வீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்!
2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி நாடாக மாறும்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம். குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத் தோட்டத்துக்குப் பாசனம் செய்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெல்ஜோசப். 70 வயதான ஜெல்ஜோசப்பை தூத்துக்குடி கிருபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நீர் மேலாண்மைச் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.
மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே நம்மிடம் பேசத்தொடங்கினார். ''என்னோட பூர்விகம் தூத்துக்குடிதான். மதுரையில் லேப் டெக்னீசியன் படிப்பு முடிச்சுட்டு, மைசூர்ல 5 வருஷம் வேலை பாத்தேன். அப்பறம் தூத்துக்குடிக்கே வந்து தனியா லேப் ஆரம்பிச்சுட்டேன். எனக்கு அடிப்படையில் இயற்கையின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் அதிகம். அதனாலதான் வீட்டுத் தோட்டம் போட்டு பராமரிச்சுட்டு இருக்குறேன். தோட்டத்துக்கு எங்க வீட்டுக் கழிவுகளையே உரமாக்கிடுவேன். அதே மாதிரி வீட்டுல எந்தக் கழிவு நீரையும் வெளிய விடுறதில்லை. அதையும் தோட்டத்துக்கே பாய்ச்சிடுவேன்' என்று முன்னுரை கொடுத்த ஜெல்ஜோசப் தொடர்ந்தார்.
மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே நம்மிடம் பேசத்தொடங்கினார். ''என்னோட பூர்விகம் தூத்துக்குடிதான். மதுரையில் லேப் டெக்னீசியன் படிப்பு முடிச்சுட்டு, மைசூர்ல 5 வருஷம் வேலை பாத்தேன். அப்பறம் தூத்துக்குடிக்கே வந்து தனியா லேப் ஆரம்பிச்சுட்டேன். எனக்கு அடிப்படையில் இயற்கையின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் அதிகம். அதனாலதான் வீட்டுத் தோட்டம் போட்டு பராமரிச்சுட்டு இருக்குறேன். தோட்டத்துக்கு எங்க வீட்டுக் கழிவுகளையே உரமாக்கிடுவேன். அதே மாதிரி வீட்டுல எந்தக் கழிவு நீரையும் வெளிய விடுறதில்லை. அதையும் தோட்டத்துக்கே பாய்ச்சிடுவேன்' என்று முன்னுரை கொடுத்த ஜெல்ஜோசப் தொடர்ந்தார்.
செப்டிக் டேங்க் கிளீன் செய்யத் தேவையில்லை!
'அதேமாதிரி, உதிர்ற இலை, பூக்கள் எல்லாத்தையும் ஒரு மூலையில் போட்டு சாணத்தைக் கரைச்சு தெளிச்சுவிட்டா, அதுல மண்புழுக்கள் உருவாகிடும். அதை வெச்சு மண்புழு உரம் தயாரிச்சு பயன்படுத்திக்குவேன். அதேமாதிரி தென்னைமரத்தின் அடிப்பகுதியைச் சுத்தி தேங்காய் நாரை வரிசையாக அடுக்கிடுவேன். அதனால், தென்னைக்கு எப்பவுமே ஈரப்பதம் கிடைச்சுட்டே இருக்கும். 'செப்டிக் டேங்க்’ கழிவு நீரை செடிகளுக்குப் பாய்ச்சினா செடிகள் கறுத்துடும், கிருமிகள் உருவாகும்னு சொல்றாங்க. ஆனா, எங்க வீட்டு செப்டிக் டாங்க் கழிவு நீர்ல 'பேசிலஸ் சப்டாலிஸ்’ங்கிற பாக்டீரியாவைக் கலந்து, அந்தத் தண்ணீரை நேரடியா செடிகளுக்கு விட்டுட்டு இருக்கேன். இந்த பாக்டீரியா, மலத்தை சாப்பிட்டுடும். வெறும் தண்ணிதான் வெளியவரும். இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தும்போது, கழிவறையை சுத்தம் செய்ய பினாயிலை பயன்படுத்துனா பாக்டீரியாக்கள் செத்துடும். அதே நேரத்துல ஆரஞ்சு, எலுமிசைச் பழத்தோல்களை காய வெச்சு அரைச்சு அது மூலமா கழிவறையை சுத்தப்படுத்தலாம்' என்ற ஜெல்ஜொசப் கழிவு நீரை சுத்திகரிக்கும் முறைகளைச் சொன்னார்.
சுலபமாக சுத்திகரிக்கலாம்!
'பாத்ரூமில் இருந்து வருகிற சோப் தண்ணீர், துவைத்த சோப் தண்ணீர் ஆகியவற்றை நேரடியாகச் செடிகளுக்குப் பாய்ச்சக் கூடாது. அதை வடிகட்டி சுத்திகரித்துத்தான் பாய்ச்ச வேண்டும்.
இரண்டு கிணறு உறைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து, தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலிருந்து தண்ணீர் கசிந்து செல்வது போல, வாய்க்கால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் அடிப்பரப்பில் இரண்டு அங்குல அளவுள்ள ஜல்லிக் கற்களைப் பரப்பி, அதன் மேல் முக்கால் அங்குல அளவுள்ள ஜல்லிக் கற்களைப் போட்டு... அதன் மீது கொசுவலையை விரித்து, வலைக்கு மேல் சலித்த பருமணலை நிரப்ப வேண்டும். சோப் கலந்த கழிவு நீரை குழாய் மூலம் இத்தொட்டிக்குள் விழுமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். தொட்டியின் நடுப்பகுதியில் சேம்புச் செடியை நட்டு விட வேண்டும். சேம்புச் செடி, நுரை கலந்த சோப்புத் தண்ணீரை உறிஞ்சி நல்ல தண்ணீரை மட்டுமே அடியில் விடும். தொட்டியின் மேல் மட்டத்திலேயே தேவையற்றக் கழிவுகள் படர்ந்து விடும். தவிர, தொட்டி நடுவில் வலை அமைத்திருப்ப தால் நீர் வடிகட்டப்பட்டு விடும்.
