Sunday

குப்பை கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும்...புதிய திட்டம்!நகராட்சி வருவாய் ஈட்டும் முயற்சி வெற்றி பெறுமா?

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்குள் சேகரமாகும் குப்பை கழிவுகளை பயன்படுத்தி, மண்புழு வளர்த்து அதிலிருந்து உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு உர விற்பனை செய்து, பல லட்சங்களை வருவாயாக ஈட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள், பாலக்காடு ரோட்டிலுள்ள குப்பை மையத்தில் கொட்டப்படுகின்றன. அங்கு கொட்டப்படும் குப்பையை பல்வேறு நிலைகளில் பிரித்தெடுக்கப்படும். அதிலிருந்து வெளியேறும் கழிவை கொண்டு மண்புழு வளர்க்க திட்டமிட்டுள்ளனர். மண்புழுவிலிருந்து வெளியேறும் கழிவையே உரம் என்று சொல்லப்படுகிறது.
மண்புழு விவசாயிகளின் நண்பன். ஏனென்றால் விவசாய விளை நிலங்களில் வாழும் மண்புழுக்கள், தாவரத்துக்கும், மண்ணுக்கும் இடையே; இடைவெளி ஏற்படுத்தி தாவரத்துக்கு நல்ல சுவாசத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இதனால் விவசாயிக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். அதனால் விவசாயிகள் எப்போதும் மண்புழுவை விரும்புவர்.பொள்ளாச்சி சுற்றுப்புறப்பகுதிகள் அனைத்தும் விவசாய விளை நிலங்களாக உள்ளது. பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போதைய விவசாயத்துக்கு உரம் மிக அவசியம். ஒவ்வொரு விவசாயியும் விளைநிலங்களுக்கு தேவையான உரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
அதிக விலை கொடுத்தாலும் இயற்கை உரம் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக ரசாயன உரங்களே கிடைக்கிறது. இயற்கை உரம் உற்பத்தி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இல்லை. அதனால் நகராட்சி நிர்வாகம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரத்தை உற்பத்தி செய்து கொடுக்க மண்புழு உரம் உற்பத்தி செய்யும் மையத்தை துவக்க உள்ளனர்.மண்புழு உரம் உற்பத்தி செய்வதற்கான இடஅமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தற்போது உள்ள ஆடுஅறுவை மைய வளாகத்தில் உள்ளது. அந்த இடத்தில் எளிமையாக குறைந்த பணியாளர்களை கொண்டு உரம் தயாரிக்கலாம் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள். இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டனர். அதன் பின்பு விரிவான திட்ட அறிக்கை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள னர். திட்ட அனுமதி கிடைத்தவுடன் அனைத்துப்பணிகளும் வேகமாக துவங்கப்படும்.காய்ந்த சாணம், மக்கிய இலை, குப்பை உள்ளிட்ட மக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, தண்ணீரை கொண்டு ஈரப்பதம் ஏற்படுத்தி அதில் மண்புழுக்களை வளர்க்கலாம். மண்புழுக்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி பல்கிப்பெருகும். மண்புழு குப்பை, சாணம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு வெளியேற்றப்படும் கழிவு தான் உரமாக மாறுகிறது. இதை விற்பனை செய்ய நகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள லாம்பிடோ மாருதி என்றழைக்கப்படும் மண்புழு அதிக நீளம் கொண்டது. இவை வயல் வெளிகளில் காணப்படும், இருட்டான இடத்தை தேடிச்செல்லும், இரவு நேரத்தில் மட்டுமே உணவு அருந்தும். யூரில்லாஸ்யூஜெனியே, ஐசான்யா பெட்டிடா என்றுஅழைக்கப்படும் இந்த இரண்டு வகை மண்புழுக்கள் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. உரம் தயாரிப்புக்கு ஏற்றது.இவை அதிக தடிமனையும், குறைந்த நீளத்தையும் கொண்டது. இவை வேகமாக உணவை உட்கொண்டு, அதிக அளவிலான கழிவை வெளியேற்றும். அதனால் இந்த ரகத்தை வளர்க்கவும், பராமரிக்கவும் பொள்ளாச்சி நகராட்சி முடிவு செய்துள்ளது.இது வரை யூரியா, பொட்டாஷ் என்ற பெயரில் ரசாயன உரங்களை பயன்படுத்தி வந்த பொள்ளாச்சி விவசாயிகளுக்கு, சிறிதளவு கூட ரசாயனம் இல்லாமல் தெளிவான இயற்கை உரத்தை பெறப்போகின்றனர். அதனால் விவசாயிகள் மத்தியிலும் நகராட்சியின் புதிய திட்டத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=541137&Print=1

No comments: