Sunday

முத்தான வருமானம் தரும் சத்தான நிலக்கடலை !

முத்தான வருமானம் தரும் சத்தான நிலக்கடலை !
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து, ஆரோக்கியமற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு, நஷ்டப்பட்டுப் புலம்பும் விவசாயிகள் பலர் உண்டு. அதேநேரத்தில், குறைவான செலவில் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு, கூடுதல் மகசூல் மற்றும் லாபத்தையும் பெற்று வருகிறார்கள், பல இயற்கை விவசாயிகள். அத்தகையோரில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம்!
தேவர்குளத்திலிருந்து கயத்தாறு போகும் வழியில், நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பன்னீர்ஊத்து கிராமம். இந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் நிலக்கடலை சாகுபடிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இங்கே... எலுமிச்சை, தென்னைக்கு நடுவே...
நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறார், சண்முகம். தோட்டம் தேடிச் சென்ற நாம், அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, உற்சாகமாகப் பேசத் துவங்கினார் மடைதிறந்த வெள்ளமென!
திசை திருப்பிய அதிகாரிகள்... பாதை காட்டிய பசுமை விகடன்!
'' எட்டு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ஒரு ஏக்கர்ல நிலக்கடலைய, தனிப்பயிராவும், ரெண்டு ஏக்கர் நிலத்துல தென்னை, எலுமிச்சையோட ஊடுபயிராவும் சாகுபடி பண்ணியிருக்கேன். இது போக, எலுமிச்சை தனிப்பயிரா ஒரு ஏக்கர்ல இருக்கு. மீதியிருக்கிற நாலு ஏக்கர் நிலம் சும்மாதான் கிடக்குது. இப்போ எனக்கு 81 வயசு ஆகுது. சின்ன வயசுலயே விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்ப காலத்துல... சாணி, இலை, தழைனு போட்டுதான் விவசாயம் செஞ்சுட்டுருந்தாங்க எல்லாரும். நானும் அப்படித்தான். ஆனா... காலப்போக்குல 'அக்ரி ஆபீஸர்'னு சொல்லிட்டு வந்தவங்க... யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ்னு போட சொல்லி... எல்லாரையும் ரசாயனம் பக்கம் திருப்பிட்டாங்க. ஆனாலும், தொழுவுரத்தை மட்டும் பெரும்பாலானவங்க விடறதில்லை. அவங்கள்ல நானும் ஒருத்தனாவே இருந்தேன்.
மொத்தம் அஞ்சரை ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர்ல எலுமிச்சை, ஒன்றரை ஏக்கர்ல தென்னை இருக்கு. எலுமிச்சை மரங்களுக்கு ரெண்டு வயசு ஆகுது. முழுக்க நாட்டு ரகம்தான். தென்னைக்கு ஒரு வயசாகுது. மீதி மூணு ஏக்கர்ல வழக்கமா, நிலக்கடலைதான் போடுவேன். என் பையன் கருப்பசாமிதான் 'பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சப்பறம், 'இயற்கை வழி விவசாயத்துக்கு மாறணும்’னு சொல்லிட்டே இருந்தான். அவன் திருப்திக்காக முதல் தடவையா இயற்கை முறையில நிலக்கடலை போட்டேன். நல்ல மகசூல் கிடைச்சுருக்கு. அதனால, 'இனி எப்பவுமே இயற்கை விவசாயம்’னு முடிவெடுத்துட்டேன். இப்போ, தென்னை, எலுமிச்சை ரெண்டுக்குமே ஆட்டு எரு, பிண்ணாக்கு, பஞ்சகவ்யா, அசோஸ்பைரில்லம்னு இயற்கை உரங்களைத்தான் கொடுத்திட்டுருக்கேன்'' முன்னுரை கொடுத்த சண்முகம், தந்த நிலக்கடலை சாகுபடிக் குறிப்புகளைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 40 கிலோ விதை!
'நாட்டுரக நிலக்கடலையின் வயது 110 நாட்கள். வைகாசி, கார்த்திகை ஆகிய மாதங்கள், நடவுக்கு ஏற்றவை. செம்மண்ணில் நல்ல மகசூல் கிடைக்கும். நிலக்கடலை சாகுபடிக்கு நிலத் தயாரிப்பு மிகவும் முக்கியம். பெரிய கலப்பை கொண்டு மூன்று உழவும், சிறிய கலப்பை கொண்டு மூன்று உழவும் செய்ய வேண்டும். முதல் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழித்து அடுத்த உழவும்... அதிலிருந்து முறையே நான்கு நாட்கள் இடைவெளி விட்டு, அடுத்தடுத்து உழவுகளைச் செய்யவேண்டும். கடைசி உழவின்போது, ஒரு ஏக்கருக்கு 5 டன் என்ற கணக்கில், தொழுவுரம் இட்டுப் பரப்ப வேண்டும்.