தாத்தா பாட்டிகள்..!
நிறைவாகப் பேசிய ஜெல் ஜோசப், ''முருங்கை, சோற்றுக்கற்றாழை, மணப்புல், புளிச்சகீரை, பப்பாளி, வேம்பு, துளசி, கருந்துளசி, இன்சுலின், ஆடாதொடை, அம்மான் பச்சரிசி, சிறியாநங்கை, பெரியாநங்கை, தூதுவளை, பூண்டு, கீழாநெல்லி, வேலிக்காத்தான், ஃபாஷன் ஃப்ரூட், வெட்டுக்காயத் தழைனு எல்லாமே வீட்டுல இருக்கு. இது எல்லாமே எல்லா வீட்டுலயும் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகைகள். இந்த மூலிகைகள்தான் நம் தாத்தா, பாட்டிகள். அதேமாதிரி மூலிகைகளின் பெயர்களையும், மருத்துவ குணங்களையும் சின்னப் பிள்ளைகளுக்கு கண்டிப்பா சொல்லிக் கொடுக்கணும். 'வீட்டுச் சத்தம் வெளியே போகக் கூடாது’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அதே வீட்டுக் கழிவுநீரையும் வெளிய விடாம உபயோகிச்சா வீட்டுத் தோட்டத்தைச் செழிக்க வைக்கலாம்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
ஜெல்சோசப்,
செல்போன்: 94864-54263
ஜெல்சோசப்,
செல்போன்: 94864-54263
தினம் தினம் எரிவாயு!
ஜெல்ஜோசப், சமையலறைக் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு தயாரித்து, அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்துகிறார். தினமும் ஒரு மணி நேரம் அளவுக்கு தற்போது இவருக்கு எரிவாயு கிடைத்து வருகிறது. இதன் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்து, அவர் தந்த தகவல்கள்-
இந்த எரிவாயுக் கலன் அமைப்பதில், சிற்சில முறைகள் இருக்கின்றன. 'தரைக்கு மேல் மிதக்கும் கலன் அமைத்தல்' என்கிற முறை, எளிமையானதாகவும் குறைந்த செலவுடையதாகவும் இருக்கும். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட சாண எரிவாயுக் கலன் அமைத்துக் கொள்ள வேண்டும் (இது மிதக்கும் கலன், கீழிருக்கும் கலன் என இரண்டு பாகங்கள் கொண்டது. ரெடிமேடாகவும் கிடைக்கும்). இதில் உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயுச் சேகரிப்பான், சாணக்கழிவுக் குழம்பு வெளியேறும் பகுதி, வாயு உற்பத்தியை வெளியே கொண்டு செல்லும் குழாய் இணைப்பு என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
முதல்முறையாக உற்பத்தி செய்யத் தொடங்கும்போது 400 கிலோ சாணம் மற்றும் 400 லிட்டர் தண்ணீர் தேவை. இரண்டையும் 1;1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து, நன்கு கலக்கி, 800 லிட்டராக்கிவிட வேண்டும். கலவையை நன்கு கிளறிவிடும்போது, குப்பைகள் மேலே மிதக்கும். அவை அனைத்தையும் அகற்றிவிட வேண்டும். இந்த அளவு கரைசல் எப்போதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர் கரைசல்’ என்று பெயர். இந்தக் கரைசலை, உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம் ஊற்றி, மூடி விடவேண்டும். இந்தக் கரைசல் செரிப்பானை அடையும். அங்கே, அனரோபிக் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், ஒரு வார காலத்தில், மிதக்கும் கலன் படிப்படியாக உயர ஆரம்பிக்கும். 2 வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். எரிவாயு, வெளிச்செல்லும் குழாய் மூலம், அடுப்பை வந்தடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பைப் பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால், ஆரம்பத்தில் 4-5 நாட்களுக்கு சாண எரிவாயுவைப் பயன்படுத்தாமல், வெளியில் விட்டு விடவேண்டும். காரணம், சாணத்தின் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். 6-வது நாளில் இருந்து எந்தவித துர்நாற்றமும் இருக்காது.
ஆரம்பத்தில் ஒரு வாரம் வரை, புதிதாக கலனுக்குள் எந்த இடுபொருளையும் போடாமல் எரித்துப் பார்க்கலாம். பிறகு, தினமும் நம் வீட்டுச் சமையல் கழிவுகளை (காய்கறிகள், அழுகியப் பழங்கள், வெங்காயத் தோல்கள் என அனைத்தும்) போடலாம். மேலும் எவ்வளவு சாணம் கிடைக்கிறதோ, அதில் சமஅளவு தண்ணீரையும் சேர்ந்து அன்றாடம் கலனில் செலுத்தலாம். கலனில் எப்பொழுதும் கரைசல் முழுவதுமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் (உதாரணமாக, ஒரு வாளி சாணம், என்றால் ஒரு வாளி தண்ணீர்), அதிகமான கரைசலும் கூடாது. வாயு உற்பத்திக்குப் பிறகு, சாணக்கழிவு குழம்பானது வெளியேறும் குழாய் மூலமாக வெளியேறிவிடும். இதைச் சேமித்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரிப்பு மற்றும் அசோலா வளர்ப்புக்கும் உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.
Source : pasumaivikatan
No comments:
Post a Comment