முதுபெரும்
இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார்,
கடந்த டிசம்பர் 30 அன்று காலமாகி விட்டார்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இயற்கை
வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடிவந்த அவரது மறைவு தமிழக
மக்களுக்கு ஈடுசெய முடியாத பேரிழப்பாகும்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் பிறந்த நம்மாழ்வார், அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று, கோவில்பட்டி
மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பண்ணை மேலாளராகப் பணியாற்றினார்.
சிட்டுக் குருவிக்கும் சிற்றெறும்புக்கும் சேர்த்து சமைத்து பல்லுயிர் பேணும் அறத்தைக் கொண்ட மரபில் வந்த நம்நாட்டு விவசாயத்தைப் பசுமைப் புரட்சி என்ற பெயரால் நாசமாக்கும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அதிருப்தியுற்று, இயற்கைவழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் மாபெரும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பசுமைப் புரட்சியின் போது அரசாங்கம் இரசாயன உரங்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த போது, அவர் கிராமந்தோறும் விவசாயிகளை நேரில் சந்தித்து அதன் பாதிப்புகளை அறிவியல்ரீதியாக உணர்த்தி, இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார். ஒற்றை மனிதனாகத் தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணம், இன்று பலரை இயற்கை வேளாண்மையின் பக்கம் திருப்பியிருக்கிறது.
சிட்டுக் குருவிக்கும் சிற்றெறும்புக்கும் சேர்த்து சமைத்து பல்லுயிர் பேணும் அறத்தைக் கொண்ட மரபில் வந்த நம்நாட்டு விவசாயத்தைப் பசுமைப் புரட்சி என்ற பெயரால் நாசமாக்கும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அதிருப்தியுற்று, இயற்கைவழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் மாபெரும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பசுமைப் புரட்சியின் போது அரசாங்கம் இரசாயன உரங்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த போது, அவர் கிராமந்தோறும் விவசாயிகளை நேரில் சந்தித்து அதன் பாதிப்புகளை அறிவியல்ரீதியாக உணர்த்தி, இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார். ஒற்றை மனிதனாகத் தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணம், இன்று பலரை இயற்கை வேளாண்மையின் பக்கம் திருப்பியிருக்கிறது.
நம் நாட்டின் மரபுரிமையாக உள்ள வேப்பமரத்துக்கான காப்புரிமையை
அந்நிய ஏகபோக நிறுவனங்கள் தமக்கானதாகத்
திருடிக் கொண்டபோது, அதனை எதிர்த்து வந்தனா
சிவா முதலானோருடன் இணைந்து போராடி அப்பாரம்பரிய
உரிமையை அவர் மீட்டெடுத்தார். பி.டி.கத்தரியை இந்தியாவில்
அறிமுகப்படுத்துவதை எதிர்த்த அவர், அன்றைய மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ்
நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களில் தனது
பிரதிநிதிகளை அனுப்பி பி.டி.க்கு எதிராகப் பேச
வைத்தார். அரச்சலூர் செல்வம், சித்த மருத்துவர் சிவராமன்
ஆகியோர் அப்போது தமிழக முதல்வராக
இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி.கத்தரியின் கேடுகளை
எடுத்துச் சோல்லி, தமிழகத்தில் அதற்குத்
தடை உத்தரவு பெற்றதற்கு அவர்
முக்கிய காரணமாக இருந்தார். மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்த
அவர், காடுகள் இல்லையேல் மழையும்
ஆறுகளும் இல்லாமல் போய் விவசாயமே பொய்த்துவிடும்
என்பதை உணர்த்தி பல போராட்டங்களில் முன்னின்றார்.
இயற்கை விவசாயப் பயிற்றுநர்களை ஒடுக்குவதற்காக, கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட
வேளாண் மன்றச் சட்டத்தை முறியடித்ததிலும்
அவரது பங்கு முக்கியமானது.
ஜப்பானின்
இயற்கை வேளாண் விஞ்ஞானியான மாசானபு
ஃபுகோகா மற்றும் பெர்னார்ட், ரேச்சல்
கார்சன், குமரப்பா, தபோல்கார் முதலான இயற்கை வேளாண்
வித்தகர்களின் மூலம் அறிந்த தொழில்நுட்பத்தையும்,
தனது அனுபவ அறிவினால் உணர்ந்ததையும்
அவர் சாமானிய விவசாயிகள் புரிந்து
கொள்ளும் மொழியில் விளக்கினார். வெள்ளைத்தாடியுடன் தமிழக உழவனின் தோற்றத்தில்
துண்டு போர்த்திய வெற்றுடம்புடன் எளிமையாகத் திகழ்ந்த அவர், காவிரி டெல்டா
மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பேரழிவுத்
திட்டத்துக்கு எதிராக, கடந்த டிசம்பர்
மாதத்தில் கிராமம் கிராமமாகப் பிரச்சாரத்தில்
ஈடுபட்டிருந்த போதே இயற்கை எய்தியது
மிகவும் வேதனைக்குரியதாகும்.
இயற்கை
வேளாண் பயிற்சி
கரூர் மாவட்டம் , கடவூரிலுள்ள “வானகம்” எனும் தனது பண்ணையில்
இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்
(கோப்புப் படம்).
பன்னாட்டு
ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்காடாக விவசாய நிலங்கள் மாற்றப்பட்டு,
இரசாயன உரங்களின் நச்சுக் குவியலாலும் மரபீணி
மாற்றப் பயிர்கள் எனும் இயற்கை அழிப்புத்
திட்டங்களாலும் பாழ்பட்டுள்ள தமிழக விவசாயத்தை, அந்த
அழிவிலிருந்து காப்பாற்ற அவர் பல கிராமங்களுக்குச்
சென்று விவசாயிகளைச் சந்தித்து கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி
இயற்கை வேளாண்மை முறைகளை மீட்டெடுத்தார். இரசாயன
உரத்துக்கு மாற்றாக, பயிர் சுழற்சி வேளாண்மை
முறையின் மூலம் அதை ஈடுசெய்ய
முடியுமென்பதை அவர் அறிவியல் ரீதியாகச்
செயல்படுத்திக் காட்டினார். கேடு விளைவிக்கும் மரபீணி
மாற்றப் பயிர்களை எதிர்த்த அவர், பாரம்பரிய ஒட்டு
ரகங்களை உருவாக்கினார்.
உழவுக்கும்
உண்டு வரலாறு, தாய்மண்ணே வணக்கம்,
பூமித்தாயே, எந்நாடுடைய இயற்கையே போற்றி, இனி விதைகளே
பேராயுதம், வயிற்றுக்குச் சோறிட வேண்டும், நோயினைக்
கொண்டாடுவோம் – என 15-க்கும் மேற்பட்ட
நூல்களைப் படைத்துள்ள அவர், அதிக மகசூலால்
பிரபலமான மடகாஸ்கரின் ஒற்றை நாற்று நடவு
அல்லது செம்மைநெல் சாகுபடியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன்
எடுத்துரைத்தார். ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்படும் துரித உணவினால் ஏற்படும்
கேடுகளை விளக்கி, நமது பாரம்பரிய உணவு
தானியங்களின் மகத்துவத்தை உணர்த்தியதோடு, அதிக விலையுள்ள ஆப்பிளை
வாங்கிச் சாப்பிடுவதைப் பெருமையாகக் கருதும் நம் நாட்டில்,
அதைவிட அதிகச் சத்துக்களைக் கொண்ட
கொயாப்பழம் மலிவு விலையில் கிடைப்பதை
விளக்கித் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இன்று நாசமாக்கப்படுவது விவசாயமும் விவசாயிகளும் மட்டுமல்ல; சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நச்சு ஆலைகள், இயற்கை
மூலவளங்கள் கொள்ளையிடப்படுதல், சிறு தொழில்களும் சில்லறை
வணிகமும் நசுக்கப்படுதல் – என நாடும் மக்களும்
கேள்வி முறையின்றிச் சூறையாடப்படுகின்றனர். இத்தகைய பேரழிவுக்குக் காரணமாக
இருப்பது ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கக் கொள்கைகள். நாட்டையும் மக்களையும் சூறையாடும் மறுகாலனியாதிக்கத்தைப் போராடி முறியடிக்க அரசியல்
கிளர்ச்சிகளும் அரசியல் புரட்சிகளும் இன்று
உடனடித் தேவையாகியிருக்கிறது.
ஆனால் நம்மாழ்வார், விவசாயத்தில் மறுகாலனியாக்கத்தின் கொடிய விளைவுகளை மட்டும்
எதிர்த்தாரே தவிர, இதற்குக் காரணமாக
உள்ள அரசியல் கட்டமைப்பை எதிர்க்கத்
துணியவில்லை. இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதன்
மூலம் ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகாரக் கொள்கைகளை முடமாக்கிவிட முடியும் என்று நம்பினார். அவர்
எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினாரோ, அவற்றைத் திணித்த அரசியல் கட்டமைப்பை
எதிர்த்து நிற்காமல், அந்தக் கட்டமைப்பில் உள்ளவர்களுடனும்,
தன்னார்வக் குழுக்களுடனும் இணைந்து செயல்பட்டார். சாமானிய
மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுசேர்க்கும் களமாகவே தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களைப் பார்த்தார். ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கத்தால் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல்
பார்வையின்றி யாரெல்லாம் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக
நிற்கிறார்களோ அவர்களுடனெல்லாம் இணைந்து நின்றார். ஏகாதிபத்தியங்களைப்
புரவலர்களாகக் கொண்ட தன்னார்வக் குழுக்கள்
முதல் இந்துவெறியர்களின் சுதேசி ஜக்ரான் மஞ்ச்
வரை அனைவருடனும் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றார்.
இத்தகைய பலவீனங்கள் அவரிடமிருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகர விவசாயக் கொள்கைகளுக்கு
எதிராக மக்களிடம் விழிப்புணர்வூட்டி இயற்கைவழி வேளாண்மையை மீட்டெடுக்க இடையறாது போராடிய மகத்தான இயற்கை
வேளாண் விஞ்ஞானியாவார்.
மறுகாலனியாதிக்கச்
சூறையாடலுக்கு விசுவாசமாக நிற்கும் எதிரிகளுடனும், ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களுடனும் இணைந்து போராடுவதன் மூலம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வழி வேளாண்மைப்
பாதுகாப்பு முதலானவற்றை ஒருக்காலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அவரது ஆதரவாளர்கள்
உணர்ந்து, மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக இதர பிரிவு
உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலம்
அவர் கண்ட கனவை நனவாக்க
முன்வரவேண்டும்.
- தனபால்.
Source: புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2014
No comments:
Post a Comment