Wednesday

இயற்கை விவசாய முறை


இயற்கை விவசாய முறை

இன்று இயற்கை விவசாயத்துக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தம் தரும் நிகழ்வாகும். அந்தந்த நிலத்தில் விளையும் பயிரின் கழிவுகளையும் அதன்மூலம் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் மற்றும் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து பயன்படுத்த வேண்டிய வேம் சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா முதலியவற்றை பயன்படுத்துவதும் இதில் மிக முக்கியம். திரவ உரங்களை அல்லது நீரில் கரையும் திறன் கொண்ட தழைமணி சாம்பல் சத்துக்களை பயோ என்பது உயிர் உரம் போன்ற தவறான பிரசாரம் தருவதால் இதனை பயன்படுத்துவது இயற்கை விவசாய முறை அல்ல. தழைமணி, சாம்பல் சத்துக்கள் ஒவ்வொரு இயற்கை விவசாய இடுபொருட்களிலும் உள்ள விகிதாச்சாரம் அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
தொழுஉரம் என்று தமது பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களான கால்நடைகள், பசு, வெள்ளாடு, எருமை, பறவைகள் (கோழி) , செம்மறி ஆடு, குதிரை, பன்றி இவற்றின் சாணம் மற்றும் சிறுநீர் பயன்படுத்துவது முக்கிய உத்தியாகும். இந்தக் கழிவுகளுடன் மண்புழுவை சேர்த்து வளர்த்தால் அற்புத தரம் வாய்ந்த மண்புழு உரம் கிடைக்கும்.
மண்புழு உரத்தையும் மண்புழு உடலில் இருந்து வெளியிடப்படும் மண்புழுக்குளியல் நீர் சத்தான டானிக் தான். இதனை எல்லாப்பயிருக்கும் தெளித்து நல்ல காசு பார்க்கலாம். மண் வகைகள் தன்மையை மாற்றிட குளத்து வண்டல் மாட்டுக் கொட்டத்தில் இருந்து சுரண்டி எடுத்த மண் பட்டி மண் ஆற்று வண்டல் பெரிதும் உதவும். தாவரக்கழிவுகள் குறிப்பாக கம்பு, தட்டை, நெல், வைக்கோல், ராகிதாள், காட்டுப்புல், கரும்பு ஆலை கழிவு, மரத்தூள், நகரக்கழிவு மற்றும் மார்க்கெட் கழிவுகள் முதலியவற்றை மட்கவைத்து கம்போஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம்.
சாம்பல் என்று நெல் உமி சாம்பல், பருத்தி மார் சாம்பல், கரும்பு சாம்பல் மற்றும் மர சாம்பல் கூட அதிகமாக மணிசத்து, சாம்பல் சத்து தரும் சாதனமாகும். எண்ணெய் மில்களில் இருந்து கிடைக்கும் கடலை பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு மற்றும் இலுப்பைப் பிண்ணாக்கும் புரதச்சத்து நிறைய உள்ளவை.
மேலும் இயற்கை விவசாயத்தில் தழைகள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படும். பசுந்தாள் உரமாக சீமை, அகத்தி, சணப்பை துக்கை பூண்டு கொழுஞ்சி மற்றும் அவுரி உதவும். பசுந்தழைகள் தர ஏற்றவை தான். ஆவாரை, ஆடாதோடா, எருக்கு கிளைரி சிடியா, மலைப்பூவரசு, பூவரசு புங்கம் மற்றும் காட்டு மரங்களின் தழைகள் பழமரங்களைக் கவாத்து செய்வது மூலம் பெறும் மாவிலைகள் வேலியில் உள்ள மரங்கள் வாத நாராயணன் இலைகள் எல்லாம் பறித்து குழியில் இட்டு மட்க வைத்து பயன்படுத்தலாம். இப்படி எத்தனையோ இடுபொருட்கள் மற்றும் தயாரித்து பயன்படுத்த உகந்த பஞ்சகவ்யா, பூச்சி விரட்டி வேப்பம் இலைக் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு கரைசல் முதலிய இயற்கை இடுபொருட்கள் இருப்பதால் அவற்றை பயன்படுத்தியே உயர் லாபம், நீடித்த வருமானம், தரமான விளைபொருள் பெற முடியும். மேலும் விவரம் பெற 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்,
கோவை-641 041.
Source:http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21244&ncat=7


No comments: