Thursday

70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...

70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...
முத்தான வருமானம் தரும், சத்தான சர்க்கரைவள்ளிக் கிழங்கு..!
தண்ணீர் தட்டுப்பாடு, வேலையாட்கள் தட்டுப்பாடு... எனப் பல பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற பயிர், சர்க்கரைவள்ளிக் கிழங்குதான். அந்த சூட்சமத்தை அறிந்த பலர், வெயில் கொளுத்தும் கோடையிலும் வளமான வருமானத்தை ஈட்டித்தரும் சர்க்கரைவள்ளியை விடாமல் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், சம்மந்தனூர், குப்புசாமி!
நிலத்தில், கிழங்கு அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த குப்புசாமியைச் சந்தித்தபோது, ''எங்க அப்பாவுக்கு நாலு பொண்ணுக, நான் ஒருத்தன்தான் பையன். குடும்ப சூழ்நிலை காரணமா எட்டாவதுக்கு மேல படிக்க வெக்கல. அப்ப இருந்தே அப்பாவுக்கு ஒத்தாசையா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்பறம் தனியா விவசாயம் பாத்தப்போ...
நெல், மணிலா, கேழ்வரகுனு சாகுபடி செஞ்சேன். இதுகள்ல லாபம் அதிகமா இல்லாததால, கோலியஸ், தர்பூசணிப் பயிர்களுக்கு மாறினேன். ஓரளவுக்கு வருமானம் கிடைச்சும்... மழை கிடைக்காம போனதால, தொடர்ச்சியா பயிர் வெக்க முடியல. அதனால, வருமானத்துக்காக 'டைல்ஸ்’ ஒட்டுற வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அந்த வேலையோட சேர்த்து... இப்போ, என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்துல விவசாயத்தையும் பாத்துக்கிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.
பெண்களே சாகுபடி செய்யலாம்!
''அப்பா இருக்கும்போது, அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வார். அப்பறம் அதை விட்டுட்டோம். எங்க பகுதியில, 'இதுக்கு நல்ல விலை கிடைக்குது’னு நிறைய பேர் சாகுபடி செஞ்சாங்க. அதனால, நானும் ஏழு வருஷமா தொடர்ந்து செஞ்சுட்டிருக்கேன். சர்க்கரைவள்ளிக் கிழங்குக்கு அதிக வேலையாள் தேவையில்ல. தண்ணியும் குறைவாத்தான் தேவைப்படும். கொடியை நட்டுவிட்டுட்டா, பொம்பளையாளுங்களே பாத்துக்க முடியும். விற்பனைக்கும் பிரச்னை இல்லாம இருக்குது. திருவண்ணாமலையில மார்க்கெட் இருக்குது. சென்னைக்கும் அனுப்பலாம். இந்த வருஷம் 70 சென்ட் நிலத்துல சாகுபடி செஞ்சேன். அறுவடை முடிஞ்சிருக்கு'' என்ற குப்புசாமி, 70 சென்ட் நிலத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் முறையைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே விரிகிறது...
வறட்சியைத் தாங்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு!
''நாட்டு ரக சர்க்கரைவள்ளிக் கிழங்கின் ஆயுட்காலம் 3 மாதங்கள். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் நடவுக்கேற்ற பருவம். தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் இதற்கு ஏற்றவை. இது, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது. 70 சென்ட் சாகுபடி நிலத்தில் தண்ணீர் கட்டி, கொக்கிக் கலப்பையில் உழவு செய்து, 2 டிப்பர் எருவை கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு, மண் 'பொலபொல’ப்பாகும் வரை ரோட்டோவேட்டர் மூலம் இரண்டு சால் உழவு செய்து... மாட்டு ஏர் பூட்டி, ஓர் அடி இடைவெளியில் ஒன்றேகால் அடி அகலத்துக்கு பார் பிடிக்க வேண்டும். தண்ணீர் கட்டி பார்களின் இருபுறமும் அரையடி இடைவெளியில் இளம்சர்க்கரைவள்ளிக் கொடிகளை நடவு செய்யவேண்டும். நடவு செய்யும்போது கொடிகளின் நீளம் முக்கால் அடி இருக்க வேண்டும். 5 சென்ட் நிலத்தில் உள்ள கொடிகளை வெட்டினால், 70 சென்ட் நிலத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாதம் வரை நாற்றாக வளர்த்த கொடிகளையும் பயன்படுத்தலாம்.
பூச்சி, நோய் தாக்காது!
நடவு செய்த 7-ம் நாளில் வேர்பிடித்து, வளரத் துவங்கும். 15-ம் நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரத்தைத் தூவி தண்ணீர் கட்ட வேண்டும். அதற்குப் பிறகு, கொடிகள் வளர்ந்து நிலத்தை மூடிக்கொள்வதால், களை எடுக்கத் தேவையிருக்காது. 30-ம் நாளில் வேர்களில் கிழங்கு பிடிக்க ஆரம்பிக்கும். 60-ம் நாளில் கிழங்குகள் விரல் அளவுக்குப் பெருத்துவிடும். இந்தச் சமயத்தில் பரிந்துரைக்கப்பட்ட உரத்தை இட்டு தண்ணீர் கட்ட வேண்டும். லேசான மழை அல்லது பனி இருந்தால், உரம் இடக்கூடாது. வெயில் நேரத்தில்தான் உரம் இடவேண்டும். தவிர, நாட்டு ரகத்துக்கு அதிக உரம் தேவைப்படாது. நிலத்தின் தன்மையைப் பொறுத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினாலே போதுமானது. பெரும்பாலும், இப்பயிரை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. அப்படியே தாக்கினாலும், கிழங்கில் சேதம் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்காது.
90-ம் நாளில் அறுவடை!
90-ம் நாளுக்கு மேல் கிழங்கைத் தோண்டிப் பார்த்து முற்றியதைத் தெரிந்துகொண்டு அறுவடை செய்யலாம். முதலில், மண்ணுக்கு வெளியில் இருக்கும் கொடிகளை அறுத்துவிட்டு, மாட்டு ஏர் மூலம் பாரில் ஆழமாக உழுதால், கிழங்குகள் வெளியில் வந்துவிடும். சரியாக வராவிடில், இடை உழவு செய்து கிழங்குகளை எடுக்கலாம். களைகொத்து, மண்வெட்டிகள் மூலம் அறுவடை செய்யக்கூடாது.'
70 சென்டில்... 45 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த குப்புசாமி, ''மொத்தம் 70 சென்ட்ல இருந்து 55 மூட்டை (80 கிலோ மூட்டை) கிழங்கு கிடைச்சுது. முதல்ல 50 சென்ட்ல அறுவடை செஞ்சதுல 45 மூட்டை கிழங்கு கிடைச்சுது. ஒரு மூட்டை 800 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 36 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. அடுத்து, மீதி 20 சென்ட்ல அறுவடை செஞ்ச 10 மூட்டை கிழங்கை, மூட்டை 960 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 9 ஆயிரத்து 600 ரூபாய் கிடைச்சுது. 70 சென்ட்ல மொத்தமா கிடைச்ச வருமானம், 45 ஆயிரத்து 600 ரூபாய். எல்லா செலவும் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.
தொடர்புக்கு, குப்புசாமி,
செல்போன்: 99431-63088



ஜீவன் தரும் ஜீவாமிர்தக் கிழங்கு!
பெரும்பாலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை ரசாயன விவசாயம் மூலம்தான் சாகுபடி செய்கிறார்கள். ஆனால், 'இயற்கை முறையிலும் சிறப்பான முறையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்ய முடியும்’ என்கிறார், இதில், அனுபவம் உள்ளவரான திருவண்ணாமலை மாவட்டம், து.கே.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர்.
''எனக்கு மூன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. அதுல இயற்கை முறையில பீர்க்கன், புடலை, வெண்டைனு காய்கறிகளை சாகுபடி செஞ்சு, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பிட்டிருக்கேன். ரொம்ப வருஷமா இயற்கை முறையிலயே சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செஞ்சுட்டு இருந்தேன். அதைவிட, காய்கறிகள்ல நல்ல லாபம் கிடைக்கிறதால, 3 வருஷமா, சர்க்கரைவள்ளிக் கிழங்கை நிறுத்திட்டு, காய்கறிகளுக்கு மாறிட்டேன். சர்க்கரைவள்ளிக் கிழங்குக்கு அதிக ஊட்டம் தேவையில்லை. மிதமான ஊட்டமும், கொஞ்சமான தண்ணீரும் போதுமானது'' என்ற சேகர், சாகுபடி முறையைச் சொன்னார்.
'50 சென்ட் நிலத்தில் இரண்டு டிப்பர் எருவை கொட்டிக் கலைத்து, பார் பிடித்து கொடிகளை நடவு செய்யவேண்டும். 20-ம் நாளில் கொடிகள் படர ஆரம்பிக்கும் சமயத்தில், 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை வரை ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். வேறு எந்த ஊட்டமும் தேவையில்லை. இந்த முறையைக் கையாண்டால்... 50 சென்ட் நிலத்தில், இரண்டரை டன் அளவுக்கு மகசூல் எடுக்கலாம். தவிர, கிழங்குகள் கூடுதல் சுவையுடன் இருக்கும்'' என்றார்.
தொடர்புக்கு, சேகர், செல்போன்: 97876-00991


காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
Source: pasumaivikatan

No comments: