Friday

1 ஏக்கர்...6 மாதம்...ரூ.2,25,000

1 ஏக்கர்...6 மாதம்...ரூ.2,25,000
வறட்சியிலும் வாரிக் கொடுக்கும் வரிப்புடலை !
'ஆறு, குளம், ஏரி... என எந்த ஒரு பாசனவசதியும் கிடையாது. எப்போதாவது கிடைக்கும் பருவமழை மட்டுமே நிலத்தடி நீருக்கான ஆதாரம்' இப்படிப்பட்ட சூழ்நிலையில், 5 போர்வெல்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை ஒன்றிணைத்து, ஒருநாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே பாசனம் செய்து, புடலை சாகுபடியில் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள், திருப்பூர் மாவட்டம், கேத்தனூர் பகுதியில் இருக்கும் செட்டியார்தோட்டம், எம்.வி. செல்வராஜ்-தவமணி தம்பதி.
'விர்விர்' ஓசையுடன் அலுமினியக் காற்றாலைகள் காற்றைக் கடைந்து கொண்டிருக்கும் பொட்டல் காடுகளுக்கு மத்தியில், பாலைவனச் சோலையாக மிளிர்கிறது, இவர்களுடைய தோட்டம். படுதா விரித்தது போன்று விரிந்து கிடக்கிறது, ஆளுயரப் பசும்பந்தல். அதனுள் வெளிர்பச்சை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் குறும்புடலங்காய்களைப் பறித்து, பிளாஸ்டிக் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தவர்களைச் சந்தித்தோம்.
பாதுகாத்த பந்தல் சாகுபடி!
புடலைப் பெட்டிகளை வரிசையாக வைத்து, ஈரக்கோணியைப் போர்த்தி விட்டுப்பேசிய செல்வராஜ், ''எனக்கு இங்க பத்து ஏக்கர் இருக்கு. தோட்டத்துலயே வீடும் இருக்கு. 20 வருஷத்துக்கு முந்தியெல்லாம் போகம் தவறாம மழை கிடைக்கும். அதனால, கிணத்துலயும் நெறைய தண்ணி இருந்துச்சு. மிளகாய், வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம்னு மனம்குளிர வெள்ளாமை செஞ்சோம். 10 வருஷமா நிலைமை தலைகீழாயிடுச்சு. மழை பொய்த்துப் போனதால கிணறுகளும் வத்திப்போச்சு. ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு போர்வெல் போட்டும் பலன் இல்லை. நிறைய பேரு காற்றாலை கம்பெனிகளுக்கு நிலத்தை வித்துட்டு வெளியூர் போயிட்டாங்க. நாங்களும் இந்த முடிவுக்குத்தான் வந்திருப்போம். ஆனா, இந்த மண்ணு எங்களை தடுத்து நிறுத்தினதோட... தினம்தோறும் காசும் பார்க்க வெச்சுடுச்சு. காய்கறிப்பந்தல், சொட்டுநீர்ப் பாசனம், இயற்கை விவசாயம்... இந்த மூணும் இல்லேனா, நாங்க எப்பவோ ஊரை காலி பண்ணிட்டு போயிருப்போம்'' சிறிது இடைவெளிவிட்ட செல்வராஜ், தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார்.
''குறைஞ்ச தண்ணியை வெச்சு என்ன விவசாயம் செய்யலாம்னு யோசனையில இருந்தப்போதான், பக்கத்துத் தோட்டத்துக்காரர் கேத்தனூர் பழனிச்சாமி அய்யா, 'காய்கறிப் பந்தல் போடு... கவலைய விடு’னு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். 2004-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல பந்தல் போட்டோம். இந்தப் பத்து வருஷமா புடலை, பாகல்னு மாத்தி மாத்தி சாகுபடி செய்றோம். நிரந்தர வருமானம் கிடைக்கிறதால நிம்மதியா இருக்கோம். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான். இப்ப 5 வருஷமா இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றோம். அந்தப் பாதையில எங்களைத் திருப்பிவிட்டதும் அவர்தான்.
மொத்தம் 5 போர்வெல் இருக்கு. இதுல கிடைக்கிற தண்ணியை மொத்தமா கிணத்துலவிட்டு, பாசனம் செய்றோம். இது, கரிசல் நிலம். செம்மண் கொட்டி வளப்படுத்தி, ஒரு ஏக்கர்ல மட்டும், 'வரிக்குறும்புடலை’ங்கிற நாட்டுரகத்தை சாகுபடி செய்றோம். இதுக்கு பட்டம் கிடையாது. எல்லா போகத்துலயும் வளரும். நாங்க கல்பந்தல் போடுறப்போ
60 ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. இப்போ கல் பந்தலுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும்'' என்ற செல்வராஜ், சாகுபடி செய்யும் விதத்தைச் சொன்னார். அது பாடமாக இங்கே விரிகிறது.
ஏக்கருக்கு 700 கிராம் விதை!
''சாகுபடி நிலத்தில் கட்டிகள் இல்லாமல் மண் பொலபொலப்பாகும் அளவுக்கு உழவு செய்து, இரண்டு வாரம் ஆறப்போட்டு... ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி, ஓர் உழவு செய்யவேண்டும். பிறகு, கல்தூண் பந்தல் அமைத்து, வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளிவிட்டு... ஒன்றரையடி அகலத்தில்  நீள்வரப்புகளை அமைத்து, அவற்றின் மத்தியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வரப்புகளின் மத்தியில் ஒரு கன அடி அளவுக்குக் குழியெடுத்து...
2 டன் தொழுவுரம், தலா ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அனைத்துக் குழிகளிலும் பகிர்ந்து இட்டு, பாசனம் செய்ய வேண்டும். குழி ஈரமாக இருக்கும்போதே, பஞ்சகவ்யாவில் நனைத்து, விதைநேர்த்தி செய்யப்பட்ட வரிப்புடலை விதைகளை குழிக்கு இரண்டு வீதம் நடவேண்டும். ஏக்கருக்கு 700 கிராம் விதை தேவைப்படும்.
நடவு செய்த 10-ம் நாளில் விதைகள் முளைக்கத் தொடங்கும். தொடர்ந்து தினமும் 30 நிமிடம் தண்ணீர் கொடுத்தால் போதும். 20-ம் நாளில் களை எடுக்கவேண்டும். தலா
20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, பருத்திவிதைப் பிண்ணாக்கு ஆகியவற்றை நான்கு நாட்கள் நீரில் ஊறவைத்து... களையெடுத்த பிறகு, குழிக்கு 300 மில்லி வீதம் நேரடியாக ஊற்ற வேண்டும். இக்கரைசலை அறுவடை வரை ஒரு வார இடைவெளியில் தொடர்ந்து கொடுக்கவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு செடிக்கு முக்கால் லிட்டர் பஞ்சகவ்யா வீதம், வேர்ப்பகுதியில் ஊற்றி வரவேண்டும். வளரும் கொடிகள் ஊக்கமுடன் படர்ந்து செல்ல இது அவசியம்.
பாதிப்பை ஏற்படுத்தும் பக்கக்கிளை!
30-ம் நாளில் கொடிகள் ஓடத்தொடங்கிவிடும். இந்த நேரத்தில் ஒவ்வொரு குழி அருகிலும் கெட்டியான மரக்குச்சியை ஊன்ற வேண்டும். குச்சிகளில், கைத்தறிப் பாவுநூல் கயிறு அல்லது கோணிச்சரடைக் கட்டி, அடுத்த முனையை பந்தல் கம்பியில் இறுக்கமாகக் கட்டி, கொடிகளைக் கயிற்றில் கோத்துவிட வேண்டும். கொடிகளில் உள்ள பக்கக்கிளைகள் அனைத்தையும் அவ்வப்போது விரல் நகங்களைக்கொண்டு கிள்ளிவிட வேண்டும். இது, கொடிகள் பக்கவாட்டில் செல்வதைத் தடுக்கும். சத்துக்கள் தடங்கல் இல்லாமல், பூக்களுக்குப் போய்ச்சேரவும் உதவும். பூ எடுக்கும் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி அரப்புமோர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். இது, அதிகமாக பூ வைக்க உதவுவதோடு, பூஞ்சண நோயையும் கட்டுப்படுத்தும்.
குளவிகளுக்கு இனக்கவர்ச்சிப் பொறி!
குறும்புடலைக் காய்களின் மீது முள்தன்மை கொண்ட ஒருவகை சுனை படர்ந்திருக்கும். இது இயற்கை அந்தப் பயிருக்குக் கொடுத்த பாதுகாப்பு. காய்களைச் சுற்றிலும் அந்தச் சுனையானது அரண்போல இருப்பதால், காய்களைச் சேதப்படுத்தும் பெரும்பாலான பூச்சிகளை இதுவே தடுத்துவிடும். இதையும் தாண்டி ஒருவித செங்குளவிகள் பந்தலில் தொங்கும் காய்களைப் பதம்பார்க்க வாய்ப்புகள் உண்டு. ஒரு ஏக்கருக்கு நான்கு இனக்கவர்ச்சிப் பொறி வாளிகளைப் பயன்படுத்தி, இக்குளவிகளைக் கட்டுப்படுத்தலாம்.
60-ம் நாளில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து, 180 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். அறுவடைத் தொடங்கியவுடன் 2 டன் தொழுவுரம், தலா ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அனைத்து குழிகளிலும் பகிர்ந்து இட்டு, பாசனம் செய்யவேண்டும். மொத்தமாக ஒரு ஏக்கரில் 15 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.'
சாகுபடிப் பாடம் முடித்த செல்வராஜைத் தொடர்ந்த தவமணி, ''பறிச்ச காய்கள்ல ஒரு பகுதியை தினமும் திருப்பூர் உழவர் சந்தையில கொண்டு போய் விற்பனை செய்றோம். மீதிக்காய்களை வெளியூர் வியாபாரிங்க வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஒரு கிலோ புடலை 12 ரூபாய்ல இருந்து, 20 ரூபாய் வரைக்கும் விலை போகுது. சராசரியா கிலோவுக்கு 15 ரூபாய் விலை கிடைச்சுடும். 15 டன் காய்கள் மூலமா, 2 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். செலவு போக 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.
'தண்ணி குறைவா இருக்கே’னு நம்பிக்கை இழந்து விவசாயத்தைவிட வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் மாத்தி யோசிச்சா... எல்லாமே சாத்தியம்தான். அதுக்கு நாங்களே உதாரணம். அரை மணி நேரம் மட்டுமே கிடைக்கிற தண்ணியை வெச்சே இவ்ளோ வருமானம் எடுக்குறோம்'' என்று மனைவி சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டிய செல்வராஜ்,
விலையில்லா விதை..!
'இது, நாட்டுரகம்கிறதால, அடுத்த போகத்துக்கான விதைகளையும், நாங்களே உற்பத்தி செஞ்சுக்குறோம். பந்தல்ல நல்லா விளைஞ்ச 75 காய்களை மட்டும் பழுக்கவிட்டு, அதைப் பறிச்சு தண்ணி நிரப்பின வாளியில முக்கி பிசைஞ்சா... விதைகள் வந்துடும். இளம்வெயில்ல காய வெச்சு எடுத்து வெச்சுக்கலாம். இப்படி எடுத்த விதைகளை ஒரு வருஷம் வரை வெச்சிருந்து விதைக்கலாம்'' என்று விதைபெறும் நுட்பம் சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
எம்.எஸ். செல்வராஜ், 
செல்போன்: 99655-99969.
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
Source: pasumaivikatan

No comments: