Wednesday

சப்போட்டா சாகுபடி செய்யுங்கள்

இன்றைய பசுமையான மரம் நாளைய பசுமையான எதிர்காலம்

வீட்டுத் தோட்டத்தில் நடும் மரம் அலங்காரமாகவும், இலைகள் கொட்டாமலும் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும் மரமாகவும், அடிக்கடி எரு, ரசாயன உரம் மற்றும் விஷப்பூச்சி மருந்துகள் உபயோகிக்கும் தேவையில்லாத மரமாகவும், கடும் கோடையில் நிழல் கொடுத்து வெயிலின் கொடுமையை குறைத்து குளிர்ச்சியின் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் மரமாகவும்
இருந்தால் அது வரவேற்கத்தக்கது. இது போன்ற சிறப்பு இயல்புகளைக் கொண்டதும் மற்றும் சுவைமிக்க பழங்களைத் தருவதுமான மரம் சப்போட்டாவாகும்.
இந்த மரம் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது. நல்ல வடிகால் வசதி கொண்ட மண் இதற்கு மிகவும் ஏற்றது. மண்ணிற்கு கீழ் கடினமான பாறைகள் சுமார் ஆறு அடி ஆழம் வரை இல்லாது இருப்பின் மிகவும் நல்லது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலம் ஏற்றது. ஓரளவு உப்புத்தன்மை கொண்ட பாசன நீர் ஆகியவற்றை தாங்கி வளரும் தன்மை பெற்றது. சப்போட்டா மரத்தை வீட்டுத் தோட்டத்தில் காம்பவுண்டு சுவரிலிருந்து நான்கு அடி தள்ளி நடுவது நல்லது. சேலத்தில் ஒரு வீட்டில் நுழைவு வாயிலில் அலங்காரமாக நின்று நம்மை வரவேற்கிறது. மரம் நல்ல நிழல் தருவதால் வீட்டில் உபயோகிக்கும் காருக்கு ஷெட் கூடக் கட்டவில்லை. மரங்களில் செழித்து குலுங்கி காய்கள் காட்சியளித்து நமக்கு பரவசத்தை உண்டாக்குகின்றது. சாதாரண சப்போட்டா காய்களை விட உருவத்தில் ஐந்து மடங்கு பெரியதாக உள்ளன. இந்த வீட்டு சிறியவர் மரத்தை வெட்டலாம் என்றார். பெரியவர் மரத்தை வெட்ட சம்மதிக்கவில்லை. புதிய வீட்டை சற்றே தள்ளி கட்டினாராம். இந்த மரத்தின் வயது 35 வருடங்கள்.
மரம் தொடர்ந்து பல வருடங்கள் வளர்ந்து வருகின்றது. சப்போட்டா மரம் வருடம் முழுவதும் காய்க்கின்றது. பீக் சீசன் என்று சொல்லப்படும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் 300 காய்களையும், சீசன் சுமாராக இருக்கும். அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 200 காய்களையும் மகசூலாக தருகின்றது. விருப்ப முள்ளவர்கள் சப்போட்டாவை சாகுபடி செய்து பயன் அடையலாம். கன்றுகள் பெரியகுளத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும். சிறந்த கன்றுகளை வாங்கி நடலாம். கன்று கிடைத்து நடும்போது ஒட்டு கட்டப்பட்ட பாகம் தரைக்கு மேல் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
சப்போட்டா ரகங்கள்: சப்போட்டாவில் சுமார் 41 ரகங்கள் உள்ளன. முக்கியமான ரகம் ""களிபதி'' பி.கே.எம். (பெரியகுளம்) ரகத்தை விட சிறந்தது.
சப்போட்டா ஒட்டுக் கன்றுகள்: சப்போட்டா ஒட்டுக் கன்றுகளை 25 அடி இடைவெளியில் மழை சீசனில் நடலாம். சப்போட்டா சாகுபடி செய்ய விரும்புபவர்கள் தோட்டக்கலை நிபுணர்களை அணுகி அவர்களின் ஆலோசனையின்படி ஒட்டுக்கன்றுகளை வாங்கி நடலாம்.
விவசாயிகள் என்.ஆனந்த் (ஜி.நாகராஜ் நர்சரி கார்டன், 83 ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் - 635 601, கைப்பேசி எண் 94432 74796) அணுகி சப்போட்டா ஒட்டுக் கன்றுகளை வாங்கி வியாபார நினைப்போடு சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம். ஒரு ஏக்கரில் 69 சப்போட்டா கன்றுகளை நடலாம். சப்போட்டா பழம் நன்கு வளர்ச்சி பெற பத்து மாதங்கள் ஆகின்றன. சப்போட்டா பழங்களில் இருந்து சப்போட்டா ஜூஸ் தயார் செய்யலாம். இதற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் உள்ளது. விவசாயிகள் நிபுணர் ஆனந்த் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் கேட்டு சப்போட்டா சாகுபடி செய்து பயன் அடையுங்கள்.
சப்போட்டாவின் அருமையை தெரியாதவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள். கோடாளிகளை உபயோகித்து பசுமையான சப்போட்டா மரங்களை வெட்டித் தள்ளி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. சுவையான பழங்களை நமக்கு அள்ளித்தர இருக்கும். வெய்யிலின் கொடுமையை குறைத்து குளிர்ச்சியான சூழ்நிலையைக் கொடுக்கும். அமுதசுரபியான சப்போட்டாவை பாதுகாப்பது நமது விவசாயிகளது தலையாய கடமையாகும்.

- எஸ்.எஸ்.நாகராஜன்.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19691&ncat=7

No comments: