Tuesday

மாடி தோட்டம்

“எனக்குத் தோட்டம் வைப்பது ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடித்த விஷயத்தையே சமூகத்துக்கும் பயனுள்ள விஷயமாக அமைத்துக்கொள்ள நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மாடித் தோட்டம். ரசாயனப் பூச்சிக்கொல்லியோ, உரமோ இல்லாத அக்மார்க் இயற்கை தோட்டம் இது" என்கிறார் பாக்கியலக்ஷ்மி கோதண்டராமன்.
மதுரையை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீநாகலக்ஷ்மி அம்மாள் அறிவியல் கல்லூரியின் பொருளாளர்.
கிராமத்தில் இடத்துக்கா பஞ்சம்? பின் எதற்கு மாடித் தோட்டம் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாகத்
தன் வயதைச் சொல்கிறார் இவர். “எனக்கு 76 வயதாகிறது. என்னால் அதிகம் சுற்றிவந்து தோட்டம் அமைத்துப் பராமரிக்க முடியாது. அதனால்தான் இந்த மாடித் தோட்டத் திட்டம்.
கிட்டத்தட்ட 35 வருஷமா அமெரிக்காவில் இருந்தேன். அங்கே எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இடத்தைச் செப்பனிட்டுத் தோட்டம் அமைத்தேன். வீட்டுக்குள்ளேயும் விண்டோ கார்டன் அமைத்தேன். சுற்றியிருக்கிறவர்களுக்குப் பல செடிகளை வளர்த்துக்கொடுத்தேன். இந்தியா திரும்பியதும் என் தோட்ட ஆர்வம் அதிகரித்தது. அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.
இங்கே கீரை வாங்கினால் அதை எத்தனை முறை அலசினாலும் பூச்சிமருந்து வாடையோ, உரத்தின் வாடையோ வருவது போலவே தோன்றும். காய்கறிகளிலும் செயற்கையின் பாதிப்பு நிறையவே இருக்கிறது. இவற்றைச் சமைப்பதால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, உடல்நலப் பாதிப்பு ஏற்படும் என்று நிச்சயமாகத் தோன்றியது. அதனால் என் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, நானே வளர்ப்பது என முடிவு செய்தேன்” என்கிறார் பாக்கியலக்ஷ்மி.
தன் வீட்டின் மாடியில் கத்தரி, வெண்டை, அவரை, தக்காளி, முருங்கை தவிர பசலை, மணத்தக்காளி உள்ளிட்ட கீரை வகைகள், பலவகை மலர்கள், மாதுளை போன்றவற்றை வளர்த்துப் பராமரித்துவருகிறார். தினமும் குறைந்தது மூன்று முறையாவது மாடியேறி வந்து, இந்தச் செடிகளைப் பார்க்காவிட்டால் பாக்கியலக்ஷ்மிக்கு அன்றைய பொழுது நல்ல பொழுதாகவே தோன்றாதாம்.
“இப்போது இந்தச் செடிகள்தான் என் குழந்தைகள். இலை வாடினாலோ, பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலோ வேப்ப எண்ணெயும், புங்க எண்ணெயும் கலந்த மருந்தைத் தெளிப்பேன். ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம், மண்புழு உரம் ஆகியவைதான் இவற்றின் வளர்ச்சிக்கு ஆதாரம். இந்தச் செடிகள் என் மனதையும் உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழலுக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுத்தாதவை.
இங்கே சுற்றி இருக்கிற மக்களுக்கும் என்னால் முடிந்த வரையில் இயற்கை உரங்களின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறேன், ஏதோ என்னால் முடிந்தது” என்று அடக்கத்துடன் சொல்கிறார் பாக்கியலக்ஷ்மி.

Source: http://tamil.thehindu.com/ March 25, 2014

No comments: