Tuesday

வறட்சியிலும் வளமான மகசூல்


வறட்சியிலும் வளமான மகசூல்...நம்பிக்கை கொடுத்த நடவு துவரை...
ஆர். குமரேசன்,படங்கள்: வீ. சிவக்குமார்
துவரை... குறிப்பிட்ட இடைவெளியில், தூவி விதைக்கப்படுவதுதான் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை நடைமுறை! ஆனால், துவரையை நாற்று மூலம் நடவு செய்யும் திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக வேளாண்மைத் துறை அறிமுகப்படுத்தியது... ஓர் ஆச்சரிய மாற்றமே!
நாற்று உற்பத்தி செய்து, நிலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் என்கிற இந்தப் புதிய முறை பற்றி,
10.08.12 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில், 'மானாவாரியில் ஒரு டன், இறவையில் ஒன்றரை டன்... நடவு முறையில் துவரை சாகுபடி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. நடவு முறையைப் பற்றியும், அதிலுள்ள நன்மைகள் பற்றியும் அதில் பதிவு செய்திருந்தார், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வேளாண் உதவி இயக்குநர், ரவிபாரதி.
அதாவது... 'மானாவாரியில் ஏக்கருக்கு 400 கிலோ, இறவையில் 600 கிலோ...' வீதம் மகசூல் கிடைக்கும் என்பதுதான் வேளாண்துறையின் கணிப்பு. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், 'நடைமுறையில், நடவு துவரை சாகுபடி எந்தளவுக்குப் பலன் கொடுத்திருக்கும்?’ என்கிற கேள்வி நமக்கு எழுந்தது!
இறவைப் பாசனத்தில் நடவு முறையில் துவரை சாகுபடி செய்திருக்கும் குஜிலியம்பாறை அருகிலுள்ள வடுகம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமன்-சாவித்திரி தம்பதியைச் சந்தித்தோம்.
சொன்னபடி 600 கிலோ !
''நாங்க இதுவரைக்கும் துவரையை வரப்பு வெள்ளாமையாதான் செய்வோம். கடலையைப் போட்டுட்டு ஒவ்வொரு சால் வரிசையில மட்டும்தான் துவரையை விதைப்போம். இந்த தடவைதான் வயல் முழுக்க துவரையை நட்டுருக்கோம். ஆரம்பத்துல, அக்ரி ஆபீசரு சொன்னப்ப... கொஞ்சம் யோசனையாத்தான் இருந்துச்சு. பிறகு, 'நட்டுதான் பாப்போமே’னு துணிஞ்சு நட்டோம். சும்மா சொல்லக் கூடாது. அவங்க சொன்ன மாதிரியே மகசூல் கிடைச்சுருக்கு'' என்று எடுத்ததுமே நல்ல செய்தி சொன்ன சாவித்திரி, தொடர்ந்தார்.
''விதைகளை 'பிளாஸ்டிக் டிரே’ல போட்டு நாத்து தயார் செஞ்சோம். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாத்துக்கு ஒரு கிலோ விதை சரியா இருந்துச்சு. 25-ம் நாள் நாத்தை எடுத்து, வயல்ல நட்டோம். செடிக்குச் செடி 5 அடி, வரிசைக்கு வரிசை 4 அடிங்கிற கணக்குலதான் நட்டோம்.
நட்டதிலிருந்து 25 நாள்ல ஒரு களை எடுத்து மண் அணைச்சோம். அப்பவே செடியில இருந்த நுனிகளைக் கிள்ளி விட்டோம். இப்படி நுனியைக் கிள்ளி விட்டதால அதிகமா சிம்பு வெடிச்சது. நடவுக்கு முன்ன குப்பை எரு போட்டதோட சரி, வேறெந்த உரமோ, மருந்தோ அடிக்கல. பயிர் அருமையா வளந்துடுச்சு. இது, வறட்சியான பகுதி. இருக்குற கொஞ்சத் தண்ணியை வெச்சு வெள்ளாமை செஞ்சிகிட்டு இருக்கோம். அதுலயே இப்படி வெளஞ்சதைப் பாக்க ஆச்சரியமா இருக்கு. 'அதிகாரிங்க சொன்னபடியே ஏக்கருக்கு 600 கிலோவுக்கு குறையாது'னு பாத்தவங்க எல்லாம் சொல்றாங்க. இது 110 நாள் பயறு. இன்னும் இருபது நாள்ல அறுவடை செஞ்சுடுவோம்'' என்றார், உற்சாகமாக.
மானாவாரியில் 300 கிலோ !
மானாவாரியில் துவரை சாகுபடி செய்திருக்கிறார், கோம்பை பகுதியைச் சேர்ந்த ரங்கமணி. ''திண்டுக்கல் மாவட்டத்திலயே கடுமையான வறட்சிப்பகுதி இதுதாங்க. அதுலயும் இந்த வருஷம் சுத்தமா மழையே இல்ல. அதனால எந்த பயறு பட்டையும் சொகமில்ல. எப்பவும் சோளத்தை விதைச்சுட்டு, சால்ல நாட்டு துவரையை வெதைப்போம். 6 மாசம் கழிச்சு அறுத்துப் பாத்தா ஒரு ஏக்கர்ல 40  கிலோவுல இருந்து 60 கிலோ வரைக்கும் துவரை கிடைக்கும். 'வந்தவரைக்கும் வருமானம்’னு இருந்துடுவோம்.
இந்தத் தடவை வேளாண்மை அதிகாரிங்க மானாவாரி நிலத்துல துவரை நாத்தை நடச் சொன்னாங்க. 'மழையுமில்லாம, தண்ணியுமில்லாம இது சரியா வராது’னு சொன்னேன். வற்புறுத்தி நட வெச்சுட்டாங்க. ஆடிக்குப் பிறகு கெடைச்ச ஒரு மழையில நிலத்துல இருந்த ஈரத்துலயே நாத்துகளை நட்டேன். நட்ட பத்து நாள்ல ஒரு தூத்த (தூறல்) கிடைச்சது. அம்புட்டுதான். அதுக்குப் பிறகு மழை வாடையே இல்ல.
ஆனாலும் பயிரு உசுரு பொழச்சு வந்துடுச்சு. 30 நாள்ல நுனி கிள்ளச் சொன்னாங்க. அதும்படி செஞ்சதால அதிகமா கிளை அடிச்சது. வழக்கமா வர்ற பயிரைவிட வளர்ச்சியும், விளைச்சலும் நல்லா இருக்கு. இன்னும் ஒரு மழை கிடைச்சிருந்தா இன்னும் அதிக மகசூல் கிடைச்சிருக்கும். இன்னும் பத்து நாள்ல அறுவடை முடிச்சிடுவேன். அப்பதான் எவ்வளவு மகசூல் கிடைகும்னு தெரியும்'' என்றார், ரங்கமணி.
அறுவடை முடிந்ததும் நம்மைத் தொடர்பு கொண்ட ரங்கமணி, ''ஏக்கருக்கு 4 (75 கிலோ) மூட்டை வீதம் மகசூல் கிடைச்சிருக்கு. மொத்தம் 300 கிலோ, இது வழக்கத்தைவிட, நாலு மடங்கு கூடுதல் மகசூல்'' என்று மகிழ்ச்சித் துள்ளலோடு சொன்னார்.
தொடர்புக்கு,
சாவித்திரி, செல்போன்: 90472-88744
ரங்கமணி, செல்போன்: 98430-62942
ரவிபாரதி, செல்போன்: 94425-42894

பச்சைக் காயாக விற்றால் லாபம்!
குஜிலியம்பாறை பகுதியில் துவரையில் நடவு முறையை விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வரும் வேளாண் உதவி இயக்குநர் ரவிபாரதி, ''நடவு முறைக்காக 130 நாள் வயதுடைய கோ.ஆர்.ஜி-7 ரக துவரை விதையை இந்தப் பகுதி விவசாயிகளுக்குக் கொடுத்தோம். குஜிலியம்பாறை பகுதியில் மட்டும் இறவையில் 35 ஏக்கரிலும், மானாவாரியில் 40 ஏக்கரிலும் நடவு முறையை அறிமுகப்படுத்தினோம். இந்த போகத்தில் சரியான மழையில்லாததால் நாங்கள் எதிர்பார்த்த மகசூல் இல்லை.
'மானாவாரியில் ஏக்கருக்கு 400 கிலோ... இறவையில் 600 கிலோ...' என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு. தற்போது மழை இல்லாததால்... மானாவாரியில் 200 முதல் 300 கிலோவும், இறவையில் 500 முதல் 600 கிலோவும் மகசூல் கிடைக்கும் என்பது வயல் சோதனை முடிவில் தெரிய வந்திருக்கிறது. இறவையில் முறையாகப் பாசனம் செய்த போதும், மேல் மழையில்லாததால் மகசூல் குறைந்து விட்டது.
அதிக பராமரிப்பும், இடுபொருட்களும் தேவைப்படாத கோ.ஆர்.ஜி-7 ரகத்தை பச்சைக் காயாக அறுவடை செய்தும் விற்பனை செய்யலாம். 90 நாள் முதல் 150 நாட்கள் வரையிலான பச்சைக் காய்களை அறுவடை செய்வதன் மூலமாக, ஒரு ஏக்கரில் 4 டன் முதல் 6 டன் வரை காய்கள் கிடைக்கும். இதை கிலோ 10 ரூபாய் என்கிற விலையில் ஓசூர், பெங்களூரு மார்க்கெட்களில் சந்தைப்படுத்தலாம். உள்ளூரிலும் தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம்.
காய் முற்றிய பிறகு பறித்து, பருப்பாக மாற்றி விற்கும்போது, ஒரு கிலோ துவரைக்கு 50 ரூபாய் விலை கிடைக்கிறது. அந்த வகையில், தற்போது இறவையில் நடவு செய்திருக்கும் விவசாயிகளுக்கு 500 கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவுத் தொகையாக 4 ஆயிரம் ரூபாய் போனாலும்... 21 ஆயிரம் ரூபாய் லாபம். மானாவாரி விவசாயிகளைப் பொறுத்தவரை, 200 கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் செலவு 2 ஆயிரம் ரூபாய் போனாலும், 8 ஆயிரம் ரூபாய் லாபம். இதையெல்லாம் பார்த்துவிட்டு, தற்போது நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய அதிக விவசாயிகள் முன் வந்திருக்கிறார்கள். இதுவே இந்தத் தொழில்நுட்பத்துக்குக் கிடைத்த வெற்றி'' என்றார், மகிழ்ச்சியுடன்.

