுக்கு மேல் காய்ப்பு எடுக்கும். பறிப்பு துவங்கியதும் வாரம் ஒரு முறை டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி தேமோர் கரைசலோடு, 150 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். காய்புழுத் தாக்குதல் தென்பட்டால், டேங்க்குக்கு ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சி விரட்டியைக் கலந்து தெளித்துவிட வேண்டும். அல்லது டேங்க்குக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிதளவு காதி சோப் கரைசல் கலந்து தெளித்துவிட வேண்டும். இப்படி இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது மகசூல் கூடுவதுடன், வெள்ளரிப் பிஞ்சுகள் சுவையாகவும் இருக்கும்'' என்று சொன்னார்.
காசி. வேம்பையன் படங்கள்: தே. சிலம்பரசன்
Source: pasumaivikatan


No comments: