ஒரு அரசு
மருத்துவமனை பல வகைகளில் முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதற்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஆரம்பச் சுகாதார
நிலையம். ஆயிரம் சதுர அடி பரப்பில் 80க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளர்த்து
ஆரோக்கியத்தைப் பரவலாக்கும் முன்முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
அருமருந்து
இயந்திரமயமாகிவிட்ட
மனித வாழ்க்கையில் நீரிழிவு, ரத்த அழுத்தம்,
புற்றுநோய், இதயநோய் என 30 வயதைக் கடக்கும் பலர்
நோய்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.
சாதாரணக்
காய்ச்சலில் தொடங்கி டெங்கு, சிக்குன் குன்யா,
வைரஸ் காய்ச்சல் மற்றும்
மர்மக் காய்ச்சல் அதிகமாகப் பரவும் சூழ்நிலை பரவலாகிவிட்டது. இத்தகைய நோய்களைத்
தீர்க்கும் அருமருந்தாக மூலிகைச் செடிகள் உள்ளன என்பது பரவலாக அறியப்படாத உண்மை.
இந்நிலையில்
வேலூர் திருப்பத்தூர் அருகேயுள்ள ஆண்டியப்பனூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில்
மூலிகை தோட்டம் அமைத்து, 80 வகை மூலிகைகளை
வளர்த்து, நமது
பாரம்பரியமான மூலிகைகளின் மகத்துவத்தைப் பரவலாக்கி வருகிறார் உதவி மருத்துவ
அலுவலர் (சித்தா) டாக்டர் விக்ரம்குமார்.
ஆயிரம் அடியில்
“ஆண்டியப்பனூர்
அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட
இடத்தின் அருகே, ஆயிரம் சதுர அடி
பரப்பில் மூலிகை தோட்டம் அமைக்க யோசனை செய்தேன். அதற்கான முயற்சி ஆரம்பத்தில்
சற்றுக் கடினமாகத்தான் இருந்தது.
அதே பகுதியைச்
சேர்ந்த தங்கம்மா பாட்டி, எனக்குத் துணை
நின்றார். மூலிகைச் செடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்ததைவிட அவருக்கு அதிகமாகத்
தெரிந்திருந்தது. அவருடைய ஒத்துழைப் போடு இந்த மூலிகை தோட்டம் இன்றைக்கு
உருவாக்கியுள்ளது.
அடுத்ததாகப்
பள்ளி மாணவர்களுக்கு மூலிகைச் செடிகளின் மகத்துவம், மருத்துவக் குணங்களைப் பயிற்றுவிப்பது பற்றி
ஆலோசித்து வருகிறேன்" என்கிறார் டாக்டர் விக்ரம் குமார்.
தங்கம்மா
பாட்டியின் உதவி
இந்த மூலிகை
தோட்டத்துக்கு உயிர் கொடுத்த தங்கம்மா பாட்டி, ஆண்டியப்பனூர் அரசு சுகாதார மையத்தில் சித்த
மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டபோது, சின்னச்சின்ன வேலைகளைப் பார்ப்பதற்காக வந்தவர். மூலிகை தோட்டம் அமைக்க
வேண்டும், அதற்கு என்ன
செய்வது என்று டாக்டர் விக்ரம்குமார் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அது.
"நாம
இருக்குற இடத்தைச் சுத்தியே நிறைய மூலிகை செடிகள் இருக்கு. நாம் அன்றாடம்
பயன்படுத்தும் உணவு வகைகளிலேயே மருத்துவம் இருக்கு. நான் உங்களுக்கு உதவு றேன்
டாக்டர்னு" முன்வந்தவர் தங்கம்மா பாட்டி.
உடனே, மருத்துவமனையைச் சுற்றியுள்ள காலி இடத்தில் பல
வகை மூலிகைச் செடிகளின் தோட்டத்தை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வயல்வரப்புகளில் தெரிந்தும், தெரியாமலும்
இருந்த மூலிகைச் செடிகளைப் பறித்து இங்குக் கொண்டு வந்து நட்டார்கள். இப்படியாகக்
கொஞ்சம் கொஞ்சமாகத் தோட்டம் முழுவதும் மூலிகை செடிகள் பெருக ஆரம்பித்தன.
மூலிகை மகிமை
“இது மாதிரி
தோட்டத்த ஒவ்வொரு வீட்டிலயும் வச்சு, அதை உணவுல சேர்த்துக்கிட்டா எந்த நோயும் வராது, எனக்கு இப்ப 75 வயசு. இப்பவும் தோட்ட வேலை
பாக்குறேன். ஒரு நாளைக்கு 10 மணி நேரம்கூட என்னால் தோட்ட வேலை பார்க்க முடியும்.
இந்த வயசுலயும் மண்வெட்டி, கடப்பாரை எடுத்து
என்னால விவசாய வேலை பார்க்க முடியும். இதெல்லாம் மூலிகைச் செடிகளின் மகிமைதான்”
என்று பெருமை பொங்கக்
கூறுகிறார் தங்கம்மா.
மருத்துவமனையும்
மருத்துவர்களும் நோயின்றி வாழ்வதையும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகளையும்
ஊக்குவிக்க வேண்டும். அதிலும் புதுமையாக மூலிகைத் தோட்டத்தை அமைத்து நோயாளிகளுக்கு
அறிவையும் ஆரோக்கியத்தையும் ஊட்டுகிறார்கள் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவரும்
தங்கம்மா பாட்டியும். இந்தச் சிறு பொறி தமிழகம் முழுக்கப் பரவும்போது, மூலிகைகளின் அருமை மாநிலம் எங்கும் உணரப்படும்.
Source: The Hindu. Tamil.