8 ஏக்கரில் ரூ.4 லட்சம் ஏற்றம் தந்த ஏழு ரக வாழை..!
அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி...
ஊடுபயிர் என்றைக்குமே விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை'' என்று அடித்துச் சொல்கிறார், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.
பாதை காட்டிய பசுமை விகடன் !
ஒரு காலைப் பொழுதில் அவரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கிய வரதராஜன், ''எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சு முடிச்ச கையோடு, விவசாயத்துக்கு வந்துட்டேன். இப்போ 30 வருஷமாச்சு. தென்னைக்கு இடையில 18 வருஷமா வாழையை ஊடுபயிரா சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன். கோடைக் காலங்கள்ல கிணத்துப் பாசனம், மழைக் காலங்கள்ல ஏரிப்பாசனம். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான். சம்பாதிக்கிறதுல முக்கால்வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்துச்சு. அதில்லாம கட்டுபடியான விலையும் கிடைக்கலை.
'உற்பத்திச் செலவை எப்படிக் குறைக்கிறது’னு யோசனை செஞ்சுக்கிட்டிருக்கப்போ... எனக்கு மாற்று வழியைக் காட்டினது 'பசுமை விகடன்’தான். அதுல வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்துன 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகள், 'இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாத்துலயும் கலந்துக்கிட்டு... இயற்கை வேளாண்மை பத்துன விஷயங்களைத் தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம்தான் முழு இயற்கை விவசாயியா மாறினேன். இப்ப மூணு வருஷமா ஜீரோ பட்ஜெட் முறையிலதான் விவசாயம் செய்றேன். 10 ஏக்கர் தென்னந்தோப்புல 8 ஏக்கர்ல மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிரா சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். அதனால, உற்பத்திச் செலவு வெகுவா குறைஞ்சுருக்கு'' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.
வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர் !
'தோப்புல 27 அடி இடைவெளியில மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயசு முதல் 40 வயசு வரைக்கும் உள்ள மரங்கள். தோப்புக்குள்ளே ஏகத்தும் சூரிய வெளிச்சம் கிடைச்சதால ஊடுபயிரா வாழை போட்டிருக்கேன். தனிப்பயிரா வாழையை நட்டா... ஏக்கருக்கு 1,000 மரங்கள்ல முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும், ஆனா, ஊடுபயிரா செய்யும்போது அதுல பாதிதான் நட முடியும். வெயில் கிடைக்கும் இடங்கள்ல மட்டும்தான் நடவு செய்யணும். ரெண்டு தென்னைக்கு இடையில ஒரு வாழைனு நட்டுருக்கேன்.
பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி-9 னு ஏழு ரகங்கள்ல மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன்-1,000, செவ்வாழை-500, தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன்-500., ஜி-9-800, மொந்தன்-500). மூணு வருஷமா தோப்புல உழவே செய்யலை. தட்டைப் பயறை ஏகத்துக்கும் விதைச்சு விடுறதால களைகள் கட்டுப்படுறதோட, தழைச்சத்தும் கிடைச்சுடுது. அங்கங்க செண்டு மல்லிச் செடிகள் இருக்கறதால நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோட ஜீவாமிர்தத்தைக் கொடுத்துட்டே இருக்கேன். இயற்கை முறைங்கறதால நோய்களே வர்றதில்லை.
வாழையில இது மூணாவது தழைவு. தாய் வாழையைச் சுத்தி நிறைய பக்கக் கன்னுகள் வளரும். ரெண்டு மாசம் வளந்த பிறகு, அதுல ஒண்ண மட்டும் விட்டுட்டு, மத்தக் கன்னுகளை அப்புறப்படுத்திடணும். இந்த ரெண்டு மாசத்துக்குள்ள பக்கக் கன்னுகள்ல கிடைக்கற இலைகளை அறுத்து வித்துக்கலாம். பக்கக் கன்னு வளர வளர, அறுவடை செஞ்ச தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழ சாஞ்சுடும். அப்போ அதை வெட்டி, தோட்டத்துல பரப்பிட்டா உரமாயிடும்.
ஒரு தார் குறைஞ்சபட்சமா 100 ரூபாய்க்கு வித்துடும். அந்தக் கணக்குல 4 ஆயிரத்து 800 தார் மூலமா வருஷத்துக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இலை மூலமா 48 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்குக் கொடுக்கனு ஆட்கள் தேவைப்படுறாங்க. அதுக்கான கூலி, வருஷத்துக்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்துல நடும்போது உழவு, குழினு ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாச்சு. வியாபாரிகளே அறுவடை பண்ணிக்கறதால அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாம, ஊடுபயிர் மூலமாவே எட்டு ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு நாலு லட்ச ரூபாய் லாபம் கிடைச்சுடுது'' என்ற தெய்வம் வரதராஜன், நிறைவாக...
'ஜீரோ பட்ஜெட் பக்கம் வந்த பிறகுதான் விவசாயத்து மேல எனக்கு பிடிப்பு வந்துருக்கு. ஓரளவு கட்டுபடியாகிற விலையும் கிடைக்குது. மகசூல் கூடியிருக்கு. இந்த வாழைப்பழங்களோட சுவையும் அருமையா இருக்கறதோட, பழங்களும் சீக்கிரமா கெட்டுப் போறதில்லை. அதனால எனக்குக் கூடுதல் விலை கிடைக்குது'' என்றார், மகிழ்ச்சியாக.
தொடர்புக்கு,
தெய்வம் வரதராஜன்,
செல்போன்: 97875-41748
தெய்வம் வரதராஜன்,
செல்போன்: 97875-41748
ஜி. பழனிச்சாமி ,படங்கள்: க. ரமேஷ்
Source: pasumaivikatan
No comments:
Post a Comment