இயற்கையை நோக்கி செல்ல
செல்ல... இயற்கை நம்மை நோக்கி சிரித்து வரும். இதமாய் விளைச்சல் தரும். இன்னல் இல்லாத
விளைபொருளைத் தரும். ரசாயன உரம் உடனடி பலனைத் தந்தாலும், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்போதாவது விழித்துக்
கொண்டோமே... என நினைக்கும் விவசாயிகள், இயற்கை விவசாயத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். மதுரை டி.வாடிப்பட்டி,
சாணம்பட்டியைச் சேர்ந்த விவசாயி
கே.சிவசாமி, தனக்கு மட்டுமின்றி,
மற்ற விவசாயிகளுக்குத் தேவையான
மண்புழு உரத்தை தயாரித்து வருகிறார்.
அனுபவத்தில் இருந்து
பாடம் கற்றுக் கொண்டு, அதையே தனது லாபம்
தரும் தொழிலாக மாற்றியதை கூறுகிறார்.
பத்து ஏக்கர் நிலத்தில்
ஆரம்பத்தில் எல்லா வகையான விவசாயமும் செய்து வந்தேன். அப்போதெல்லாம் ரசாயன உரம் தான்
எனக்குத் தெரிந்தது. 2002ல் கதர் கிராமத் தொழில்கள்
ஆணையத்தின் மூலம் மண்புழு உரப்பண்ணை அமைக்க, ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். ரூ.ஒன்றரை லட்சம் மானியம் கிடைத்தது. தரையில் 80 சிமென்ட் தொட்டி அமைத்து மண்புழு உரத்தயாரிப்பை
துவங்கினேன்.