Wednesday

தீவிரமுறை கால்நடை வளர்ப்பில் வேலிமசால் - ஓர் பார்வை

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இப்பயிர் நெட்டுக்குத்தாகவும், அடர்த்தியாகவும் வளரும் ஒரு பல்லாண்டு பயிராகும். இப்பயிர் வெட்ட வெட்ட மறுபடியும் தளிர்த்துச் சுவையான பசுந்தீவனத்தைக் கொடுக்கும். இப்பயிர் குதிரைமசாலைப் போல் குளிர்பிரதேச பயிராக இல்லாமல் எல்லாப் பிரதேசங்களிலும் பயிரிட ஏற்றது.
இறவையில் நன்கு வளரும். இப்பயிர், மானாவாரிக்கு ஓரளவு தான் உகந்தது. சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இப்பயிர் விதைத்த 60-65 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். இப்பயிரின் இளம் இலைகள் வெளிர்பச்சை நிறம் கொண்டதாகவும், முதிர்ந்த இலைகள் கரும் பச்சை நிறம் கொண்டதாகவும் இருக்கும். மாடுகள், ஆடுகள், கோழி மற்றும் வான்கோழிகள் போன்றவற்றிற்கு இவற்றைத் தீவனமாகக் கொடுக்கலாம்.
சாகுபடிக் குறிப்புகள்:
வகை - பல்லாண்டு பயறுவகைத் தீவனம்
பருவம் - இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்
மண் - எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது முன்செய் நேர்த்தி - 2-3 உழவுகள் செய்து பண்படுத்தப்பட்ட நிலத்தில் 50 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
நடவுமுறை - பார்களின் அடிப்புறத்தில் கோடு கிழித்து தொடர்ச்சியாக விதைக்கவும் அல்லது சதுர வடிவப் பாத்திகள் அமைத்து 50 செ.மீ இடைவெளியில் கோடு கிழித்து தொடர்ச்சியாக விதைக்கலாம்.
விதையளவு (ஏக்கருக்கு) - 5 கிலோ
அடியுரம் (ஏக்கருக்கு) - தொழுஉரம் - 10 டன் , யூரியா -40 கிலோ, சூப்பர் பாஸ்பேட் - 80 கிலோ, பொட்டாஷ் - 20 கிலோ
மேலுரம் - ஒவ்வொரு அறுவடைக்குப்பின்னும் ஏக்கருக்கு 30 கிலோ யூரியா
களை நிர்வாகம் - விதைத்த 25 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும் போது
நீர்ப்பாசனம் - விதைத்தவுடனும், விதைத்த 3 நாட்களுக்குப் பிறகும், மண் மற்றும் மழை அளவைப் பொறுத்து 8-10 நாட்களுக்கு ஒருமுறை
பயிர்ப்பாதுகாப்பு - பொதுவாக தேவையில்லை
அறுவடை - முதல் அறுவடை 60 நாட்களில் பின்பு 40-45 நாட்களுக்கு ஒருமுறை
பசுந்தீவன மகசூல் - 50 டன் (6-7 அறுவடைகளில்) (ஏக்கருக்கு)
விதை நேர்த்தி : விதைகளின் முளைப்புத்திறனை விரைவுபடுத்த கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் ஆறவிட்டு அதில் வேலிமசால் விதைகளைப் போட வேண்டும். பின்பு 3-4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து விட்டு விதைகளை நிழலில் உலர வைத்து விதைத்தால் நல்ல முளைப்புத்திறன் 3 அல்லது 4 நாட்களில் கிடைக்கும். விதைநேர்த்தி செய்யாமல் விதைக்கும் போது முளைப்பு பெறுவதற்கு 7-8 நாட்கள்.
விதை உற்பத்தி : வேலிமசால் விதைகளுக்குத் தற்போது சந்தையில் நல்ல தேவையிருப்பின், விதை உற்பத்திக்காகவும், இதனைப் பயிரிடலாம். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வேலிமசாலில் அதிக விதை பிடிக்கும். அப்போது 100-120 நாட்கள் வரை வளர விட்டு விதைகளைச் சேகரிக்கலாம். ஒரு ஏக்கர் பரப்பில் 100 கிலோ வரை விதைகள் சேகரிக்க இயலும். விதைகளை ஒரு வருடம் வரை முளைப்புத் திறன் பாதிக்காமல் சேமித்து வைத்துத் தற்போதைய சந்தை விலைப்படி ரூபாய் 450 -500 கி.கி என்று விற்பனை செய்யலாம்.
சிறப்பு அம்சங்களும், பயன்பாடுகளும்: தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும், தட்பவெப்ப நிலைகளிலும் செழித்து வளரக்கூடியது. கறவை மாடுகள், செம்மறியாடுகள், முயல், வான்கோழி, வாத்து, கோழி போன்ற அனைத்து கால்நடைகளும் விரும்பி உண்ணும். முயல்களுக்கு வேலிமசாலை மட்டுமே தனித் தீவனமாக கொடுக்கலாம். கன்றுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளுக்கும் கொடுக்கலாம். அதிக அளவில் உட்கொண்டாலும் வயிற்றுப்போக்கோ அல்லது வயிறு உப்புதலோ ஏற்படாது. இதில் 22-24 சதவிகிதம் புரதம் உள்ளது.
நாள் ஒன்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய தீவனத்தின் அளவு
கறவைமாடுகள் - 10 கிலோ, கன்றுகள் - 5 கிலோ, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் - 2 கிலோ, ஆட்டுக்குட்டிகள் - 0.5 - 1 கிலோ, முயல் - 500 கிராம்.
வான்கோழிகள், வாத்துக்கள் போன்றவைகளுக்கு இத்தீவனத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பதன் மூலம் 20 சதவிகிதம் தீவனச்செலவைக் குறைக்கலாம். ஆகையால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இறவையில் வேலிமசால் பயிரிட்டு, கால்நடைகளுக்கு அளித்தல் தீவனச் செலவைக் குறைத்து அதிக இலாபம் பெறலாம்.
மூ.சுதா, ம.பழனிசாமி மற்றும் க.கௌதம்
வேளாண் அறிவியல் நிலையம்,

குன்றக்குடி.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19788&ncat=7

3 comments:

Unknown said...

45 natkaluku orumurai aruvadai seium velimasalai yeppadi daily unavaga kuduka mudium...

velan said...

good job brother pls send ur ph number mr.nanzil
i am velan chennai 9841581127

Unknown said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238