ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ விதையில் நடவு நட்ட பெருமாளின் சாதனை
ஒரு ஏக்கரில் நெல் நடவு செய்ய கால் கிலோ விதை நெல் மட்டும் பயன்படுத்தும்
விவசாயி ஆர். பெருமாள் பற்றிய கட்டுரை கடந்த ஜூன் 25-ம் தேதி `நிலமும்
வளமும்’ பகுதியில் வெளியானது. `தி இந்து’ தமிழ் நாளேட்டை தொடர்ந்து மேலும்
சில பத்திரிகைகளில் கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தும்
பெருமாளின் சாகுபடி தொழில்நுட்பம் தொடர் பான செய்திகள் வெளிவந்தன.
இவற்றைப் படித்த தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்
1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவரது நெல் வயலுக்கு நேரடியாகவே வந்து,
இவரது சாகுபடி தொழில்நுட்பத்தின் சிறப்பை நேரில் பார்த்துச் சென்றதாக
பெருமாள் தெரிவிக்கிறார்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல்
வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம்
எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
கால் கிலோ விதை நெல் விதைக்க ஒரு சென்ட் நாற்றங்காலைப் பயன்படுத்துகிறார்.
அந்த ஒரு சென்ட் நிலத்தில் விதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக
விதைக்கிறார். நன்கு இடைவெளி விட்டு முளைக்கும் அந்த நாற் றுக்கள் நிறைய
தூர்களுடன் செழித்து வளர்கின்றன. 25 நாள்களுக்குப் பிறகு நடவு நடுகிறார்.
ஒரு நெல்லிலிருந்து முளைத்து வளர்ந்த தூர்களை மட்டும் ஒரு பயிராக நடவு
செய்கிறார். அவர் பின்பற்றும் மிக முக்கிய தொழில்நுட்பம் ஒரு பயிருக்கும்,
இன்னொரு பயிருக்கும் இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடுவதுதான். பொதுவாக
இப்போதும் பல ஊர்களில் நாற்றுகளை மிக நெருக்கமாக நடும் போக்குதான் உள்ளது.
ஆனால் பயிர்களுக்கு இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்யும்
பெருமாளின் தொழில்நுட்பம் பற்றி கூறினால், அதனை பலரும் நம்ப மறுக்கின்றனர்.
இவ்வாறு நடவு செய்தால் விளைச்சல் குறையும் என்றே பலரும் கருதுகின்றனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விளைச்சல் கிடைக்கும் என்பதை பெருமாள்
உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் 3 ஆயிரத்து 875 கிலோ
மகசூல் அவருக்கு கிடைத்துள்ளது. அவரது அறுவடையை சுற்றுவட்டார பகுதி
விவசாயிகள் பலர் நேரில் சென்று பார்த்துள்ளனர்.
இது பற்றி பெருமாள் கூறியதாவது: “எனது சொந்த அனுபவத்தில் இருந்தே இந்த
தொழில்நுட்பத்தை கண்டறிந் தேன். கடந்த 10 ஆண்டு காலமாக இந்த முயற்சியில்
ஈடுபட்டுள்ளேன். தொடக்கத்தில் மற்றவர்களைப் போலவே நானும் ஏக்கருக்கு 30
கிலோ விதை நெல்லைதான் பயன்படுத்தினேன். அதன் பிறகு 15 கிலோ, 10 கிலோ, 5
கிலோ, 2 கிலோ எனக் குறைத்து கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு கால் கிலோ விதை
நெல்லை மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.
மேலும், 50 செ.மீ. இடைவெளி விட்டு நடும்போது சூரிய ஒளி நன்றாக நிலத்தில்
படுவது, பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், புகையான் போன்ற பூச்சித்
தாக்குதல் அறவே இல்லாதது என பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் பயிர்கள்
நன்கு தாராளமாக வேர் விட்டு வளர்வதற்கு ஏற்ற நிலப் பகுதி கிடைக்கிறது.
இதனால் ஒவ்வொரு விதை நெல் பயிரிலிருந்தும் ஏராளமான தூர்கள் வெடிக்கின்றன.
இந்த ஆண்டு எனது வயலில் ஒவ்வொரு நெல்லில் இருந்து முளைத்த பயிரிலும்
குறைந்தது 70 முதல் அதிகபட்சம் 120 தூர்கள் வரை வெடித்திருந்தன. ஒவ்வொரு
நெற்பயிரிலும் 60 முதல் 110 கதிர்கள் கிடைத்தன. ஒவ்வொரு கதிரிலும் 100
முதல் 350 நெல் மணிகள் வரை இருந்தன. மொத்தத்தில் ஒரு ஏக்கரில் 3 ஆயிரத்து
875 கிலோ மகசூல் கிடைத்து” என்கிறார்.
இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ள பெருமாளின் வயலுக்கு நேரில் சென்று
பார்த்தவர்களில் ஒருவரான மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயியும், `காவேரி’
என்ற விவசாயிகளுக்கான விழிப்பு ணர்வு அமைப்பின் துணைத் தலை வருமான
வ.சேதுராமன் கூறியது:
“50 செ.மீ. இடைவெளியில் நடவு என்று சொன்னவுடன் முதலில் நானும் நம்ப
மறுத்தேன். நேரில் சென்று விளைச்சலைப் பார்த்த பிறகுதான் நம்ப முடிந்தது.
பொதுவாக இப்போது ஒற்றை நாற்று சாகுபடி பரவலாகி வருகிறது. ஆனால் ஒற்றை
நாற்று சாகுபடியில் 15 நாளில் நடவு செய்கிறார்கள். இளம் நாற்றாக இருப்பதால்
பயிர்கள் அழிவு என்பதும் அதிகமாக உள்ளது.
ஆனால் விவசாயி பெருமாள் 25 நாளிலிருந்து 40 நாள் வரை நடவு செய்கிறார். ஒரு
நாற்று என்பதற்கு பதிலாக ஒரு நெல்லிலிருந்து முளைத்து வந்த தூர்களை ஒரு
பயிராக நடவு செய்கிறார். 50 செ.மீ. இடைவெளி என்பதுதான் அதிக விளைச்சலுக்கு
முக்கிய காரணம். அவரது வயலில் நான் சில பயிர்களை எண்ணிப் பார்த்தேன்.
ஒவ்வொரு பயிரிலும் சுமார் 120 தூர்கள் வரை இருந்ததை அறிய முடிந்தது.
நான் அறிந்த வரை ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ மகசூல் என்பதுதான் பெரும்
விளைச்சலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஏக்கருக்க 3 ஆயிரத்து 875 கிலோ
மகசூல் என்பது பெருமாளின் மிகப் பெரும் சாதனை.
அவரது இந்த சாதனையையும், பல ஆண்டு கால தனது சொந்த அனுபவத்தில் அவர்
கண்டறிந்த இந்த தொழில்நுட்பத்தையும் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை
அங்கீகரிக்க வேண்டும். விவசாயி பெருமாளை உரிய வகையில் கவுரவப்படுத்த
வேண்டும். இதன் மூலம் அவரது தொழில்நுட்பத்தை பரவலாக்க முடியும். நமது
மாநிலத்தில் நெல் உற்பத்தியையும் அதிகப்படுத்த முடியும்” என்றார்
சேதுராமன்.
மேலும் விவரங்களுக்கு 94868 35547 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source: tamil.thehindu.com
No comments:
Post a Comment