ஒரு ஏக்கரில் நடவு செய்ய, 30 முதல் 40 கிலோ விதைக் கடலை தேவைப்படும். 10 லிட்டர் அமுதக் கரைசலில் ஒரு கிலோ சூடோமோனஸ் கலந்து, சுத்தப்படுத்திய விதைக் கடலையை அதில் முக்கி எடுத்து, நிழலில் நன்றாக உலர்த்தி விதைக்க வேண்டும். விதைக்கும்போது புட்டு போன்ற ஈரப்பதத்தில் மண் இருக்கவேண்டும். பாசனத்துக்கு வசதியாக சதுரப் பாத்திகளை எடுத்துக் கொண்டு, அதில் முக்கால் அடி இடைவெளியில், விரலால் குழி பறித்து, விதையைப் போட்டு, மேல் மண்ணால் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 7-ம் நாளில் துளிர்விட்டு முளைத்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டியது அவசியம். 18 மற்றும் 25-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.
32-ம் நாளில், செடி அரை அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். அந்த சமயத்தில், ஒவ்வொரு செடியின் தூர்ப்பகுதியிலும் கையளவு மண்புழு உரத்தைத் தூவி, மண் அணைக்க வேண்டும். இதற்கு, ஏக்கருக்கு 700 கிலோ வரை மண்புழு உரம் தேவைப்படும். 50 மற்றும் 60-ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு 15 பாக்கெட் (200 கிராம் பாக்கெட்) அசோஸ்பைரில்லத்தை பாசனத்தோடு கலந்துவிட வேண்டும். இது, காற்றில் உள்ள சத்துக்களை, செடிகளுக்கு எடுத்துக் கொடுக்கும். வேறு பராமரிப்புகள் எதுவும் செய்யத் தேவையில்லை.
இயற்கை வழி விவசாயத்தில், பூச்சி, நோய் தாக்குதல்கள் அதிகம் இருப்பதில்லை. ஒருவேளை, பூச்சித் தாக்குதல் இருந்தால்... மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 90-ம் நாளில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். ஈரம் வறண்டதும் ஒரு செடியை மட்டும் பறித்து, காயை உடைத்துப் பார்க்க வேண்டும். பக்குவப்பட்டிருந்தால், ஆரம்பித்துவிட வேண்டியதுதான் அறுவடையை!’
ஏக்கருக்கு 350 கிலோ அதிக மகசூல்!
சாகுபடிப் பாடம் முடித்த சண்முகம், ''நிலக்கடலை அறுவடை முடிஞ்சதும் கிடைக்கிற கடலைச் செடிகளை எங்க ஊர்ல மாடு வளர்க்குறவங்களுக்கு கொடுத்துட்டு, அதுக்குப் பதிலா அவுங்ககிட்ட தொழுவுரத்தை வாங்கிக்குவேன். அதனால தொழுவுரத்துக்குரிய செலவு எனக்கு கிடையாது. அறுவடை செய்த நிலக்கடலையைப் பருப்பாக்கி... கோவில்பட்டி சந்தையில் வித்துடுவேன்.
போன தடவை ரசாயன முறையில நிலக்கடலை போட்டப்ப... ரெண்டு ஏக்கர்ல 1,200 கிலோ மகசூல் கிடைச்சுது. ஏக்கருக்கு 600 கிலோ. இப்ப, இயற்கை வழி விவசாயத்துல, மூணு ஏக்கர்ல 2 ஆயிரத்து 900 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. ஏக்கருக்கு சராசரியா 960 கிலோ. கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கு
350 கிலோ கூடுதல் மகசூல். அதனால, இனி காலம் பூராவும் இயற்கை விவசாயம்தான்ங்கறதுல தீர்மானமா இருக்கேன்.
2 ஆயிரத்து 900 கிலோ நிலக்கடலைப் பருப்பை, கிலோ 46 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல... ஒரு லட்சத்து 33 ஆயிரத்து
400 ரூபாய் வருமானம். 45 ஆயிரம் ரூபாய் செலவு போக, 88 ஆயிரத்து 400 ரூபாய் லாபம்'' என்றார் சந்தோஷக் குரலில்!  
தொடர்புக்கு,
கருப்பசாமி (சண்முகம் மகன்),
செல்போன்: 94971-61138
என்.சுவாமிநாதன், படங்கள்: ரா. ராபின் மார்லர்
Source: pasumaivikatan 

1 comment:

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238