தண்ணியில்லா காட்டுக்கு மிளகாய்... கூடவே ஜோடி போட சீரகம்...
கவலையை விரட்டும் கலப்புப் பயிர்கள்!
உணவின் உன்னதம் பசியில் வாடுபவர்களுக்குத்தான் தெரியும். அதேபோல, தண்ணீரின் அருமை, வறண்டப் பகுதி விவசாயிகளுக்குத்தான் தெரியும். அந்த வகையில், தமிழகத்தில் தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைத்தான் சொல்ல முடியும். மழை நீரை நம்பி... அல்லது சிலர் அமைத்திருக்கும் குழாய்க் கிணறுகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டும். இதுதான் இம்மாவட்டத்தில் காலகாலமாக நிதர்சனம்.
இத்தகைய கஷ்டமான ஜீவனத்திலும்.... விடாப்பிடியாக விவசாயம் செய்து வருகிறார்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பல விவசாயிகள். மானாவாரி விவசாயியாக இருந்தாலும் சரி... தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயியாக இருந்தாலும் சரி... அவர்கள் ஒரே பயிரை மட்டும் பயிரிடுவதில்லை. குறைந்தபட்சம் மூன்று பயிர்களையாவது சேர்த்து சாகுபடி செய்கிறார்கள். இப்படிப்பட்ட வறட்சியிலும், இவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதற்கு ஒரே காரணம், இவர்களது இந்த கலப்புப் பயிர் சாகுபடி முறைதான். அந்த வகையில், குண்டு மிளகாய், சீரகம், பருத்தி, அகத்தி, கத்திரி, தக்காளி என கலப்பு முறையில் பயிரிட்டுள்ளனர், போகலூர் வட்டம், காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குருவாண்டி-காளியம்மாள் தம்பதி.
அவர்களின் வயலுக்கு நாம் சென்றிருந்தபோது, வயலில் மிளகாய் எடுத்துக் கொண்டிருந்தார், காளியம்மாள். குருவாண்டி வேலைக்குச் சென்றிருந்தார். வெள்ளந்தி சிரிப்போடு வரவேற்ற காளியம்மாள், தங்களது விவசாய முறைகளை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
''எங்களுக்கு இருக்குறது, இந்த ஒரு ஏக்கர் பூமிதான். இதை வெச்சுதான் வண்டியை ஓட்டிகிட்டிருக்கோம். 'மனுஷங்க பகைச்சாலும், மானம் (வானம்) பகைக்காது’னு சொல்லுவாக. ஆனா, இந்த வருஷம் அந்த மானமும் பகைச்சிடுச்சு. ஒரச்சி ஒத்த மழை பெய்யாம செத்துக் கிடக்கு சம்சாரி பொழப்பு. இருந்தாலும், 'இப்ப பேஞ்சிடும், அப்ப பேஞ்சிடும்’னு நம்பிக்கையிலதான் மண்ணை நோண்டிக்கிட்டிருக்கோம். இந்தப் பஞ்சத்துலயும் எங்களைக் காப்பாத்தி வெச்சிருக்குறது, மொளகாதாங்க (மிளகாய்). மழை பெய்ஞ்சாலும் பெய்யாட்டியும், காய்ச்சிக் காப்பாத்திடும் மொளகா. எங்களுக்கு இந்த நிலத்தை விட்டா, வேற போக்கிடம் கிடையாது. அதனால, ஒரே பயிரை விதைக்காம பல பயிருங்களைச் சேத்து விதைச்சா... வருஷம் முழுக்க நிலத்துல இருக்கலாம்னுட்டுதான் பல பயிருகளை விதைக்கோம்'' என முன்னுரை கொடுத்த காளியம்மாள், தொடர்ந்தார்.
''புரட்டாசி மாசத்துல ஆறு படி மொளகா விதையோட, 100 கிராம் சீரகத்தை வாங்கி விதைச்சு விட்டோம். சீரக விதைக்காக எங்கயும் அலைய வேண்டியதேயில்ல. மளிகைக் கடைகள்ல விக்குற சீரகத்தை வாங்கி விதைச்சாலே முளைச்சு வந்திடும். நான் மளிகைக் கடையில வாங்கித்தான் விதைச்சேன். நல்லபடியா விளைஞ்சு நிக்குது. மிளகாயையும், சீரகத்தையும் விதைச்ச பிறகு, வீட்டுத்தேவைக்காக அங்கங்க பரவலா கத்திரி, தக்காளியை நட்டோம். வரப்புகள்ல மாடுகளுக்கு தீவனத்துக்காக அகத்தியை நட்டோம்.
அனைத்துப் பயிருக்கும் ஒரே ஊட்டம்தான் !
அங்கங்க மிச்சம் இருந்த இடங்கள்ல பருத்தி விதையை ஊண்டி வெச்சோம். ஆரம்பத்துல தண்ணிய விலைக்கு வாங்கித்தான் பாய்ச்சினோம். இப்ப அங்கயும் தண்ணி இல்ல. மொளகா விதைச்ச பெறகு ஊக்கத்துக்காக ரெண்டு தடவை யூரியா, பொட்டாஷ் வெப்போம். வேறெந்த மருந்தையும் அடிக்க மாட்டோம். மொளகாவுக்கு போடுற ஊக்கத்துலயே மத்தப் பயிருங்களும் வளந்துடும். விதைச்சதிலிருந்து ஆறு மாசத்துல மொளகா மகசூலுக்கு வந்துடும். கடைசி நேரத்துல தண்ணியில்லாததால இந்த வருஷம் மொளகா வெளச்சல் சொகப்படல. மொத்தமே 8 மூட்டைதான் (20 கிலோ மூட்டை) காய்ச்சது. நல்லா காய்ச்சிருந்தா பதினைஞ்சு மூட்டைக்கு மேல காய்ச்சிருக்கணும். ஒரு மூட்டை மிளகாய் 500 ரூபாய்க்கு விக்குது. எங்க நிலத்துல வேலைக்கு ஆளுங்கள வெக்காம, நாங்களே வேலை செஞ்சுகிட்டதால பெருசா செலவில்ல. ஓரளவுக்கு மொளகா முடிஞ்சிடுச்சு.
100 கிராம் விதை... 50 கிலோ மகசூல் !
மொளகாய்க்கு பின்னாலயே சீரகமும் அறுப்புக்கு வந்துடும். இந்த வருஷம் இவ்வளவு வறட்சியிலயும் சீரகச் செடிங்க என் உசரத்துக்கு ஜம்முனு வளந்துடுச்சு. சீரகத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த பண்டுதமும் தேவைப்படாத பயிரு. விதைச்ச அஞ்சாவது மாசம் மஞ்ச கலர்ல பூவெடுக்கும். ஆறாவது மாசத்துல மஞ்ச பூ பச்சை கலர்ல மாறி நிக்கும். அதுதான் அறுப்புக்கு ஏத்த நேரம்.
சரியான நேரத்துல அறுக்காம விட்டா, பச்சை கலர் மாறி, காஞ்சி போயிடும். பச்சை கலர்ல காய்ச்சி நிக்குற சீரகத்தை கொத்துக்கொத்தா அறுத்து, மொத்தமா காய வெக்கணும். காய்ஞ்ச பிறகு, குச்சியால தட்டியோ, மிதிச்சோ உதிர்த்து, புடைச்சோம்னா... சீரகம் தனியா வந்துடும். 100 கிராம் சீரகம் விதைச்சா, அம்பது கிலோவுல இருந்து நூறு கிலோ சீரகம் வரைக்கும் கிடைக்கும். இந்த முறை 50 கிலோ கிடைச்சுருக்கு. எங்க சொந்த பந்தங்க, தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்திட்டு... மிச்சத்தை விப்போம். ஒரு கிலோ சீரகம்
150 ரூபாயில இருந்து 200 ரூபாய் வரைக்கும் விக்குது'' என்ற காளியம்மாள் நிறைவாக,
''பருத்தி இன்னமும் மகசூலுக்கு வரல. இந்த ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு எப்படியும் 25 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம வருமானம் வந்துடும். வீட்டுக்குத் தேவையான காய்கறிக கிடைச்சிடும். அதுபோக அவுக (கணவர்) அப்பப்ப வேற வேலைக்கும் போவாக. தண்ணியில்லங்கிற ஒரு காரணத்துக்காக நிலத்தைச் சும்மா போட்டு வெக்க முடியுமா? நிலத்துல போடுற உழைப்பு, ஒண்ணுக்கு ஆயிரம் மடங்கா திரும்பி வரும். சீரகத்தைப் போல'' என்றபடியே மகிழ்ச்சியோடு விடைகொடுத்தார்.
சாதனை படைத்த பழப் பண்ணை !
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறையில், 1,036 ஏக்கர் பரப்பளவில், தோட்டக்கலைத் துறையின் பழப் பண்ணை உள்ளது. இங்கு, மா, கொய்யா, கோகோ, பலா, பாக்கு, மிளகு, கிராம்பு, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகள், ரோஜா, குண்டு மல்லிகை போன்ற மலர் வகைகள் என வீரிய மற்றும் ஒட்டு ரகச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செடிகள் சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்தப்பழப் பண்ணையில் மட்டும் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட பத்து லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது.
தற்போது, நாற்று உற்பத்தியில், ஆசிய அளவில் கருமந்துறை பழப் பண்ணை இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இப்பழப் பண்ணையில், மத்திய பாக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், மங்களா, ஸ்ரீமங்களா, சுபமங்களா, முகித்நகர் போன்ற வீரிய ரக பாக்கு நாற்றுகளும் வளர்க்கப்படுகின்றன.
- ஜி.பிரபு படம் : வீ. சிவக்குமார்
No comments:
Post a Comment