இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆறுமுகம் சாதனை
இயற்கை வேளாண்மை என்றாலே உணவுப் பயிர்கள்தான் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார் பெரம்பலூர் ஆறுமுகம். அவர் ஈடுபடிருப்பது அங்கக மலர் சாகுபடியில்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இவையற்ற இயற்கை வேளாண்மையில் விளைந்த தானியம், காய் கனிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது கண்கூடு. ஆனால் மலர் சாகு படிக்கு ஆறுமுகம் இயற்கை வேளாண் மையை நாடியதிலிருந்து வேளாண் ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
பெரம்பலூரை அடுத்த எளம் பலூரில் மலர்ச்சியோடு சம்பங்கி வயலில் மலர்களை கொய்து கொண்டிருந்தார் ஆறுமுகம், “உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என்பதால் இயற்கை வேளாண்மையில் உணவு பயிர்களை சாகுபடி செய்வதில் அர்த்தமுண்டு. ஆனால், மலர் சாகுபடியில் அதுபோன்ற அவசியம் எதுவும் இல்லையே என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.
ஆனால் எனது வெற்றிகரமான அனுபவம் சொல்வதெல்லாம் எந்தவொரு சாகுபடி என்றாலும் அது இயற்கை வழிவந்தால் மட்டுமே உழவனுக்கும் நுகர்வோ ருக்கும் உண்மையான பலனைத் தர முடியும் என்பதுதான்.
இதே சம்பங்கி மலர் சாகுபடியில் ஈடுபடும் ரசாயனங்களைப் பயன்படுத்தும் ஒரு விவசாயி ரூ1000 செலவழித்தால் ரூ. 1100 மட்டுமே கிடைக்கும். ஆனால், நான் மாதம் 4 கிலோ வெல்லம், சிறுதானிய மாவு தவிர்த்து, உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக செலுத்தும் எனக்கு ரூ.500 லாபமாகவே கிடைக்கிறது” என்கிறார் ஆறுமுகம்.
அவர் மேலும் கூறும்போது, “2 சால் உழவோட்டி, சாம்பல் சத்து, தொழு உரம் ஆகியவற்றை ஏக்கருக்கு 8 யூனிட் அடித்தேன். பின்னர் புழுதி உழவோட்டி, கரை பிடித்ததும் மேட்டுப்பாத்தி அமைத்து அதில் சம்பங்கி கிழங்கு நட்டேன். இணை சாகுபடியாக உளுந்து, பாசிப்பயறு, கொத்துக்கடலை நடலாம். ஏனெனில் சம்பங்கி பூ காண 4 மாதமாகும் என்பதால் அதுவரை 3 மாதங்களுக்கு இந்த ஊடு பயிர்கள் கைகொடுக்கும். இவை இருக்கும்போது உயிர் மூடாக்காவும் பயன்படும்.
உளுந்து செடிகளை பிடுங்கி வயலிலேயே போடுவதன் மூலம் சிதைந்த மூடாக்காகவும் பலன் கொடுக்கும். களையை கட்டுப் படுத்த, மண்ணின் ஈரப்பதத்தை தேக்க, நுண்ணுயிர் பெருக்க, மொத்தத்தில் மண் உயிர்ப்போடு இருக்க இந்த மூடாக்குகள் உதவும்.
5 முதல் 12 மாதங்கள் வரை ஏக்கருக்கு தினசரி ஒன்றிரண்டு கிலோவாக மலர் மகசூல் கிடைக்கும். 18 மாதங்களுக்குப் பிறகு 25 கிலோ வரை மகசூல் உயரும். உள்ளூர் மலர் சந்தையில் சராசரியாக கிலோ சம்பங்கிக்கு ரூ. 40 கிடைக்கிறது. மலர் மாலை வியாபாரம் சுத்தமாக படுத்துக்கொண்டாலும் கூட, வாசனை திரவிய தொழிற் சாலைகளுக்கு அப்படியே அனுப்பி விடலாம் என்பதால் சம்பங்கி மலர் சாகுபடியில் வருமான இழப்புக்கு இடமில்லை.
வேர் வழி உணவூட்டமாக சாணம், கோமியம், வெல்லம், சிறுதானிய மாவு உள்ளடக்கிய ஜீவாமிர்த கரைசலை நானே தயாரித்து பாசன நீரில் கலந்து விடுவேன். அதே போல இலைவழி உணவூட்டமாக பஞ்சகவ்யம் தயாரித்து தருகிறேன்.
இதே சம்பங்கி சாகுபடியை ரசாயன வழியில் மேற்கொள்ளும் சக விவசாயிகளின் நிலத்தையும் கவனித்து வருகிறேன். இயற்கை வேளாண்மை வறட்சிக்கு ஈடுகொடுக்கும் என்பதால் அவர்களை போல தாராள பாசன நெருக்கடியில்லை. பூக்களை மார்க்கெட்டில் விற்ற கையோடு அந்த காசுக்கு உரம் பூச்சிக்கொல்லி வாங்கவே அவர்களுக்கு சரியாக இருக்கும்.
என்னுடைய வருமானமோ முழுதாக வீடு திரும்பும். உரம் பூச்சிக்கொல்லி பயன்படுத் தாததால் சம்பங்கி தட்டைகளை கால்நடை வளர்ப்போர் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்” என்று மலர்ச்சியாக பேசும் ஆறுமுகம், இயற்கை வேளாண் ஆர்வலர் களுடன் இணைந்து ஏராளமான இளம் விவசாய ஆர்வலர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
தொடர்புக்கு: 98650 95097
Source:tamilhindu
No comments:
Post a Comment