Saturday

ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்

ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்

என்.சுவாமிநாதன்
வீட்டுத் தோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் 


வீட்டுத் தோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன்
மக்களின் ஆரோக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் வீட்டுத் தோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.வீட்டு முற்றத்தில், புழக் கடையில், மாடியில் தோட்டம் அமைக்க வழிகாட்டி வருகிறார் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ஒய்.ராஜகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜகுமாரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம்.“தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநராக பணியாற்றி ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஓய்வுக்கு பின்பு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இயற்கை வழி வேளாண்மையில் வீட்டுத் தோட்டம் அமைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். வீட்டு தோட்டம் அமைக்கும் போது முன்புறத்தை அழகு பூச்செடிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதிக இடமிருந்தால் சிறிய பாத்திகளாக பிரித்து காய்கறி சாகுபடி செய்யலாம். பாதை ஓரங்களில் கீரைவகை காய்கறிகளை வளர்க்கலாம். காய்கறி தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து அதில் படரும் கொடிவகை காய்கறி பயிர்களான பாகல், கோவைக்காய், பிரண்டை, தூதுவளை, பீர்க்கு, புடல் போன்றவைகளை பயிர் செய்யலாம். இது உயிர் வேலியாகவும் உபயோகப்படும். வீட்டுத் தோட்டம் அமைக்கும் முன்பு மண்ணை நன்கு பக்குவப் படுத்த வேண்டும்.அடியுரமாக தொழுவுரம், மக்கிய இலை, தழைகளை போட வேண்டும்.
தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி அவசியம். அதனால் நிழல் தரும் மரங்கள் அருகில் இருக்கக் கூடாது. தோட்டத்தில் நாம் பாய்ச்சும் தண்ணீரோ, மழை நீரோ தேங்கும் நிலையில் இருக்கக் கூடாது. எளிதில் வடிந்து ஓடும் வகையில் அமைக்க வேண்டும். பாத்திகளை மேடாக அமைக்க வேண்டும்.
காய்கறி தோட்டங்களை பொறுத்தவரை 15 நாள்களுக்கு ஒருமுறை உரம் இட வேண்டும். மண்புழு உரம், கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை ஒன்றாக கலந்து செடி ஒன்றுக்கு ஒருபிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு மண்ணை கொத்தி விட வேண்டும்.
இடையிடையே பஞ்சகவ்யா வளர்ச்சியூக்கியையும் தெளிக்க வேண்டும். திட்டமிட்டு காய் கறிகளை நடவு செய்தால் வீட்டுக்கு தேவையான காய்கறி களை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டு முன்பு இடம் இல்லாதவர்கள் மாடியிலும் மாடித் தோட்டம் அமைக்கலாம். பொதுவாக இப்போது சந்தைக்கு வரும் காய்கறிகள் பெரும்பாலும் ரசாயனத் தன்மை நிறைந்ததாக உள்ளது. உணவே மருந்து என்று இருந்த நிலை மாறி, இப்போது ரசாயன உரங்களின் பெருக்கத்தினால் சாப்பிட்ட உணவுக்கு மருந்து தேடி அலையும் சூழல் ஏற்பட்டுவிட்டது.
உலகத்துக்காக இல்லா விட்டாலும், அவரவர் உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட” என்று அழுத்தமான வார்த்தைகளில் முடிக்கிறார் ராஜகுமார்.​ 

Source: tamil.thehindu.com

1 comment:

sasikumar said...

Please give your contact number