 வழக்கத்தைவிட அதிகமா காய் பிடிக்குது!
புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மானாவாரி விவசாயி முருகேசன், ''நான் நடவு முறையில ஒன்றரை ஏக்கர்ல துவரை நட்டிருக்கேன். வழக்கமான முறையைவிட அதிகமா காய் பிடிக்குது. அதுவும் இந்த வருஷத்து கடுமையான வறட்சியைத் தாங்கி இந்தளவு காய்ச்சதை மத்த விவசாயிங்களே ஆச்சரியமா பாக்குறாங்க. நிலத்துல ஈரம் இருக்குறப்பவே நட்டுட்டா போதும், வேற எந்தப் பாடும் இல்லாம விளைஞ்சுடுது. அப்பப்ப மழை கிடைச்சா... நல்ல மகசூல் கிடைக்கும்போல. எனக்கு இந்தத் தடவை, ஒன்றரை ஏக்கர்லயும் சேர்த்து 5 மூட்டைதான் (60 கிலோ) கிடைக்கும்'' என்றார்.
முருகேசனின் கருத்தை ஆமோதித்த அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல்,, ''நல்ல தொழில்நுட்பம்தான். வழக்கமா ஏக்கருக்கு அதிகபட்சமா 100 கிலோ கிடைச்ச இடத்துல, 400 கிலோ கிடைக்கிறது... ரொம்பப் பெரிய விஷயம். இந்த முறை மழையில்லாமப் போனதால அதிகாரிங்க சொன்ன மகசூல் கிடைக்கல. மழை கிடைச்சுருந்தா அவங்க சொன்ன மகசூலையும் தாண்டி விளைஞ்சுருக்கும்னு தோணுது. என்னோட மானாவாரி வயல்ல ஆய்வு செஞ்சு பாத்ததுல 'மழை இல்லாத காரணத்தால... ஏக்கருக்கு 160 கிலோ கிடைக்கும்’னு சொல்லியிருக்காங்க. அறுவடை செஞ்சாத்தான் சரியான மகசூல் தெரியும்'' என்றார்.

Source: pasumaivikatan

No comments: